Published:Updated:

2024 நாடாளுமன்றத் தேர்தல்: பா.ஜ.க-வை வீழ்த்த பி.கே-வோடு இணைந்து மம்தாவும் சரத் பவாரும் திட்டமா?

மம்தா, பிரசாந்த் கிஷோர், சரத் பவார்
மம்தா, பிரசாந்த் கிஷோர், சரத் பவார்

பி.கே என்று அரசியல் வட்டாரத்தில் செல்லப் பெயர் பெற்றிருக்கும் பிரசாந்த் கிஷோரைச் சந்தித்திருக்கிறார் இந்தியாவின் மூத்த அரசியல்வாதி சரத் பவார். இந்திய அரசியலில் பேசுபொருளாகியிருக்கும் இந்தச் சந்திப்பு எதற்காக..?

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா வரை பலருக்கும் அரசியல் ஆலோசகராக இருந்து, அவர்களை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றவர் பிரசாந்த் கிஷோர். சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில், வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸையும், தமிழ்நாட்டில் தி.மு.க-வையும் அமோக வெற்றிபெறச் செய்ததில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துக்கு முக்கியப் பங்கு உண்டு.

இந்த இரு கட்சிகளின் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பேசிய பிரசாந்த் கிஷோர், ``இரு கட்சிகளின் வெற்றியும் மகிழ்ச்சி தருகிறது. நான் சொன்னபடியே மேற்கு வங்கத்தில் பா.ஜ.க இரட்டை இலக்கத்தைத் தாண்டவில்லை. இருந்தும் பா.ஜ.க-வுக்கு தேர்தல் கமிஷன் உதவி செய்திருக்கிறது. அதனால்தான் இத்தனை தொகுதிகள் கிடைத்திருக்கின்றன'' என்று குற்றம்சுமத்தினார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

மேலும், `` ஒன்பது ஆண்டுக்காலம் அரசியல் வியூக ஆலோசகராகப் பணியாற்றிவிட்டேன். தற்போது இந்தப் பணியிலிருந்து ஓய்வுபெற்று, குடும்பத்தோடு நேரத்தை செலவிடப்போகிறேன். ஐபேக் நிறுவனத்தை என்னுடைய நண்பர்கள் தொடர்ந்து நடத்துவார்கள்'' என்று சொல்லி பரபரப்பைக் கிளப்பினார்.

இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 11) அன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில், பிரசாந்த் கிஷோர் சந்தித்தது இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சரத் பவாரின் மும்பை `சில்வர் ஓக்' இல்லத்தில் காலை 11 மணியளவில் தொடங்கிய இவர்களின் சந்திப்பு, மதியம் 2 மணி வரை நீடித்திருக்கிறது. இந்தச் சந்திப்பில், மகாராஷ்டிர மாநில தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் பாட்டீலும் கலந்துகொண்டதாகத் தெரிகிறது. இந்தச் சந்திப்பின்போது சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள், ``இந்தச் சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது. ஆனால், நிச்சயம் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்கள் பற்றியும், `மகா விகாஸ் அகாதி' கூட்டணி ஆட்சி பற்றியும் பேசப்பட்டிருக்கும். பிரசாந்த் கிஷோர் தேர்ந்த அரசியல் விமர்சகர் என்பதால், அவர் ஆலோசனைகள் வழங்கியிருக்கும் பட்சத்தில், அதை மனதில்கொண்டு எங்கள் தலைவர் சரத் பவார் செயல்படுவார் என்பதில் சந்தேகமில்லை'' என்கிறார்கள்

இந்தச் சந்திப்பு தொடர்பாக பிரசாந்த் கிஷோர் தரப்பில், ``நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் ஸ்டாலின், மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில்தான் பிரசாந்த் கிஷோர்-சரத் பவார் சந்திப்பு நிகழ்ந்தது'' என்கின்றனர்.

சரத் பவார்
சரத் பவார்
தீ...தி - 5: மம்தா பானர்ஜிக்கு இருப்பது தைரியமா, திமிரா... வெற்றிகள் எப்படி சாத்தியமாகின்றன?

`ஸ்டாலினுக்கும் மம்தாவுக்கும் ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கத்தான் இந்தச் சந்திப்பு' என ஐபேக் தரப்பு கூறியிருப்பது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. `பா.ஜ.க-வுக்கு எதிராக நிற்கும் மாநிலக் கட்சிகளை 2024 நாடாளுமன்றத் தேர்தலில், ஓர் அணியாக ஒன்று திரட்டுவதுதான் இந்தச் சந்திப்பின் பின்னணியா?' என்பது போன்ற பேச்சுகள் அரசியல் களத்தில் அடிபடத் தொடங்கியிருக்கின்றன.

இது குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலர், ``2024 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வுக்கு எதிராக மாநிலங்களிலுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று திரள நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. சரத் பவார், பிரசாந்த் கிஷோர் சந்திப்பு அதன் தொடக்கமாகக்கூட இருக்கலாம் . `மேற்கு வங்கத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய அரசியலில் பல மாற்றங்கள் நிகழும்' என முன்னதாகச் சொல்லியிருந்தார் சரத் பவார். மேற்கு வங்கத்தில் மம்தா அமோக வெற்றிபெற்ற பின்னர், சரத் பவாரை பிரசாந்த் கிஷோர் சந்தித்திருப்பது மிக முக்கியமான அரசியல் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

மாநிலக் கட்சிகளை பா.ஜ.க-வுக்கு எதிராக ஒன்று திரட்ட, இப்போதிருக்கும் அரசியல் தலைவர்களில் சரத் பவரே சரியானவர். 2019-லேயே இந்த முயற்சியை மேற்கொண்டு அதில் தோல்வியுற்றார் அவர். ஆனால், 2024-ல் காட்சிகள் மாறியிருக்கும். எனவே, பவார் மீண்டும் இந்த முயற்சியில் இறங்க வாய்ப்புகள் அதிகம். இந்தச் சந்திப்பின்போது மூன்றாவது அணியைத் திரட்டுவது குறித்துத்தான் அதிகம் விவாதிக்கப்பட்டிருக்கூடும்.

2024-ல் மாநிலக் கட்சிகள் ஓர் அணியாகத் திரண்டால், பல்வேறு சிக்கல்கள் எழும். அந்தச் சிக்கல்களை சரிக்கட்ட பிரசாந்த் கிஷோர் போன்ற அரசியல் வியூக வல்லுநர் தேவைப்படுவார். அதன் காரணமாகவே பிரசாந்த் கிஷோரைக் கொண்டு மூன்றாவது அணியைத் திரட்டும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கலாம்'' என்கிறார்கள்.

மேலும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பிரதமர் வேட்பாளராக யார் இருப்பார் என்பது பற்றியும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். `` மூன்றாவது அணியாக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் பொறுப்பை சரத் பவார் ஏற்றுக்கொள்வார் எனத் தெரிகிறது. அப்படி அவர் ஒன்று திரட்டினால், மம்தாவை பிரதமர் வேட்பாளராக முன்மொழியத்தான் அதிக வாய்ப்பிருக்கிறது. பிரசாந்த் கிஷோரின் தேர்வும் மம்தாவாகத்தான் இருக்கக்கூடும். கடந்த வாரம் திரிணாமுல் பவனில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்புக்குழுக் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோரும் கலந்துகொண்டார். இதனால், `மம்தா சார்பாகத்தான் சரத் பவாரை, பிரசாந்த் கிஷோர் சந்தித்திருப்பாரோ' என்கிற பேச்சுகளும் அரசியல் வட்டாரத்தில் சுற்றத் தொடங்கியிருக்கின்றன.

மம்தா
மம்தா
`என் கதையை முடித்துவிட முடியும் என நினைக்கிறீர்களா?' அதிரடிக்கும் மம்தா; மே.வங்கத்தில் நடப்பது என்ன?

மம்தாவுக்கும், சரத் பாவருக்குமிடையே 90-களிலிருந்தே நட்புறவு இருந்துவருகிறது. 1993-ல் மத்திய அமைச்சராக இருந்த சரத் பவாரை மகாராஷ்டிராவின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொள்ளச் சொன்னது காங்கிரஸ். இதையடுத்து, ``மத்திய அரசு பொறுப்பிலிருந்து மாநில அரசுப் பொறுப்புக்கு கட்சி மேலிடம் அனுப்பிவைப்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளக் கூடாது'' என்று சரத் பவாரின் வீட்டுக்கே சென்று கோரிக்கை வைத்தார் மம்தா பானர்ஜி. அப்போதிலிருந்தே இவர்களுக்கிடையே நல்லுறவு இருந்துவருகிறது. சரத் பவார், மம்தா என இருவரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தங்கள் மாநிலத்தில் சொந்தக் கட்சி தொடங்கியவர்கள் என்கிற ஒற்றுமையும் இவர்களிடையே இருக்கிறது.

மூன்றாவது முறையாக அமோக வெற்றிபெற்று வங்கத்தைக் கைப்பற்றியிருக்கிறார் மம்தா. அதுமட்டுமல்லாமல், மத்தியில் ஆளும் பா.ஜ.க-வையும், மோடி, அமித் ஷாவையும் ஒருகை பார்த்துவருகிறார் அவர். இந்தியாவின் அனைத்து மாநில மக்களுக்கும் தெரிந்த முகமாக இருப்பதும் மம்தாதான் என்பதால், அவருக்கே மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராகும் வாய்ப்பு அதிகம்'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில், மாநிலக் கட்சிகள் பா.ஜ.க-வுக்கு எதிராக அணி திரளுமா... அப்படி அணி திரண்டால் பிரதமர் வேட்பாளராக யார் இருப்பார் என்பது பற்றிய உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்!
அடுத்த கட்டுரைக்கு