கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 22 பேர் உயிரிழந்திருக்கின்றனர். விழுப்புரத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், பலரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விவகாரம் தமிழக அளவில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில், திண்டிவனம் அ.தி.மு.க எம்.எல்.ஏ அர்ஜுனனைச் சந்தித்து அவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தேன்!
``கள்ளச்சாரயத்தால் 22 உயிர்கள் பறிபோகியிருக்கின்றன. இந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் அதிகம் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. ஏன் தடுக்க முடியவில்லை... அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?"
"திண்டிவனம், மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை நடைபெறுகிறது எனவும், இதனால் இளம்பிள்ளைகள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தொகுதி மக்களிடமிருந்து எனக்குக் கடந்த வருடம் புகார்கள் வந்தன. நான் விசாரித்தபோதும் உண்மை எனத் தெரியவந்ததால், அப்போதைய மரக்காணம் காவல் ஆய்வாளர் சுரேஷ் பாபுவிடம் நடவடிக்கை எடுக்கும்படி மூன்று முறை கூறினேன். ஆனால், `நீங்கள்தான் சாராயம் விற்கிறீர்கள் எனப் பெயரோடு சொல்கிறார் எம்.எல்.ஏ' என்று சம்பந்தப்பட்ட சாராய வியாபாரிகளிடமே கூறி லஞ்சம் பெற்றிருக்கிறார் அவர். இது என் கவனத்துக்கு வந்தது. அடுத்தகட்டமாக, 'சாராயம், கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்துங்கள்' என்று கடந்த வருட இறுதியில் விழுப்புரம் எஸ்.பி., டி.ஐ.ஜி-யிடம் தொலைபேசி மூலமாகத் தெரிவித்தேன். டி.ஐ.ஜி சொன்னபடி வாட்ஸ்அப் பதிவாகவும் அவருக்கு விவரங்களை அனுப்பினேன். ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதன் பிறகு தி.மு.க அரசைக் கண்டித்து மரக்காணத்தில் நாங்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமேடையிலேயே சாராயம், கஞ்சா விற்பனை பற்றிப் பேயிருக்கிறேன். எம்.எல்.ஏ-வான நான் சொல்லியே அதிகாரிகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. என் நிலைமையே இப்படியென்றால், பொதுமக்களின் நிலமை என்ன... அன்றே காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று விலை மதிப்பற்ற 14 உயிர்கள் பறிபோயிருக்காது."
``மரக்காணம் பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்பட்டதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள்?"
"சாராய வியாபாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட்ட ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள்தான் இருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்ட (வடக்கு) தி.மு.க துணைச் செயலாளராகவும், மரக்காணம் நகரச் செயலாளராகவும் இருக்கும் ரவிக்குமார்தான் இங்கு காவல்துறை செயல்படாததற்குக் காரணம்."

``இந்தச் சாராய வியாபாரிகள் விவகாரத்தில், அமைச்சர் செஞ்சி மஸ்தானின் பெயர் பேசப்படுகிறதே... அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?"
"திண்டிவனம் நகராட்சியின் 20-வது வார்டு கவுன்சிலரின் கணவர்தான் மரூர் ராஜா. அவர் சாராயம் விற்பதாக எனக்கு ரோஷணை மக்களிடமிருந்து புகார் வந்தது. அதை எஸ்.பி ஸ்ரீநாதாவிடம் கூறினேன், நடவடிக்கை இல்லை. அமைச்சர் மஸ்தான்தான் அவருக்கு (மரூர் ராஜா) கேக் ஊட்டுகிறாரே... அப்புறம் எப்படி அவர்மீது போலீஸ் உடனே நடவடிக்கை எடுப்பார்கள்... `நான் அமைச்சர், அதனால் கட்சிக்காரர்கள் பார்க்க வருவார்கள்' என்கிறார் மஸ்தான். ஆமாம், யார் வேண்டுமானாலும் பார்க்கப் போவார்கள்தான். அவர் (மரூர் ராஜா) தி.மு.க கவுன்சிலரின் கணவர் எனும்போது, அமைச்சருக்கு அவரைப் பற்றித் தெரியாமல் இருந்திருக்குமா?"
``போலீஸ், உங்கள் புகாருக்கு நடவடிக்கை எடுக்காததன் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?"
"நான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்பது முதல் காரணம். இரண்டாவது, அந்தப் பகுதி காவல்துறையினர் மற்றும் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் ஆசீர்வாதத்துடன் சாராய வியாபாரிகள் சாராய விற்பனையில் ஈடுபட்டதுதான். அரசியல் தலையீடு இருப்பதால்தான் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை."
``இதுவரை கைதுசெய்யப்பட்டிருப்பவர்கள் உண்மைக் குற்றவாளிகளா... பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா?"
"தற்போது இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை குற்றவாளிகள்தான் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். முக்கியக் குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. கைதுசெய்யப்பட்டவர்களிடம் தீர விசாரித்து, முக்கியக் குற்றவாளிகளை போலீஸ்தான் கண்டறிய வேண்டும். காவல்துறை, சாராய வியாபாரிகளிடம் கொடுத்த சாராயத்தால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாகச் சிலர் சொல்கிறார்கள். காவல்துறையினர் பறிமுதல் செய்யும் சாராயங்களை நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர், பொது இடத்தில் கொட்டி அழிக்க வேண்டும். ஆனால், அப்படி யாருமே செய்வதில்லை.

வழக்கு முடிந்ததும் அந்தச் சாராயத்தை, சாராய வியாபாரிகளிடமே போலீஸார் கொடுத்துவிடுகிறார்கள். அப்படிக் கொடுக்கப்பட்ட சாராயத்தைக் குடித்துதான் 14 பேர் இறந்தார்கள் என்பது எங்களுடைய வாதம்."
``இந்த மரணங்களுக்கெல்லாம் யார் பொறுப்பு?"
"காவல்துறை, முதலமைச்சரிடம்தானே இருக்கிறது... ஆக, இந்த மரணங்களுக்கு அரசின் செயல்பாடுகள் சரியில்லாமல் இருப்பதுதான் காரணம். எனவே, அரசுதான் பொறுப்பு."
``அ.தி.மு.க ஆட்சியில், இங்கு கள்ளச்சாராய விற்பனையே நடக்கவில்லையா... தி.முக ஆட்சியில்தான் நடக்கிறதா?"
"எப்பவுமே நடக்கவில்லை என நாங்கள் சொல்லவில்லை. ஒரு திறமையான ஆட்சியை எடப்பாடி அவர்கள் செய்தார். அவருடைய ஆட்சியில் மரணங்கள் ஏற்பட்டனவா... குறிப்பிடும்படியான மரணங்கள் இல்லை. எந்த ஆட்சியிலும் சில சமூக விரோதிகள் சில குற்றங்களைச் செய்யத்தான் செய்வார்கள். அதை அரசுதான் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். திறமையான எடப்பாடியாரின் ஆட்சியில் ஏதும் ஆகவில்லை. இப்போது நடப்பதற்கு என்ன அர்த்தம்?"

``மரக்காணம் பகுதியில் எங்கெல்லாம் சாராயம் விற்பனை அதிகமாக இருக்கிறது?"
"மரக்காணத்தை விடுங்கள்... என் வீட்டுக்குப் பக்கத்திலேயே சாராய விற்பனை நடக்கிறது. `என் ஊரிலேயே இப்படி இருக்கிறதே.. மற்ற ஊரில் எப்படி சார்... உடனடியாக இதன்மீது நடவடிக்கை எடுங்கள்' என்று காவல்துறையிடம் புகார் சொன்னால், காவல்துறையினர் வருவார்கள், சாராய வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள். அதை என் கண்முன்னே பார்த்திருக்கிறேன். எம்.எல்.ஏ-வான எனக்கே இந்த நிலைமை..."
``தி.மு.க அரசு பற்றியும், அதன் ஆட்சிக்காலத்தில் நடக்கும் சம்பவங்கள் பற்றியெல்லாம் கடுமையாக விமர்சிக்கும் சி.வி.சண்முகம், மரக்காணம் சாராய விற்பனை பற்றி இதற்கு முன்பு குறிப்பிட்டுப் பேசியதாகத் தெரியவில்லையே?"
"அண்ணன் (சி.வி.சண்முகம்), மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார், டெல்லிக்குப் போகிறார், வருகிறார். கட்சியின் நீதிமன்ற வழக்குகளைப் பார்க்கிறார். இந்த அரசின் ஆட்சியில் என்னென்ன நடக்கின்றன என்று பேட்டி கொடுக்கிறார். இது, என் தொகுதியில் நடக்கிறது. இது அவருக்குத் தெரிந்து பேசவில்லை எனக் கூற முடியாது. சட்டமன்ற உறுப்பினரான நான்தான் பார்க்க வேண்டும்."

``சில மாதங்களுக்கு முன்பாகவே கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராகக் குரல் கொடுத்ததாகக் கூறும் நீங்கள், சட்டமன்றத்தில் ஏன் இது பற்றிப் பேசவில்லை?"
"சட்டமன்றத்தில் எனக்குப் பேசவே வாய்ப்பு தரவில்லை. நான் ஒருநாளும் ஆப்சென்ட்டாக மாட்டேன். ஒரு நாளைக்கு 10 முறை பேசுவதற்குக் கையை உயர்த்துவேன். ஆனால், சபாநாயகர் பேச வாய்ப்பளிக்கவில்லை. பேசவிட்டால்தானே பேச முடியும்... பேசவே விடவில்லையே!"
``கள்ளச்சாராய விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு எடப்பாடி பழனிச்சாமி பேசுவதாக, அமைச்சர் பொன்முடி சாடியிருக்கிறாரே?"
"நாங்கள் அரசியல் செய்வதாக இருந்தால் மூன்று பேர் உயிரிழந்து போனபோதே செய்திருக்கலாம். மக்களைத் திரட்டி அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தியிருப்போம். இந்தச் சம்பவத்தைவைத்து அரசியல் செய்ய வேண்டுமென நாங்கள் நினைக்கவில்லை. தி.மு.க அரசாங்கத்தின் திறமையற்ற செயல்பாடுகளை மறைக்க எங்கள்மீது பழிபோடுகிறார்கள்."

``இந்தக் கள்ளச்சாராய விவகாரத்தைச் சரிசெய்ய உங்களின் அடுத்தகட்ட தீர்வு என்ன?"
"இனி இது போன்ற உயிரிழப்புகள் நடைபெறாமல் இருக்க, இந்த அரசு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், அரசை எதிர்த்து போராட நாங்கள் (அ.தி.மு.க) தயாராக இருக்கிறோம்."