Published:Updated:

ஜெ.அப்போலோ நாள்களும்... பத்தாயிரம் பாத்திரங்களும்: உள்ளாட்சித் தேர்தல் உள்ளடி!

உள்ளாட்சித் தேர்தலுக்காக அ.தி.மு.க வசூலித்த 34.68 கோடி ரூபாய்க்கான ஆவணம், விகடனுக்கு பிரத்யேகமாகக் கிடைத்திருக்கிறது. இதுதான் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்குக் காரணமா?

வாக்குப்பதிவு இயந்திரம்
வாக்குப்பதிவு இயந்திரம் ( Photo: Vikatan )

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு இழுத்தடிப்பதற்கும் அ.தி.மு.க-வின் 34,68,71,000 ரூபாய்க்கும் தொடர்பு உண்டு. இது என்ன கணக்கு? விஷயத்துக்குப் போகும் முன்பு, முன் கதையைப் பார்ப்போம்.

உள்ளாட்சித் தேர்தலில் முன்பு ஜெயலலிதா வாக்களித்த போது...
உள்ளாட்சித் தேர்தலில் முன்பு ஜெயலலிதா வாக்களித்த போது...
விகடன்

2016 செப்டம்பரில் ஒரு நாள். சென்னை பாரிமுனையில் இருக்கும் பிரபல பாத்திரக் கடையில் 10 ஆயிரம் டிபன் பாக்ஸ்களை ஆர்டர் கொடுக்கிறார், லோக்கல் அரசியல்வாதி ஒருவர். அடுத்தடுத்த நாள்களில் பாரிமுனையைச் சுற்றியிருக்கும் பாத்திரக்கடைகளில் ஆயிரக்கணக்கில் விதவிதமான பாத்திரங்களுக்கு ஆர்டர்கள் குவிகின்றன. இப்படி மொத்தமாக ஆர்டர்கள் அளித்தவர்கள் பலரும் அரசியல் புள்ளிகள்தான். மொத்த விற்பனை செய்யும் பாத்திர வியாபாரிகளுக்கு ஆச்சர்யம். அதற்கான விடை சில நாள்களிலேயே அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.

உடல் நலக்குறைவால் 2016 செப்டம்பர் 21-ம் தேதி அப்போலோவில் அட்மிட் ஆகிறார் ஜெயலலிதா. செப்டம்பர் 25-ம் தேதி அறிவிப்பு ஒன்று வெளியாகிறது. `உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17,19 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும்' என்கிற அறிவிப்பை வெளியிடுகிறது மாநிலத் தேர்தல் ஆணையம். முதல்வர் ஜெயலலிதா உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், இப்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் திட்டமிட்டார்கள்.

அப்போலோவில் இருந்த போது ஜெயலலிதா வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்...
அப்போலோவில் இருந்த போது ஜெயலலிதா வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்...

தேர்தல் தேதியை அறிவிக்க முடிவு செய்தபோதே, தங்கள் கட்சி வேட்பாளர்கள் பட்டியலையும் முன்கூட்டியே தயாரித்துவிட்டது அ.தி.மு.க. எதிர்க்கட்சிகளுக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் வேட்பாளர் தேர்வு நடைமுறையைத் தொடங்க வேண்டும். அதற்குக்கூட வாய்ப்பு அளிக்காமல், தேர்தல் தேதியை அறிவித்து காய்களை நகர்த்தியது அ.தி.மு.க அரசு.

தேர்தல் தேதி அறிவிப்புக்கு அடுத்த நாளே வேட்பாளர் பட்டியலை வெளியிட ஆரம்பித்தது அ.தி.மு.க. அப்போலோவில் ஜெயலலிதா இருந்தபோதே, அவரின் பெயரில் அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல்கள் வெளியாக ஆரம்பித்தன. `காவிரிக்காக அதிகாரிகளோடு அப்போலோவில் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்' என்றெல்லாம் அன்றைக்குச் செய்திகள் வந்தன.

சசிகலா
சசிகலா
விகடன்

அவை அத்தனையும் பொய் என்பது பின்னாளில் தெரியவந்தது. அதுபோலத்தான் உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டதும். அதாவது, ஜெயலலிதா பெயரைப் பயன்படுத்தி சசிகலா தரப்பினர் அந்த வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டார்கள்.

அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே தாங்கள்தான் வேட்பாளர்கள் என்பது பலருக்கு முன்கூட்டியே உறுதியாகத் தெரிந்துவிட்டது. அதனால்தான், பாரிமுனை ஏரியாவில் ஆர்டர்கள் குவிந்ததற்குக் காரணம். அந்தப் பாத்திரங்கள் எல்லாம் வாக்காளர்களுக்கு லஞ்சமாகக் கொடுப்பதற்காக ஆர்டர் செய்தார்கள்.

வாக்குப் பதிவு இயந்திரம்
வாக்குப் பதிவு இயந்திரம்
விகடன்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டால் இலவசப் பொருள்களை எடுத்து வருவதும் அவற்றை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதும் சிரமம். அதனால்தான் ஆர்டர்கள் முன்கூட்டியே தரப்பட்டன.

`உள்ளாட்சி இடங்களில் பழங்குடியினருக்கு சுழற்சி முறையில் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை' என தி.மு.க வழக்குப் போட்டது. அதேநேரம், தேர்தல் அறிவிப்பு முறையாகச் செய்யப்படவில்லை. கால அவகாசம் அளிக்கவில்லை என்கிற வாதமும் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டது.

ஜெயலலிதா உடல்
ஜெயலலிதா உடல்
விகடன்

இதனால், அக்டோபர் 17,19 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த உள்ளாட்சித் தேர்தலை ரத்துசெய்தது சென்னை உயர் நீதிமன்றம். வேட்புமனு தாக்கல் வைபவம் எல்லாம் முடிந்த நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதன்பிறகு, ஜெயலலிதா மரணம் நடந்துவிட்டது. முதல்வர் நாற்காலியில் அமர முயன்றார் சசிகலா. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கிவிட்டு, சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறைக்குப் போனார் சசிகலா. அதன்பிறகு, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்தது எடப்பாடி ஆட்சி. ஜெயலலிதா அப்போலோவில் இருந்தபோது, அவசர அவசரமாகத் தேர்தலை நடத்த ஆர்வம் காட்டிய அ.தி.மு.க, அதன்பிறகு தேர்தலை நடத்த ஆர்வம் காட்டவில்லை.

எடப்பாடி வாக்களித்த போது
எடப்பாடி வாக்களித்த போது
விகடன்

தேர்தல் நடத்தாமல் இருக்க நீதிமன்றங்களில் சால்ஜாப்புகளைச் சொல்லிக்கொண்டிருந்தது. தேர்தலை நடத்தாத எடப்பாடி ஆட்சியை ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் குட்டியது. அந்த அவமானத்தைத் துடைத்துவிட்டு, தொடர்ந்து நீதிமன்றத்தில் தேர்தலை நடத்த கால அவகாசம் கேட்டபடியே நாள்களை நகர்த்தினார்கள்.

எடப்பாடி ஆட்சி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தியதற்குக் காரணங்கள் உண்டு. அவை...

1. நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டசபை இடைததேர்தலிலும் அ.தி.மு.க மோசமாகத் தோற்றது. கூவத்தூர் கூத்து தொடங்கி பி.ஜே.பி-யிடம் அடிமைப்பட்டுக் கிடப்பது வரை கடும் விமர்சனங்களைத் தாங்கி நிற்கும் அ.தி.மு.க-வுக்கு உள்ளாட்சித் தேர்தலில் பலத்த அடி கிடைக்கலாம்.

2. உள்ளாட்சி அமைப்புகளில் எதிர்க்கட்சிகள் அதிக அளவில் அமர்ந்தால், ஆளும் அ.தி.மு.க-வுக்கு சிக்கல் ஏற்படலாம்.

பன்னீர்செல்வம் வாக்களித்த போது..
பன்னீர்செல்வம் வாக்களித்த போது..
விகடன்

3. உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் பொறுப்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையிடம்தான் உள்ளது. அந்தத் துறையின் மூலம்தான் உள்ளாட்சிகளுக்கு பெரும்பாலான நிதி செல்கிறது. இதுதவிர மற்ற துறைகள், மத்திய அரசின் நிதி ஆகியவையும் போகும். அப்படிப் போகும் நிதியில் செய்யப்படும் திட்டங்களில், உள்ளாட்சிப் பிரதிநிதிகளான கவுன்சிலர்கள், மேயர்கள், துணை மேயர்கள், மாநகராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள், பேரூராட்சி, ஊராட்சி மன்றத் தலைவர் தொடங்கி கீழ் மட்டம் வரையில் கமிஷன் போகும். தேர்தல் நடத்தாவிட்டால், பிரதிநிதிகள் இருக்க மாட்டார்கள். கமிஷன் பணம் மிச்சமாகும். இதனால், ஒரு சிலரின் பாக்கெட்டுகள் வழக்கத்துக்கு அதிகமாக நிரம்பும்.

இந்தக் காரணங்கள் தவிர முக்கியமான இன்னொரு காரணம், உள்ளாட்சித் தேர்தலுக்காக அ.தி.மு.க வசூலித்த 34,68,71,000 ரூபாய். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காகப் பலரும் கட்சிக்கு நிதி வழங்கினார்கள். அதோடு, விருப்ப மனு அளித்தார்கள். விருப்ப மனுவுக்குக் கட்டணமும் வசூலிக்கப்பட்டது. அப்படி வசூலிக்கப்பட்ட தொகைதான், 34 கோடியே 68 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய்.

விருப்ப மனு கேட்ட போது
விருப்ப மனு கேட்ட போது

இப்படிப் பணம் வசூலிக்கப்பட்டவர்களில் பலரை 2016-ம் ஆண்டு வேட்பாளராக அறிவித்தது அ.தி.மு.க. இதில் பெரும்பாலானவர்கள் சசிகலா ஆதரவாளர்கள். சசிகலா தரப்பினரிடம் பணம் அளித்து சீட் பெற்றார்கள். ஆனால், தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டால், முன்பு அ.தி.மு.க வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களையே மீண்டும் அறிவிக்கவேண்டி வரும். அவர்களில் பலர், சசிகலா தரப்பிடம் முன்பு பணத்தைக் கொடுத்தவர்கள். அதனால் நமக்கு என்ன பயன் என நினைத்து தேர்தலை நடத்தாமல் இருக்கிறது தமிழக அரசு. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால், மீண்டும் அவர்களுக்கே எடப்பாடி - பன்னீர்செல்வம் தலைமை சீட் தருமா என்கிற கேள்வியும் எழுகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
விகடன்

ஒரு லட்சத்துக்கும் மேலான பதவிகள்கொண்ட உள்ளாட்சித் தேர்தலில், அந்த சீட்டுகளைத் தங்களுக்கு வேண்டப்பட்ட கட்சிக்காரர்களுக்குத் தந்து ஆதாயம் அடையத்தான் அரசியல்வாதிகள் விரும்புவார்கள். தேர்தல் நடந்தால் வசூல் வேட்டை விண்ணை முட்டும். 2016-ம் ஆண்டு தேர்தல் அறிவிப்பு வந்த நேரத்தில், அமைச்சர்கள் மூலமும் சிலர் வேட்பாளர்கள் ஆனார்கள். அவர்களுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா எனத் தெரியவில்லை. இதனால், அமைச்சர்கள் காட்டில் அடைமழை பொழியலாம்.

விருப்ப மனு மற்றும் நன்கொடை மூலம் 34,68,71,000 ரூபாயை கட்சிக்குக் கொடுத்தவர்களுக்குப் பட்டை நாமம் சூட்டப்படுமா என்பது தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு தெரியவரும். உள்ளாட்சித் தேர்தலுக்காக 2016-ம் ஆண்டு வசூலித்த 34,68,71,000 ரூபாயை இந்த இரண்டரை ஆண்டுக் காலத்தில் செலவழிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் அந்தத் தொகை செலவாகியிருக்கலாம்.

வாக்குப் பதிவு இயந்திரம்
வாக்குப் பதிவு இயந்திரம்
விகடன்

உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் குடிநீர், சாலை, சுகாதாரம் போன்ற பணிகள் நடக்காமல் போனாலும் சரி, தேர்தல் நடத்தாவிட்டால் நிதி தரமுடியாது என மத்திய அரசு கைவிரித்தாலும் சரி, கட்சிக்காரர்கள் உள்ளாட்சித் தேர்தலுக்கு நன்கொடை அளித்தாலும் சரி... தேர்தலை நடத்த மாட்டோம் எனச் சொல்வதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?