Published:Updated:

`அடியாட்களுடன் செயல்படுகிறது சுங்கச்சாவடிகள்!' - நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஆவேசம்

சகாயராஜ் மு

"டோல்கேட் என்பது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக மாறியிருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு வரி விதிக்கப்பட்டிருக்கிறது.'' என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நாடாளுமன்றத்தில் ஆவேசமாகப் பேசினார்.

நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஆவேசம்
நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஆவேசம்

மக்களவையில் இன்று பேசிய தொல்.திருமாவளவன், "தேசியச் சாலைகள், மாநிலச் சாலைகள் மற்றும் நகர்ப்புற சாலைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகவும் அவற்றை மேலும் பராமரிப்பதற்காகவும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவும் இந்தத் திருத்த மசோதாவை அறிமுகப்படுத்துவதை வரவேற்கிறேன். அதே வேளையில் மாநில அரசுக்கு இருக்க வேண்டிய பொறுப்புகள் மற்றும் மத்திய அரசுக்கு உரிய பொறுப்புகள் எவை எவை என்பது குறித்து போதிய விவரம் இந்த திருத்த மசோதாவில் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. யார் இந்த நிதிச்சுமையை ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள். மத்திய அரசா, மாநில அரசா என்பது குறித்த விவரம் இந்த மசோதாவில் குறிப்பிடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

திருமாவளவன்
திருமாவளவன்

இதேபோல் இன்னொரு முக்கியமான பிரச்னை குறித்தும் அவையின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்தியா முழுவதும் நகாய் (national highway authority of india) சார்பில் ஏறத்தாழ 372 சுங்கச்சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் பயணிகள் அல்லது ஓட்டுநர்களிடம், வண்டி உரிமையாளர்களிடம் சுங்கவரி வசூலிக்கிறது. சாலை வரி வசூலிக்கிறது. இதன் மூலம் 2017-லிலிருந்து 2018 வரை ஓராண்டுக்கு மட்டும் 22,820 கோடி ரூபாய் கட்டணமாகவே வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை அனைத்தும் சாலைகளை மேற்படுத்துவதற்காகவும் அதைப் பராமரிப்பதற்காகவும் ஏற்படுகிற விபத்துகளால் பாதிக்கப்படுகிற மக்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்றுவதற்காவும் வசூலிக்கப்படுவதாகவும் அறிகிறோம்.

ஆனால், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதால்தான் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் ஒவ்வொரு மாநிலத்திலும் சராசரியாக உயிர் இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்துகளைக் குறைப்பதற்கு முயற்சி எடுக்கிறோம் என்று சொல்வதற்குப் பதிலாக விபத்துகளைத் தடுப்பதற்கு அரசு என்ன முயற்சி மேற்கொள்கிறது என்பது முக்கியமானது. இந்தச் சுங்கச்சாவடி என்பது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக மாறியிருக்கிறது. எத்தனை ஆண்டுக்காலம் இந்தச் சுங்கச்சாவடிகள் வரி வசூலிக்கும் என்பது குறித்த விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. அதற்குரிய அட்டவணைகளில் பதிவு செய்யப்படவில்லை.

மக்களவையில் திருமாவளவன் பேச்சு
மக்களவையில் திருமாவளவன் பேச்சு

ஒவ்வொரு வண்டியும் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும் என்கிற விவரங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. யார் யார் இந்தச் சுங்கக்கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள் என்பது குறித்த விவரங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தச் சுங்கச்சாவடிகளில் காலங்கள் எவ்வளவு, இவர்கள் எத்தனை ஆண்டுக்காலங்கள் இந்த வரியை வசூலிக்கப்போகிறார்கள் என்பது குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படுத்தக்கூடிய வகையில் அட்டவணையில் எழுதப்பட வேண்டும். இல்லையேல் அவர்கள் தொடர்ச்சியாக வரி வசூலித்து மக்களுக்கு எதிராக ஈடுபடுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் அடியாட்களை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டுகிறார்கள். வண்டியை வாங்கும்போது சாலை வரிகள் கட்டப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சுங்க வரித் தேவையா" என்று ஆவேசமாகப் பேசினார்.