Published:Updated:

`பெரியகுளத்தில் 60, தேனியில் 42..!' -அரசுப் பள்ளிக் கட்டடங்களின் நிலையால் கொதிக்கும் வாக்காளர்கள்

மோசமான நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்களில் பெரும்பாலானவை, நடக்க இருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களாக உள்ளன.

இடிந்த அரசுப் பள்ளிக் கட்டடம்
இடிந்த அரசுப் பள்ளிக் கட்டடம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பொன்னம்படுகை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பழைய சத்துணவுக் கட்டடம் இடிந்து விழுந்ததில் செல்வக்குமார், ஈஸ்வரன் என்ற இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

இடிந்த அரசுப் பள்ளிக் கட்டடம்
இடிந்த அரசுப் பள்ளிக் கட்டடம்

இதில் செல்வக்குமார் என்ற எட்டாம் வகுப்பு மாணவனின் வலது கை எலும்பு நொறுங்கியதால், கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவனுக்கு உதவித்தொகை கொடுக்கப்பட்டது.

`கட்டடம் கட்ட ரூ.450; வினாத்தாளுக்கு ரூ.75..!’-சர்ச்சையில் சிக்கிய தேனி அரசுப்பள்ளி

அரசுப் பள்ளியில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவ், ``மாவட்டம் முழுவதும் உள்ள பழைய அரசுப் பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டிருக்கிறேன்” என்றார்.

அதன்படி, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்டம் முழுவதிலும் உள்ள 530 அரசுப் பள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டன. தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் என தேனி மாவட்டத்தில் மூன்று கல்வி மாவட்டங்கள் உள்ளன. அதில், பெரியகுளத்தில் 60 பள்ளிகளும் உத்தமபாளையத்தில் 30 பள்ளிகளும் தேனியில் 42 பள்ளிகளும் மோசமான நிலையில் உள்ளதாகக் கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்.

படுகாயமடைந்த மாணவன்
படுகாயமடைந்த மாணவன்

இந்தத் தகவலைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் கலெக்டர். காரணம், மோசமான நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்களில் பெரும்பாலானவை, நடக்க இருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களாக உள்ளன. அரசுப்பள்ளி என அலட்சியமாக இருந்த அதிகாரிகள், மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், தேர்தலில் வாக்களிக்க வரும் வாக்காளர்களையும் ஆபத்தில் தள்ள இருப்பது, தேனி மாவட்ட சமூக ஆர்வலர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் மழை; பயன்பாடற்ற சத்துணவுக் கட்டடம் - தேனி பள்ளி மாணவர்களைப் பதறவைத்த விபத்து!

இது தொடர்பாக விளக்கம் பெற கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவை தொடர்புகொண்டோம். ``வாக்குச்சாவடி மையங்களாக உள்ள பள்ளிகளை நான் நேரில் ஆய்வு செய்திருக்கிறேன். மிகவும் மோசமான நிலையில், உடனே கட்டடத்தை இடித்து கட்ட வேண்டிய நிலையில் எந்தக் கட்டடமும் இல்லை. அதனால் ஒன்றும் ஆகாது” என்றார் இயல்பாக.