Published:Updated:

விழுப்புரம்: பாஜக வேட்பாளரைப் புறக்கணிக்கும் பாமக; தீவிரம்காட்டும் திமுக - திருக்கோவிலூர் கள நிலவரம்

வி.ஏ.டி.கலிவரதன், க.பொன்முடி
வி.ஏ.டி.கலிவரதன், க.பொன்முடி

திருக்கோவிலூரில் கூட்டணிக் கட்சியான பாஜக - பாமக இடையே சலசலப்பு நிலவிவருகிறது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் திருக்கோவிலூர் தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க கூட்டணி சார்பாக பா.ஜ.க போட்டியிடுகிறது. பா.ஜ.க-வின் வேட்பாளராக அதன் விழுப்புரம் மாவட்டத் தலைவர் வி.ஏ.டி.கலிவரதன் களம்காண்கிறார்.

VAT.கலிவரதன் தேர்தல் பிரசாரம்
VAT.கலிவரதன் தேர்தல் பிரசாரம்

கலிவரதன் பா.ம.க-வில் இருந்தபோது முகையூர் (இப்போது வேறு தொகுதியோடு இணைக்கப்பட்டுவிட்டது) தொகுதியில் 2006-ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிபெற்று, எம்.எல்.ஏ-வாக இருந்தவர். சில வருடங்களுக்கு முன்பாக கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பா.ம.க-விலிருந்து விலகி, பா.ஜ.க-வில் ஐக்கியமானார். தற்போது விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க தலைவராக இருக்கிறார்.

தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சியும், தான் முன்னாளில் பயணப்பட்ட கட்சியுமான பா.ம.க-வின் தலைவர் ராமதாஸைக் காண்பதற்கு தைலாபுரத்திலுள்ள அவரது இல்லத்துக்குச் சென்றார் கலிவரதன். கொரோனா பரவலைக் காரணம் காட்டி உள்ளே அழைக்காமல் போன் மூலமாகவே வாழ்த்துக் கூறி அனுப்பியிருக்கிறார் ராமதாஸ். இதைத் தன்னுடைய வலைதளப் பக்கத்திலேயே பதிவிட்டிருந்தார் கலிவரதன்.

இது ஒருபுறமிருக்க, கடந்த 16-ம் தேதி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் கலிவரதனை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணிக் கட்சிகள் பங்குகொண்ட நிலையில், பா.ம.க-வைச் சேர்ந்த ஒருவரும் கலந்துகொள்ளவில்லை. `கலிவரதன் பா.ம.க-விலிருந்து பிரிந்து வந்தவர் என்பதால் தொண்டர்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். அமைச்சர் சி.வி.சண்முகம் பா.ம.க தலைமையிடம் பேசியிருக்கிறார். விரைவில் எல்லாம் சரியாகிவிடும்" என்று முணுமுணுத்தனர் பா.ஜ.க வட்டாரத்தில்.

தேர்தல் பிரச்சாரத்தில் க.பொன்முடி
தேர்தல் பிரச்சாரத்தில் க.பொன்முடி

இதோடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த உட்கட்சிப் பூசல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த 27-ம் தேதி கூட்டணிக் கட்சித் தொண்டர்களே பா.ஜ.க வேட்பாளரை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கூட்டணிக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து, திருக்கோவிலூர் பா.ஜ.க-வினரிடம் விசாரித்தோம்.

``பா.ம.க-வில் முக்கியப் பொறுப்பிலுள்ள சிலர்தான் அப்படி ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றனர். ஆனால், இதர அடிமட்ட தொண்டர்கள் விறுவிறுப்பாக, ஒத்துழைப்போடுதான் பணியாற்றுகின்றனர். அந்த ஒரு சிலரால் பெரும் மாற்றம் ஒன்றும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. 10.5% இட ஒதுக்கீடு எங்களுக்குப் பயன் தருவதை நன்றாகவே உணர முடிகிறது. தி.மு.க தரப்பிலிருந்து பிரிந்து வந்து தற்போது பா.ஜ.க-வில் இணைந்திருக்கும் ஏ.ஜி.சம்பத்தும் தீவிரமாக எங்களுக்கு வாக்குச் சேகரித்துவருகிறார். அதோடு, உடையார் சமூக வாக்குகளையும் நாங்கள் பிரிப்போம்" என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் எல்.வெங்கடேசன். விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க செயலாளராக இருக்கிறார். இந்த முறையும் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு வெற்றி கிடைப்பது சந்தேகமே என்றாலும், தொகுதியில் தெரிந்த முகம் என்பதால் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார் என கணிக்கப்படுகிறது.

மற்றொரு புறம், தி.மு.க வேட்பாளர் க.பொன்முடி. தி.மு.க மாநில துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் இவர், விழுப்புரம் மாவட்டத்தில் முக்கியப் புள்ளியாக வலம்வருபவர். விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் ஆறு முறை போட்டியிட்டுள்ள க.பொன்முடி, இரண்டு முறை மட்டுமே தோல்வியைத் தழுவியிருக்கிறார். 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரத்தில் சி.வி.சண்முகத்திடம் தோல்வியடைந்தார். அதனால், 2016 சட்டமன்றத் தேர்தலின்போது கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை விழுப்புரம் தொகுதியில் முன்னிறுத்திவிட்டு, திருக்கோவிலூர் தொகுதியில் சென்று அடைக்கலமானார். அந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ- வாக இருக்கிறார்.

வி.ஏ.டி.கலிவரதன், க.பொன்முடி
வி.ஏ.டி.கலிவரதன், க.பொன்முடி

தி.மு.க வேட்பாளராக மீண்டும் திருக்கோவிலூர் தொகுதியிலேயே போட்டியிடுகிறார். இந்தப் பகுதியில் அதிக அளவில் உடையார் சமூகத்தினர் வசிக்கின்றனர். அதே சமூகத்தைச் சேர்ந்தவரான க.பொன்முடி, உடையார் சமூகத்தின் நிலையான வாக்குகளை முன்னிறுத்தி காய்நகர்த்திவருகிறார். அதோடு, பா.ஜ.க-வின் அதிருப்தி வாக்குகளைக் கவரும் முயற்சியிலும் ஈடுபட்டுவருகிறார்.

பரப்பாக நடைபெற்றுவரும் இந்தத் தேர்தல் பிரசாரமும், வாக்குறுதிகளும் எந்த வேட்பாளருக்கு வாக்குகளாக மாறும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு