கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வருகின்ற 18-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது கூவாகம் சித்திரைத் திருவிழா. மே மாதம் 2-ம் தேதி திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியும், 3-ம் தேதி தேரோட்டமும் நடைபெறவிருக்கிறது.

எனவே, இந்தத் திருவிழாவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து நேற்று கோயில் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் ஜடாவத். அப்போது கோயில் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ய முயன்ற அவர், தனது ஷூவைக் கழட்டிவிட்டு தனது உதவியாளரை அழைத்து எடுத்துச் செல்லுமாறு கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அவருடைய ஷூவை அவரது உதவியாளர் எடுத்துச் சென்றார்.

இந்தச் சம்பவம், உடன் சென்றவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதன் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.