Published:Updated:

`அந்த நபரை மீண்டும் பார்த்தால் அடையாளம் காட்ட முடியும்!’- ஜே.என்.யூ மாணவி ஆயிஷி கோஷ்

ஜே.என்.யூ சம்பவத்தின்போது தன் மீது கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தியதாக ஆயிஷி கோஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆயிஷி கோஷ்
ஆயிஷி கோஷ்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஜனவரி 5-ம் தேதி நடந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விடுதிக் கட்டண உயர்வு, செமஸ்டர் கட்டண உயர்வுக்கு எதிராக ஜே.என்.யூ மாணவ அமைப்புத் தலைவர் ஆயிஷி கோஷ் தலைமையில் மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த நிலையில்தான், ஜனவரி 5-ம் தேதி மாலை முகமூடி அணிந்த மர்மக்கும்பல் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.

ஜேஎன்யு மாணவர் போராட்டம்
ஜேஎன்யு மாணவர் போராட்டம்

இந்தத் தாக்குதலில் ஜே.என்.யூ மாணவ அமைப்பின் தலைவர் ஆயிஷி கோஷ் படுகாயமடைந்தார். தலையில் ரத்தம் சொட்டச் சொட்ட பல்கலைக்கழக வளாகத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் பரவியது. இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து ஜே.என்.யூ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

`துணைவேந்தர் பதவிக்கே அவர் தகுதியற்றவர்!’ -முகமூடி கும்பல் தாக்குதலால் படுகாயமடைந்த ஆய்ஷி கோஷ் #JNU

தன் மீது கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தியதாக ஆயிஷி கோஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப்புகார் மனுவில், ``என் நண்பர் நிகில் மேத்தீவுடன் சென்றுகொண்டிருந்தேன். 20 முதல் 30 பேர் கொண்ட கும்பல் ஒரு காருக்குப் பின்னால் இழுத்துச்சென்று என்னை சூழ்ந்துகொண்டது. இரும்புக் கம்பிகளைக்கொண்டு என்னைக் கடுமையாகத் தாக்கினர். அவர்களின் தாக்குதலில் நான் நிலைகுலைந்து கீழே விழுந்தேன். நிகில் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் என்னைக் கொலைவெறியுடன் தாக்கினர். என் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

ஆய்ஷி கோஷ்
ஆய்ஷி கோஷ்

என் உடல் முழுவதிலும் கடுமையாகத் தாக்கினர். அந்தக் கூட்டத்திலிருந்து சிலர், `அவளைக் கொன்றுவிடுங்கள்' என கத்தினர். அதில் ஒருவரை என்னால் அடையாளம் காட்ட முடியும். அந்தக் கூட்டத்தில் அந்த நபர் மட்டும் முகமூடி அணியாமல் இருந்தார். நான் அவரைப் பார்த்தேன் அந்தநபரும் என்னைப் பார்த்தார். இன்னொரு முறை அந்த நபரைப் பார்த்தால் என்னால் கண்டிப்பாக அடையாளம் காட்ட முடியும் ” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`முகமூடி, ஹாக்கி மட்டைகள்; நொறுக்கப்பட்ட கதவுகள்!'- கண்ணீருடன் விவரித்த ஜே.என்.யூ மாணவர்கள்

விடுதிக் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியானபோது பல்கலைக்கழக துணைவேந்தரைச் சந்திக்க மாணவர்கள் முயன்றுள்ளனர். ஆனால், மாணவர்களைச் சந்திப்பதை துணைவேந்தர் தவிர்த்துள்ளார். இதையடுத்துதான் கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த நிலையில், ஜனவரி 5-ம் தேதி மாலை முகமூடி அணிந்த மர்மக்கும்பல் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாணவர்களுடன் மேலும் சிலர் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டியது இடதுசாரிகள் மாணவர்கள் அமைப்பு. இதை மறுத்துள்ள ஏபிவிபி இடதுசாரி மாணவ அமைப்பு திட்டமிட்டே இந்தத் தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டினர்.

ஜேஎன்யு பல்கலைக்கழகம்
ஜேஎன்யு பல்கலைக்கழகம்

இந்தத் தாக்குதல் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் காயம் அடைந்தனர். மாணவ தலைவர் ஆயிஷி கோஷ் இந்தத் தாக்குதலில் காயமடைந்தார். காயமடைந்தவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு இந்து ரக்‌ஷா தளம் அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்தது. இதற்கிடையில், ஆய்ஷி கோஷ் உட்பட ஜே.என்.யூ மாணவர்கள் 20 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.