Published:Updated:

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு `ஹாட்ரிக் ஹிட்' பரிசளித்த தூண்கள் யார்?!

ஹாட்ரிக் வெற்றியைப் பதித்து மீண்டும் டெல்லி சட்டமன்றத்தைக் கைப்பற்றியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களாக இருந்து, தற்போது தேர்தலில் வெற்றிபெற்று டெல்லி மாநிலத்தின் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர் முக்கியத் தலைவர்கள். அவர்களைப் பற்றிய தொகுப்பு இது.

1
மணிஷ் சிசோடியா

மணிஷ் சிசோடியா

மோடி - அமித் ஷா காம்போவைப் போல், டெல்லி மாநில அரசியலில் அரவிந்த் கெஜ்ரிவால் - மணிஷ் சிசோடியா காம்போ வெகு பிரபலம். டெல்லியின் துணை முதல்வராகப் பதவி வகித்த மணிஷ் சிசோடியா, பத்பர்கஞ்ச் தொகுதியில் கடும் போட்டிக்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளார். 2,000 வாக்குகள் வித்தியாசத்தில், பி.ஜே.பி வேட்பாளர் ரவிந்தர் சிங் நேகியைத் தோற்கடித்த மணிஷ் சிசோடியா, 2015-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர். `ஆட்சியில் இருந்து, மக்களுக்குச் சிறந்த கல்வியை அளிப்பதே உண்மையான தேசப்பற்று' என்று தனது வெற்றியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள மணிஷ் சிசோடியா, மீண்டும் டெல்லியின் துணை முதல்வராக நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

2
அதிஷி மார்லெனா

அதிஷி மார்லெனா

`ஐ.ஆர்.எஸ் பணி ராஜினாமா; எதிர்க்கட்சிகளுக்குப் பதிலடி!'- டெல்லியில் அசத்தும் சுனிதா கெஜ்ரிவால்

நாடாளுமன்றத் தேர்தலில் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீருக்கு எதிராகப் போட்டியிட்டவர், ஆம் ஆத்மி கட்சியின் கல்வித்துறை குறித்த ஆலோசகர் போன்றவற்றால் டெல்லி அரசியலில் பரிச்சயமான முகம் அதிஷி. நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்து, டெபாசிட் இழந்த போதும் துவண்டு போகாத அதிஷி மார்லெனா தற்போது 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். டெல்லியின் கல்வித்துறை அமைச்சருக்கு ஆலோசகராக இருந்ததால், இந்த முறை கல்வித்துறை அதிஷிக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3
அமானத்துல்லாஹ் கான்

அமானத்துல்லாஹ் கான்

ஆம் ஆத்மி கட்சியின் முஸ்லிம் முகமாகக் கருதப்படுவர் அமானத்துல்லாஹ் கான். ஏற்கெனவே டெல்லியின் ஓக்லா தொகுதி எம்.எல்.ஏவாகப் பதவிவகித்தவர். இவரது தொகுதியில் தான் தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான ஷஹீன்பாக் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதற்காக பி.ஜே.பியினரால் கடுமையாகக் குறிவைக்கப்பட்டார் அமானத்துல்லாஹ். தற்போதைய தேர்தலில், ஏறத்தாழ 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். டெல்லி தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நபராகப் பாராட்டப்படுகிறார் அமானத்துல்லாஹ் கான்.

4
ராகவ் சத்தா

ராகவ் சத்தா

அதிஷியைப் போல, ராகவ் சத்தாவும் டெல்லி சட்டமன்றத்துக்கு ஆலோசகராக இருந்தவர். இவருக்கும் இதுவே முதல் தேர்தல் வெற்றி. 31 வயதான ராகவ் சத்தா, ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளராகப் பதவி வகித்து வருகிறார். ராஜிந்தர் நகர் தொகுதியில் ஏறத்தாழ 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இவர், அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் நிதியமைச்சராக நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

5
கோபால் ராய்

கோபால் ராய்

ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல், அதனோடு பயணிப்பவர் கோபால் ராய். சிறந்த பேச்சாளராகக் கருதப்படும் இவர், ஆம் ஆத்மி கட்சியின் பூர்வாஞ்சல் மக்களுக்கான முகமாக முன்னிறுத்தப்படுபவர். டெல்லி அமைச்சரவையின் ஊரக வளர்ச்சி, பொது நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை முதலானவற்றுக்குப் பொறுப்பு வகித்த கோபால் ராய் பாபர்பூர் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

6
சத்யேந்திரா ஜெயின்

சத்யேந்திரா ஜெயின்

ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பிருந்தே, ஜன் லோக்பால் அமைப்பில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பணியாற்றியவர் சத்யேந்திரா ஜெயின். கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகளுக்குப் பொறுப்பு வகித்தவர். ஆம் ஆத்மி கட்சியின் பணிகளில் அதிகம் பாராட்டப்பட்ட `மொஹல்லா கிளினிக்' இவரது துறையின் கீழ் தொடங்கப்பட்டது. வடக்கு டெல்லியின் ஷாகுர் பஸ்தி தொகுதியில் ஏறத்தாழ 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார் சத்யேந்திரா ஜெயின்.

7
சோம்நாத் பாரதி

சோம்நாத் பாரதி

`நலத்திட்டங்கள்; சுயமதிப்பீடு; அதிரடி கள ஆய்வு!' -டெல்லி அரியணையை மீண்டும் கைப்பற்றிய ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சியின் சர்ச்சைக்குரிய முகம் சோம்நாத் பாரதி. வழக்கறிஞராக இருந்து அரசியலுக்கு நுழைந்த சோம்நாத் பாரதி, 2015-ம் ஆண்டு டெல்லியில் வசித்த ஆப்பிரிக்க நாட்டினர் மீது ரெய்டு நடத்தி பிரபலமானவர். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் நேரலையில், ஊடகவியலாளரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக, இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனினும், மக்களின் ஆதரவு இருப்பதால் இவரைத் தேர்தலில் நிறுத்தியது ஆம் ஆத்மி கட்சி. தற்போது, இவரும் தனது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தலை வென்றுள்ள ஆம் ஆத்மி கட்சி அமைக்கப் போகும் அமைச்சரவையில், மேலே குறிப்பிடப்பட்டுள்ளவர்களுள் பெரும்பாலானோருக்கு இடம் கிடைக்கும் எனத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு