மகாராஷ்டிராவில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக இருக்கும் அஜித் பவார் பா.ஜ.க-வில் சேரப்போவதாக தொடர்ந்து செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து சரத் பவார் கட்சியின் தலைவர் பதவியில் விலகப்போவதாக அறிவித்தார். கட்சித்தலைவர்கள் அவரின் ராஜினாமாவை நிராகரித்ததோடு முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். புதிய தலைவரை தேர்ந்தெடுக்க சரத் பவார் கமிட்டி ஒன்றை அமைத்திருந்தார். அக்கமிட்டியும் சரத் பவாரின் ராஜினாமாவை நிராகரித்ததோடு அது தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றியது. இதையடுத்து சரத் பவார் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற்றார்.
அஜித் பவார் தன் மீதான புகார்கள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் தொடர்ந்து கட்சிப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். சரத் பவாரின் சொந்த ஊரான பராமதியில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அஜித் பவார், ``நான் எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பவன். இப்போது கூட மூன்று இடங்களில் நடந்த கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டுத்தான் வந்திருக்கிறேன். இதனால் சிலர் என் மீது பொறாமைப்பட்டு எனக்கு எதிராக திட்டமிட்டு குழப்பத்தை உருவாக்குகின்றனர். மகாவிகாஸ் அகாடி ஒற்றுமையாக இருக்கிறது. அதில் இருக்கும் அனைவரும் கூட்டணியின் கடுமையாக உழைக்கின்றனர்” என்று தெரிவித்தார்.
கட்சி தலைவர் பதவிக்கு சுப்ரியா சுலேயை நிறுத்தப்போவதாக வெளியான செய்தியை சரத் பவார் மறுத்துள்ளார். சரத் பவார் பண்டர்பூர் வந்து அங்கு புகழ் பெற்ற விட்டல் பகவானை வழிபட்டார். பின்னர் அளித்த பேட்டியில், ``எனது மகள் சுப்ரியா கட்சி தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டார். மாறாக 2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.

புனே, கோலாப்பூர், நாசிக்கில் கூட்டணிக்கட்சிகளின் பொதுக்கூட்டத்தை நடத்துவது குறித்து விரைவில் சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.