Published:Updated:

`பினராயிடம் பாடம் படியுங்கள்!'- கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மோடியை விமர்சிக்கும் திருமாவளவன்

திருமாவளவன்
திருமாவளவன்

கேரள முதல்வர் பினராயி விஜயன் வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து ஒரு அவசரக் கால திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

`கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்கள் நிலைகுலைந்து போய் நிற்கிறார்கள். இதைத் தடுப்பதற்குக் கனடா, ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன? ஆனால் நம்முடைய பிரதமரின் பேச்சில் ஆக்கபூர்வமான திட்டங்கள் எதுவுமில்லை. மோடி அவர்களே, நீங்கள் ஒரு முறை கேரள முதல்வரிடம் பாடம் படித்து வாருங்கள். அவர் எப்படிக் கையாண்டுகொண்டிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும்” எனப் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் விடுதலை சிறுத்தை கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன்.

மோடி
மோடி

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரை மையமாகக் கொண்டு உருவான கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளுக்கும் பரவி கடும் உயிர்ச் சேதத்தை உருவாக்கியதோடு, மனித இனத்துக்கே பெரும் சவாலாக அமைந்துள்ளது. சீனாவில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தொடர்ந்து பதற்றமான நிலை தொற்றிக்கொண்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவில், படிப்படியாகக் குறைந்து வந்தாலும்,

திருமாவளவன்
திருமாவளவன்

அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உயிரிழப்பு 4 -ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவின் நோய்த் தாக்குதலைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதனைக் குறிப்பிட்டார். எனினும் அரசு என்ன செய்கிறது, அரசு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பதனை பற்றிச் சொல்லவே இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

ஆக்கபூர்வமான திட்டங்கள் எதையும் முன்வைக்காத இந்த உரை மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்பதனை காட்டமாகப் பேசியிருக்கிறார் எம்.பி திருமாவளவன். ``உலகில் 176 நாடுகளைத் தாக்கி மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மிகவும் காலதாமதமாக சில தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசும் தமிழக அரசும் எடுத்துக்கொண்டிருக்கிறது.

கொரோனாவும் சென்னையும்
கொரோனாவும் சென்னையும்

தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடையே உரையாற்றிய மோடி பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதனை பற்றி அறிவுரைகளை ஆலோசனை வழங்கினார். குறிப்பாக மார்ச் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று 7 மணி முதல் இரவு 9 மணி வரை எல்லோரும் வீட்டுக்குள்ளே இருந்து மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், அன்று மாலை வீட்டு மொட்டை மாடியில் நின்று நமக்காகச் சேவையாற்றும் மருத்துவரையும் மற்ற ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைப் பாராட்டும் விதமாக கைகளைத் தட்டி உற்சாகப்படுத்த வேண்டும் எனப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவைப் போலவே வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் கனடா, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள் இதேபோல் தொலைக்காட்சியில் உரையாற்றும் போதும் நாட்டு மக்களுக்கு அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளையும் விவரித்தார்கள். அதற்காக அரசு நிதி ஒதுக்கியுள்ள தொகை எவ்வளவு என்பதைத் தெரிவித்துள்ளார்கள். அதுபோல் எந்த ஒரு அறிவிப்பையும் நம்முடைய பிரதமர் மோடி செய்யவில்லை. கேரள முதல்வர் பினராயி விஜயன் வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து ஒரு அவசரக் கால திட்டத்தை அறிவித்திருக்கிறார். வேலை செய்ய முடியாத ஏழை மக்களுக்குப் பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளனர்.

திருமாவளவன்
திருமாவளவன்

இதைப் போல் மத்திய அரசு செய்திருக்க வேண்டும். ஆனால் இதைச் செய்யாமல் மக்கள் ஊரடங்கு உத்தரவு போல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம். கொரோனாவால் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உடனடியாகப் பொருளாதார நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் இதை சாதரணவிஷயமாகக் கையாளாமல் மத்திய,மாநில அரசுகள் துரிதமாகச் செயல்படவேண்டிய நெருக்கடி நிலையில் இருக்கிறோம்" என்றார்

அடுத்த கட்டுரைக்கு