Published:Updated:

வேல் யாத்திரை : 'முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம்' - தமிழக பா.ஜ.க பிடிவாதம்!

வேல் யாத்திரை
வேல் யாத்திரை

தமிழக அரசின் தடையை மீறி தொடர்ச்சியாக 'வேல் யாத்திரை' நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ''வேல் யாத்திரை மூலம் தமிழக அரசை பா.ஜ.க மிரட்டினால், எதிர்விளைவைச் சந்திக்க நேரிடும்'' என்று எச்சரிக்கிறார் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் புகழேந்தி.

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக, தினமும் காலையில் விடிந்தால் பா.ஜ.க-வினர் 'வேல் யாத்திரை' கிளம்புவதும், அ.தி.மு.க அரசு ஓடோடி வந்து அவர்களைக் கைது செய்வதுமாக கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிவருவது தொடர் கதையாகியிருக்கிறது.

தமிழக பா.ஜ.க-வின் சார்பில், நவம்பர் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை தமிழகம் முழுக்க 'வேல் யாத்திரை' நடத்த தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், கொரோனா நோய்த்தொற்றைக் கருத்தில்கொண்டு, அனுமதி மறுத்ததோடு, 'வேல் யாத்திரை'க்கு தடை விதித்தும் உத்தரவிட்டது அரசு. ஆனால், வேல் யாத்திரையை நடத்தியாக வேண்டிய மும்முரத்திலிருந்த தமிழக பா.ஜ.க., கடந்த 6-ம் தேதி தடையை மீறி திருத்தணி முருகன் கோயிலுக்கு 'வேல் யாத்திரை' கிளம்பியது. தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தலைமையில் கிளம்பிய இந்த 'வேல் யாத்திரை'க்குழுவை தமிழக காவல்துறை கைது செய்து, மாலையில் விடுவித்தது.

வேல் யாத்திரை
வேல் யாத்திரை

இந்த நிலையில், 8-ம் தேதி சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலிலிருந்து மறுபடியும் பா.ஜ.க-வினர் வேல் யாத்திரையைத் தொடங்க, மறுபடியும் காவல்துறையினர் பா.ஜ.க-வினரைக் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். அடுத்து செங்கல்பட்டிலிருந்து பா.ஜ.க-வினர் வேல் யாத்திரையைத் தொடங்க அப்போதும், காவல்துறை கைது செய்தது.

தமிழக அரசின் தடையை மீறி பா.ஜ.க-வினர் தொடர்ச்சியாக யாத்திரை கிளம்புவதும், காவல்துறையினர் கைது செய்வதும் தொடர்கதையாகி வருவதைக் கண்டு, பொதுமக்களும் முணுமுணுக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் எம்.என்.ராஜா இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, ''காலம் காலமாக இந்து கடவுள்களை திராவிடக் கட்சிகளின் ஆதரவு பெற்ற சிலர் கொச்சைப்படுத்தி வருகின்றனர். அதனால் இந்துக்களின் மனம் புண்பட்டுள்ளது. இந்துக் கடவுள்களைப் பழிப்போரைக் கண்டித்துத்தான் தமிழக பா.ஜ.க 'வேல் யாத்திரை' நடத்தத் திட்டமிட்டது.

வேல் யாத்திரை
வேல் யாத்திரை

'கொரோனா தொற்றுக் காலத்தில், யாத்திரை செல்ல அனுமதிக்க முடியாது' என்று காரணம் சொல்லித்தான் யாத்திரை நடத்த தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. நாங்களும் முகக் கவசம் அணிந்து தனிமனித இடைவெளியோடுதான் யாத்திரை செல்கிறோம். நீதிமன்றத் தீர்ப்புக்கும் நாங்கள் எப்போதுமே தலைவணங்குவோம்.

அதேசமயம் முதல்வர் தமிழகம் முழுக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அங்கே ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். எதிர்க்கட்சியினரும் ஆங்காங்கே போராட்டம் நடத்துகிறார்கள். அங்கேயும் மக்கள் கூடுகிறார்கள். ஆக, இங்கே எல்லாம் பரவாத கொரோனா, வேல் யாத்திரை மூலமாக மட்டும் பரவிவிடும் என்று சொல்லி தடை விதிப்பது அநியாயம் இல்லையா?

இந்து தர்மத்தைக் காப்பதற்காகத்தான் நாங்கள் யாத்திரை செல்கிறோம். எனவே, அ.தி.மு.க அரசு, உரிய விதிமுறைகளோடு எங்கள் யாத்திரைக்கு அனுமதி வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். மாறாக, லட்சக்கணக்கான தொண்டர்களைக் கைது செய்தாலும் நாங்கள் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம். தொடர்ந்து யாத்திரை செல்வோம்'' என்றார் உறுதியாக.

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மீது பா.ஜ.க தொண்டர்கள் கை வைத்து, அநாகரிகமாக நடந்துகொண்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆளும் 'அ.தி.மு.க அரசு இந்த விவகாரத்தில் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருகிறதா...' என்ற கேள்வி அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது

பொன்னையன்
பொன்னையன்

இதுகுறித்து அ.தி.மு.க-வின் மூத்த தலைவரும் தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத் தலைவருமான பொன்னையனிடம் கேட்டபோது, ''அதாவது, 'யாத்திரையில் 30 பேருக்கு மேல் போகக்கூடாது' என்று சொல்லியும்கூட, அதிக எண்ணிக்கையில் யாத்திரை செல்கிறார்கள். காவல்துறையும் கைது செய்கிறது. ஆனால், மறுபடியும் விதிகளை மீறி யாத்திரை கிளம்புகிறார்கள். இதுகுறித்து நீதிமன்றமே கண்டித்திருக்கிறது.

திருவள்ளூரில் காவல்துறையினர் மீது கை வைத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள விஷயம் குறித்து எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. காவல்துறை மீது கை வைத்தால், அது ஆளுங்கட்சி நபராகவே இருந்தாலும் கையை ஒடித்துவிடுவார்கள். கடந்த காலங்களில் தி.மு.க நடத்திய ஊர்வலங்களில் எத்தனையோ காவல்துறையினரை தாக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன. தர்மபுரியில் ஒரு டி.ஐ.ஜி-யையே கீழே தள்ளிவிட்டுள்ளனர்.

குஜராத்: `672 மார்க்குக்கு 354 தான் போட்டுருக்காங்க!’ - நீட் தேர்வில்  முறைகேடு என மாணவர் புகார்

வேல் யாத்திரை தடை விஷயத்தில், தமிழக அரசு மிகக் கடுமையாகத்தான் நடந்துகொள்கிறது. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுகிற உத்தரவில், நீதிமன்றமும் இன்னும் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

இதற்கிடையே, ''கூட்டணியில் உள்ள ஒரு கட்சி ஒரு முடிவு எடுக்கும்போது, அதனை கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சி முழுமையாக ஆதரிக்க வேண்டும். அதுதான் கூட்டணிக் கட்சிகளின் கடமையாகும். எனவே, தமிழக அரசு 'வேல் யாத்திரை'க்குத் தடை விதித்தாலும் தொடர்ந்து வேல் யாத்திரை நடைபெறும்'' என்று தெரிவித்திருக்கிறார் தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.

புகழேந்தி
புகழேந்தி

இந்த நிலையில், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான புகழேந்தி, இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, ''பிரதமர் நரேந்திர மோடி, தனது பிறந்தநாளின்போதுகூட, 'கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை... எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் தீவிரமாகக் கடைப்பிடிப்போம்' என்று சொல்லி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.

கொரோனாவைத் தடுக்கும் பணியில், மத்திய அரசின் உத்தரவுகளைத்தான் தமிழக அரசும் சுகாதாரத் துறையும் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றன. இது கூட்டணிக் கட்சிகளிடையேயான நல்லுறவைப் பேணுகின்ற நல்லதொரு நடவடிக்கை. ஆனால், கூட்டணியில் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் தமிழக பா.ஜ.க., ஆட்சிக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற வகையில், கையில் வேலை வைத்துக்கொண்டு யாத்திரை என்ற பெயரில், சட்டம் ஒழுங்கைக் கெடுத்து வருகிறார்கள்.

வேல் யாத்திரை: தடையை மீறும் தமிழக பா.ஜ.க... விழிபிதுங்கும் காவல்துறை!

மத்திய அரசுக்கு நாங்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பைத் தரும்போது, தமிழக பா.ஜ.க-வினர் எங்களுக்கு ஒத்துழைப்பு தராமல் நடந்துகொள்வது அரசியல் நாகரிகம் அல்ல. 'சட்டம் தன் கடமையைச் செய்யும்' என்று முதல்வர் கூறியிருக்கிறார். ஓர் அளவுக்கு மேல் போகும்போது, சட்டம் எதையும் வேடிக்கை பார்க்காது. மிகவும் வேகமாகப் பாயும். நீங்கள் கையில் பிடித்திருக்கிற வேல் போன்று, சட்டமும் வேகமாக உங்கள் மீதே பாயும்.

காவல்துறை அதிகாரி மீதே கை வைக்கின்ற அளவுக்கு காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். 'மத்திய-மாநில அரசுகள் நம்முடைய அரசுகள்' என்ற கண்ணிமும் கட்டுப்பாடும் இருக்குமேயானால், இப்படியெல்லாம் நடந்திருக்ககூடாது. 'மிரட்டிப் பார்க்கலாம்' என்று நீங்கள் நினைத்தீர்களானால், முடிவில் நீங்கள்தான் அதன் விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

எடப்பாடி பழனிசாமி - நரேந்திர மோடி
எடப்பாடி பழனிசாமி - நரேந்திர மோடி

தமிழக பா.ஜ.க-வினரின் போக்குக்கு மத்திய அரசு ஆதரவாக இருப்பதாகத் தெரியவில்லை. அகில இந்திய அளவில் உள்ள பா.ஜ.க-வின் பெரிய தலைவர்களுக்குத் தெரியாமல் நடக்கின்ற கூத்தாகத்தான் இதை நான் பார்க்கிறேன். 'வேல் யாத்திரை'யால் உங்களுக்கு அரசியல் ஆதாயமோ அனுதாபமோ கிடைக்காது. மாறாக மக்களின் வெறுப்புக்குத்தான் உள்ளாவீர்கள். ஏனெனில், இது வெறும் புகழ்ச்சி... வீண் விளம்பரம்!'' என்றார் சூடாக.

அடுத்த கட்டுரைக்கு