Published:Updated:

`என் மனதுக்குள் ஒரு வலி இருந்துகொண்டேயிருக்கிறது!’ - குமாரசாமி உருக்கம்

நான் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தேன். ஆனால், அவர்கள் ஏன் என்னை குற்றம்சாட்டினார்கள் என்று எனக்கு புரியவில்லை.

குமாரசாமி
குமாரசாமி ( ANI )

கர்நாடக சட்டப்பேரவைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஆட்சி அமைக்க போதிய எம்.எல்.ஏக்கள் இல்லாதிருந்த நிலையில், நிபந்தனையுடன் கூட்டணி அமைத்தது ம.ஜ.த. அதன்படி கர்நாடக முதல்வரானார் குமாரசாமி. 14 மாதங்கள் ஆட்சியை சுமுகமாக நடக்க, அதிருப்தி எம்.எல்.ஏக்களால் கர்நாடக காங்கிரஸில் குழப்பம் நிலவியது. 14 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா, கர்நாடக அரசியலை திருப்பிப் போட்டது. தொடர்ந்து நடந்த தகுதி நீக்கம், பா.ஜ.க ஆட்சி அமைக்க வழிவகுத்தது. ஆட்சி அமைக்க பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் இல்லாததால் ஆட்சிக் கட்டிலிருந்து கீழிறக்கப்பட்டார் குமாரசாமி.

குமாரசாமி முன்னாள் முதல்வர்
குமாரசாமி முன்னாள் முதல்வர்

`நான் அரசியலிலிருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருகிறேன்; என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள்’ என்று விரக்தியில் பேசிவருகிறார். `எனக்கு எந்தப் பதவியும், அதிகாரமும் தேவையில்லை; விரைவில் கர்நாடகாவில் தேர்தல் வர இருக்கிறது’ என்று நேற்று பேசினார். இந்நிலையில் இன்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தவர், ``முதல்வர் அலுவலகத்திலிருந்து வெளியேறிய பிறகு நான் சந்தோஷமான மனிதனாக இருக்கிறேன். கடந்த 14 மாதங்களும் நான் மாநிலத்தின் வளர்ச்சிக்காகத்தான் பணியாற்றினேன். என் மனதுக்குள் சின்ன வலியொன்று இருந்துகொண்டேயிருக்கிறது. அது `என்னுடைய பணியை யாரும் பாராட்டவில்லை’ என்பதுதான். நான் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் முழுச் சுதந்திரம் கொடுத்தேன். ஆனால், அவர்கள் ஏன் என்னை குற்றம்சாட்டினார்கள் என்று எனக்கு புரியவில்லை.

14 மாதங்களும் இந்த எம்.எல்.ஏக்கள் மற்றும் கூட்டணிக்கட்சிக்காக நான் ஒரு அடிமையைப்போல் பணியாற்றினேன். அந்த எம்.எல்.ஏக்கள் எந்தவொரு அப்பாயின்மென்ட் இல்லாமல் என்னைச் சந்திப்பதற்கான வாய்ப்பு கொடுத்தேன். தொகுதியின் வளர்ச்சி குறித்து அவர்கள் முன் வைக்கும் கோரிக்கைகள் மீது விரைவாகவே நடவடிக்கை எடுத்தேன். கடந்த ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ் செய்யாததை இந்த 14 மாதங்களில் நான் செய்துள்ளேன்.

குமாரசாமி
குமாரசாமி
ANI

தனிப்பட்ட முறையில் எனக்கு அரசியலில் தொடர ஆர்வமில்லை; நான் சார்ந்துள்ள கட்சி நிர்வாகிகளால்தான், அரசியலில் தொடர்கிறேன். சாதி அரசியல், பணம் இவைதான் அரசியலாக இருக்கிறது. இக்காலக்கட்டத்தில் நல்லவர்களுக்கு ஏற்ற சரியான அரசியல் சூழல் இங்கில்லை”என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.