Published:Updated:

`3 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம்; அதிரடி காட்டிய சபாநாயகர்!’ - ஆளுநரை சந்திக்கும் எடியூரப்பா

சத்யா கோபாலன்

கர்நாடகாவில் நடக்கும் நிகழ்வுகளை வைத்துப் பார்த்தால் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடக சபாநாயகர் ரமேஷ்
கர்நாடக சபாநாயகர் ரமேஷ் ( ANI )

கர்நாடகாவை ஆட்சி செய்து வந்த குமாரசாமி தன் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் கடந்த செவ்வாய்க் கிழமை தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அங்கு அதிக பெரும்பான்மை உடைய பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், `ராஜினாமா செய்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மீது சபாநாயர் எடுக்கும் நடவடிக்கையைப் பொறுத்து, ஆட்சி நடத்துவது பற்றி நாங்கள் முடிவெடுப்போம்’ என எடியூரப்பா நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

கர்நாடக சட்டமன்றம்
கர்நாடக சட்டமன்றம்
ANI

இந்த நிலையில், ராஜினாமா செய்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்களில் காங்கிரஸைச் சேர்ந்த ரமேஷ் ஜார்கிஹொலி (Ramesh Jarkiholi) , மகேஷ் குமதஹல்லி (Mahesh Kumathahalli ) மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ-வான சங்கர் ஆகிய மூவரையும் தகுதி நீக்கம் செய்து அறிவித்துள்ளார் சபாநாயகர். இவர்கள் மூவரும் 2023-ம் ஆண்டு வரை தகுதி நீக்கம் செய்யப்படுவதாகவும், அதுவரை எந்த தேர்தலிலும் அவர்கள் போட்டியிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ராஜினாமா செய்த மற்ற எம்.எல்.ஏ-க்கள் மீது சபாநாயகர் எடுக்கும் நடவடிக்கைதான் அடுத்ததாக ஆட்சி அமைக்க மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சபாநாயகரின் முடிவுக்குப் பிறகு ஒருவேளை, பா.ஜ.க ஆட்சியமைக்க மாட்டோம் எனக் கூறினால், கர்நாடகாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வரும். இதன் காரணமாக மொத்த கர்நாடகாவும் சபாநாயகரின் முடிவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

கர்நாடக சபாநாயகர்
கர்நாடக சபாநாயகர்
ANI

எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் தொடர்பாக என்.டி.டி.வி செய்திக்குப் பேட்டியளித்துள்ள கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார், `` நான் யாருடைய ராஜினாமாவையும் ஏற்கப்போவதில்லை. அவர்கள் அனைவரும் 100% சுயமாகவும், உண்மையாகவும் ராஜினாமா செய்யவில்லை. இந்த விஷயம் மொத்த உலகத்துக்கும் தெரியும். தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இல்லாமல், ராஜினாமா செய்த மற்ற எம்.எல்.ஏ-க்கள் பற்றி இரண்டு நாளில் எனது முடிவை அறிவிப்பேன்.

என் செயல்பாடுகளை அனைவரும் உற்றுக் கவனித்து வருகின்றனர். நடந்து முடிந்த எந்த விஷயமும் என்னைப் பாதிக்கவில்லை. கடந்த 15 நாள்களாக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு குழு என்னை விரைவாக முடிவெடுக்கும்படி சொல்லியது. இன்னொரு குழு மிகவும் மெதுவாக முடிவெடுக்கும்படி சொல்லியது. ஆனால், நான் என் கடமையை மட்டுமே செய்துவருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள்
ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள்
ANI

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மீது கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது அனைவரும் அவையில் இருக்க வேண்டும் என்ற கட்சியின் உத்தரவை மீறி எம்.எல்.ஏ-க்கள் நடந்துகொண்டதாகவும் அதனால்தான் கூட்டணியின் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் ஆட்சியமைக்க பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. இன்று காலை எடியூரப்பா ஆளுநரைச் சந்தித்து உரிமை கோரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.