Published:Updated:

"பஞ்சமி நில விவகாரத்தில், நான் அறிவாலயம் பெயரைப் பயன்படுத்தினேனா?!" - திருமாவளவன் விளக்கம்

திருமாவளவன்

'அறிவாலயமாக இருந்தாலும் சிறுதாவூர் பங்களாவாக இருந்தாலும் பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும்' என்று தமிழக முதல்வருக்கு திருமாவளவன் கோரிக்கை வைத்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், இதற்கு என்ன சொல்கிறார் திருமா?

"பஞ்சமி நில விவகாரத்தில், நான் அறிவாலயம் பெயரைப் பயன்படுத்தினேனா?!" - திருமாவளவன் விளக்கம்

'அறிவாலயமாக இருந்தாலும் சிறுதாவூர் பங்களாவாக இருந்தாலும் பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும்' என்று தமிழக முதல்வருக்கு திருமாவளவன் கோரிக்கை வைத்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், இதற்கு என்ன சொல்கிறார் திருமா?

Published:Updated:
திருமாவளவன்

'முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடமே பஞ்சமி நிலம்தான்!' என்று பா.ம.க நிறுவன தலைவர் ராமதாஸ், ட்விட்டரில் பதிவிட்டதிலிருந்தே தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

'முரசொலி அலுவலகம் அமைந்திருப்பது பஞ்சமி நிலத்தில் அல்ல' என்று மறுப்பு தெரிவித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அதற்கான ஆதாரமாக முரசொலி அலுவலகத்தின் பட்டா நகலையும் இணைத்து இணையத்தில் பதிவிட்டார். இதற்குப் பதிலடியாக, 'மூலப் பத்திரம் எங்கே...' என்று எதிர் தரப்பு கேள்வி கேட்க... தொடர்ந்துகொண்டேயிருக்கிறது இந்தச் சர்ச்சை.

ராமதாஸ் - ஸ்டாலின்
ராமதாஸ் - ஸ்டாலின்

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இப்பிரச்னை குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்த கருத்தினை எடுத்துக்கொண்டும் பல்வேறு அரசியல் சர்ச்சைகள் பரப்பப்பட்டு வருகின்றன. சந்தேகங்களை கேட்டுத் தெரிந்துகொள்ளும் நோக்கில், வி.சி.க தலைவர் திருமாவளவனைச் சந்தித்துப் பேசினேன்....

''தமிழ்நாட்டில், பஞ்சமி நில மீட்புக்காக ஓங்கிக் குரல் கொடுத்த வி.சி.க., அதற்காக 'மருதமுத்து ஆணையம்' அமைக்கப்பட்டுவிட்ட பிறகு இவ்விஷயத்தில் அக்கறை காட்டாமல் போனது ஏன்?''

திருமாவளவன்
திருமாவளவன்

''பஞ்சமி நில மீட்புக்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஊடகம்தான் பதிவு செய்வதில்லை. இனியாவது செய்யவேண்டும். பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்த ஜான் தாமஸ், ஏழுமலை ஆகியோரின் நினைவுநாளை ஆண்டுதோறும் அக்டோபர் 10-ம் தேதி 'பஞ்சமி நில மீட்பு நாளாக' கடைப்பிடித்துவருகிறோம்.

போராட்டம் வெடித்த 'காரணை' பகுதியில் நீண்டகால முயற்சிகளுக்குப்பிறகு நினைவுத்தூண் அமைத்து, 25-வது ஆண்டு நினைவுதினத்தை 'வீரவணக்க நாளாக' அனுசரித்ததோடு, 'தமிழக அரசு, மருத முத்து ஆணையத்தை செயல்படவைக்கவேண்டும்; அல்லது புதிய ஆணையம் அமைக்கவேண்டும்' என்று உறுதிமொழியும் ஏற்றிருக்கிறோம்.

இதுமட்டுமல்ல... பஞ்சமி நில மீட்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்குகள், மாநாடுகளை தமிழ்நாடு முழுக்க நடத்திவருவதோடு துண்டறிக்கைகள், குறும்படங்கள் மற்றும் பாடல்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம்.''

'' 'அறிவாலயமாக இருந்தாலும் சிறுதாவூர் பங்களாவாக இருந்தாலும் பஞ்சமி நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்ற தங்களது கோரிக்கை, தி.மு.க வுக்கு எதிரான நிலைப்பாட்டை திருமா எடுக்கிறாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிற்தே?''

''அறிவாலயம் என்ற சொல்லையே நான் பயன்படுத்தவில்லை. 'முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என்கிறாரே மருத்துவர் ராமதாஸ்...' என்று ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு, 'பஞ்சமி நில மீட்புக்காக அன்றைய முதல்வர் கருணாநிதி ஒரு ஆணையம் அமைத்திருக்கிறார். அந்த ஆணையத்தை செயல்படுத்த தற்போதைய அ.தி.மு.க அரசு முன்வர வேண்டும். அந்த ஆணையம் செயல்பாட்டுக்கு வந்தால், முரசொலி அலுவலகமாக இருந்தாலும் அல்லது சிறுதாவூர் அரண்மனையாக இருந்தாலும் பஞ்சமி நிலம் எது என்பது வெளிச்சத்துக்கு வரும்' என்றுதான் சொல்லியிருக்கிறேன்.''

''அசுரன் போன்ற ஹீரோயிச திரைப்படங்கள், தனி மனித சாகசத்தைத்தான் முன்னிறுத்துகின்றன என்று சமீபத்திய பேட்டி ஒன்றில், குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படியென்றால், 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன?''

பரியேறும் பெருமாள்
பரியேறும் பெருமாள்

''தலித்திய சிந்தனை கொண்ட படம் என்றுதான் 'பரியேறும் பெருமாளை'யும் நாம் கொண்டாடுகிறோம். ஆனால், கதை என்பது தனிப்பட்ட இரு குடும்பங்களுக்கிடையேயானதாகத்தான் காட்டப்படுகிறது. படத்தின் நாயகனும்கூட மக்களிடையே தொடர்பில்லாதவராகத்தான் இருக்கிறார். அத்தனை அவமானங்களைச் சந்தித்த பிறகும்கூட, அதைத் தன் உறவினர்களிடம்கூட பகிர்ந்துகொள்ளாமல், தனக்குள்ளேயே புதைத்துக்கொள்கிறார் அந்த ஹீரோ. இவையெல்லாம் சமூக எதார்த்தம் இல்லையே!

'இரண்டு சமூகங்களுக்கு இடையேயான உரையாடலாக படத்தின் காட்சிகளை மாற்றினால், சமூகத்தில் ஏதேனும் பிரச்னைகள், மோதல்கள் தோன்றிவிடுமோ' என்ற அச்சம்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், இது ஓர் எதிர்மறையான உளவியலை கட்டமைத்துவிடுகிறது. நீண்டகால ஒடுக்குமுறை நிலவிவரும் சூழலில், ஒரு தலித்திய சிந்தனை கொண்டவர்கூட, 'நமக்கெதுக்கு வம்பு' என்று ஒதுங்கிவிடக்கூடிய சூழல் இதனால் ஏற்பட்டுவிடுகிறது. ஆனால், சாதி இந்துக்கள் இதுபோன்ற விஷயங்களில் 'தனிப்பட்ட குடும்ப விஷயம்' என்று விட்டுவிடுவதில்லை. எனவே, இதில் எனக்கு உடன்பாடில்லை!

பரியேறும் பெருமாள் படத்தில், நாயகன் முகத்தில் சிறுநீர் கழிக்கிறார்கள், அவனது தந்தையை நிர்வாணமாக்குகிறார்கள், சாதிக்காகவே ஒரு நபர் தொடர்ந்து கொலை செய்கிறார். ஆனால், அவரும்கூட இறுதியில் தற்கொலை செய்துதான் மாண்டுபோகிறார். ஆக, எந்தவொரு இடத்திலும் நாயகன் பதிலடி கொடுத்தான் என்பதுபோன்ற நிலையே இல்லை... ஏன்? படத்தின் கதை என்பது இயக்குநர் முடிவு செய்வதுதானே!''