அரசியல்
அலசல்
Published:Updated:

மூன்று ஆண்டுகளுக்கு முன்பே மூன்றாவது அணி? - பா.ஜ.க-வுக்கு பாதகமா, சாதகமா?

மூன்றாவது அணி தலைவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மூன்றாவது அணி தலைவர்கள்

தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகளைக்கொண்ட மெகா கூட்டணியை வடிவமைக்கும் திட்டத்தில் கிஷோர் இருக்கிறார்.

ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலின்போதும் ‘மூன்றாவது அணி’ பேச்சுகள் எழுவது வழக்கம்தான். ஆனால், இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலுக்கு மூன்று ஆண்டுகள் இருக்கும்போதே, மூன்றாவது அணிக்கான பரபரப்புகள் தொடங்கிவிட்டன. டெல்லியின் தற்போதைய ஹாட் டாபிக் இதுதான்!

மகாராஷ்டிரா ஆளும் கூட்டணியில் அங்கம்வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை ஜூன் 11-ம் தேதி சந்தித்து, மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தினார் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். தொடர்ந்து ஜூன் 21-ம் தேதியும் அவரைச் சந்தித்திருக்கிறார் பி.கே. இந்தச் சந்திப்புக்குப் பிறகுதான், மூன்றாவது அணி குறித்த பேச்சுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து, பா.ஜ.க-வுக்கு எதிராக உள்ள பிராந்தியக் கட்சிகளை ஒன்றிணைத்து மூன்றாவது அணியைக் கட்டமைக்கும் ஐடியாவை பவாரிடம் கொடுத்திருக்கிறார் கிஷோர் என்கிறார்கள். இந்தக் கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் கைகோத்துள்ளார் என்பதால், இது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

தேசிய அளவில் நடக்கும் அரசியல் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்துவரும் அரசியல் பார்வையாளர்கள் மேற்கண்ட நகர்வுகள் தொடர்பாக நம்மிடம் பேசினார்கள். “இந்தியாவில் பிராந்தியக் கட்சிகள் அணி சேர்ந்து ஆட்சியைப் பிடித்த வரலாறு ஏற்கெனவே நிகழ்ந்துள்ளது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, பிராந்திய கட்சிகள் ஒன்றிணைந்து அவரை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தன. தேவ கவுடா, ஐ.கே.குஜ்ரால் எனப் பலர் பிரதமர் பதவிக்கு வந்ததன் பின்னால், பிராந்தியக் கட்சிகளின் பங்கு பெரிதும் இருந்தது. ஆனால், தற்போது தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது பா.ஜ.க. வரும் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டுமென்றால் பிராந்தியக் கட்சிகள் ஒருங்கிணைந்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்று பவாரிடம் சொல்லியிருக்கிறார் கிஷோர். அதற்கு முன்னுதாரணமாக, தற்போது நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியது பா.ஜ.க. அதே வேகத்தில், இந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும் படையையே மேற்கு வங்கத்தில் இறக்கி, ஆட்சியையே பிடித்துவிடலாம் என்று தீவிரமாகச் செயல்பட்டது பா.ஜ.க தலைமை. ஆனால், கிஷோரின் வியூகத்துக்கு முன்னால் 77 தொகுதிகளை மட்டுமே பா.ஜ.க-வால் பெற முடிந்தது. அதேபோல தமிழ்நாடு, கேரளா மாநிலங்களிலும் பா.ஜ.க வீழ்ச்சியையே சந்தித்தது. மேற்கண்ட தேர்தல் முடிவுகளால் பா.ஜ.க தலைமை சற்று நிலைதடுமாறியிருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நாடு முழுவதும் இருக்கும் பிராந்தியக் கட்சிகளை ஒன்றிணைத்து, முன்றாவது அணி அமைக்க வேண்டும் என்பதே கிஷோரின் பிளான்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

அதன்படி தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகளைக்கொண்ட மெகா கூட்டணியை வடிவமைக்கும் திட்டத்தில் கிஷோர் இருக்கிறார். ஆனால், தற்போது வரை தேசியவாத காங்கிரஸ் கட்சி, மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ளது. தி.மு.க-வும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறது. இந்தக் கட்சிகள் காங்கிரஸைக் கழற்றிவிட்டு மூன்றாவது அணியில் அங்கம்வகிக்குமா என்பது இப்போதைக்குத் தெரியாது.

ஜூன் 22-ம் தேதி டெல்லியிலுள்ள சரத் பவார் வீட்டில் காங்கிரஸ் அல்லாத எட்டு கட்சித் தலைவர்களின் கூட்டம் நடந்துள்ளது. சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட்கள், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், ‘பா.ஜ.க-வுக்கு வலுவான மாற்றுக் கட்சியாக காங்கிரஸ் இல்லை. அந்தக் கட்சிக்கு நிரந்தரத் தலைவரைகூட நியமிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள்’ என்றெல்லாம் பேசப்பட்டுள்ளது. எனவே, விரைவில் புதிய கூட்டணி எந்நேரமும் அமையலாம். அநேகமாக மம்தா பானர்ஜி இந்தக் கூட்டணிக்கு தலைமை வகிக்கலாம். அதேநேரம், இந்த மூன்றாவது அணியில் யார் பிரதமர் என்ற கேள்வி வழக்கம்போல பிரதானமாக எழும்’’ என்றார்கள் விரிவாக!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பே மூன்றாவது அணி? - பா.ஜ.க-வுக்கு பாதகமா, சாதகமா?

மற்றொருபுறம், ‘‘காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் இந்த நகர்வுகளை உன்னிப்பாக கவனித்துவருகிறார். தற்போது, காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள கோஷ்டிப்பூசல்களைக் களையும் நோக்கில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தையும் அவர் விரைவில் கூட்டவிருக்கிறார். அத்துடன், ஐக்கிய முற்போக்கு அணியிலுள்ள கட்சிகளுடனும் விரைவில் சோனியா ஆலோசனை நடத்துவார்’’ என்று சொல்லும் காங்கிரஸ் தரப்பினர், மூன்றாவது அணி அமைவதால் ஏற்படும் பலவீனங்களையும் பட்டியலிட்டார்கள்...

‘‘மூன்றாவது அணியை எவ்வளவு வலுவாகக் கட்டமைத்தாலும், அது பா.ஜ.க-வுக்குச் சாதகமாகவே அமையும். வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நின்றால் மட்டுமே, பா.ஜ.க-வுக்கு பதிலடி கொடுக்க முடியும். ஆனால், பிரசாந்த் கிஷோர் மூன்றாவது அணியை எதற்காகக் கட்டமைக்க முயல்கிறார் என்பது தெரியவில்லை. பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டுமென்றால், காங்கிரஸ் கட்சியின் கரங்களை வலுப்படுத்துவதுதான் சரியான அரசியல் நகர்வாக இருக்க முடியும். மூன்றாவது அணியை அமைத்தால், வாக்குகள் பிரிந்து அது பா.ஜ.க-வுக்குத்தான் சாதகமாக அமையும்’’ என்று எச்சரிக்கிறார்கள்.

மூன்றாவது அணியின் விளைவுகளைக் காண இன்னும் மூன்றாண்டுகள் காத்திருக்க வேண்டும். அதற்குள் அரசியலில் எதுவும் நடக்கலாம்!