Published:Updated:

`அதிமுக பிளவால் திராவிட அரசியலுக்கே பாதிப்பா?’ - திருமா கருத்தும் பின்னணியும்!

திருமாவளவன்

அ.தி.மு.க பிளவுபடுவதால், அது அ.தி.மு.க-வுக்கு மட்டுமல்லாமல், திராவிட அரசியலுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி கூறியிருக்கிறார்.

`அதிமுக பிளவால் திராவிட அரசியலுக்கே பாதிப்பா?’ - திருமா கருத்தும் பின்னணியும்!

அ.தி.மு.க பிளவுபடுவதால், அது அ.தி.மு.க-வுக்கு மட்டுமல்லாமல், திராவிட அரசியலுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி கூறியிருக்கிறார்.

Published:Updated:
திருமாவளவன்

முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க-வின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வுக்குள் உட்கட்சி மோதல் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. டி.டி.வி.தினகரன், தனிக்கட்சி நடத்திவருகிறார். சசிகலா, விலகி தனி அரசியல் செய்துவருகிறார். அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் நடைபெற்றுவருகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், அ.தி.மு.க-வை பா.ஜ.க இயக்கிவருகிறது என்ற குற்றச்சாட்டும் தொடர்கிறது. மத்தியில் பா.ஜ.க அதிகாரத்தில் இருப்பதால், அ.தி.மு.க-வைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அது தொடர்ந்து முயல்வதாக விமர்சனம் வைக்கப்படுகிறது. மேலும், அ.தி.மு.க-வின் வாக்குவங்கியைக் கைப்பற்ற பா.ஜ.க வியூகம் வகுத்துச் செயல்படுவதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தொடர்ந்து பேசிவருகிறார். ஜி20 மாநாடு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த திங்கள்கிழமை டெல்லிக்குச் சென்ற திருமாவளவன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

 பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

அப்போது, “ஜெயலலிதா தலைமையில் செயல்பட்ட அ.தி.மு.க., தற்போது நான்கு குழுக்களாகச் சிதறியிருப்பது அவருக்குச் செய்யும் துரோகம். ஜெயலலிதாவைத் தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் செய்யும் துரோகம். அ.தி.மு.க-வை உடைப்பது அந்தக் கட்சிக்கு மட்டுமல்ல, தமிழ்நாடு திராவிட அரசியலுக்கு ஊறுவிளைவிப்பதாக அது அமையும். அதை, பா.ஜ.க பயன்படுத்தும் என்பதை அ.தி.மு.க தொண்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார் திருமாவளவன்.

திருமாவளனின் இந்தக் கருத்து குறித்து அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரான சிவசங்கரியிடம் பேசினோம். “அ.தி.மு.க நான்கு பிரிவுகளாக இருக்கிறது என்று திருமாவளவன் சொல்வது, அவரது கருத்து. அது ஒரு தவறான பார்வை. அ.தி.மு.க என்பது ஒரே ஒரு பிரிவுதான். அது, இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் இருக்கிறது. நான் வேறு கட்சி என்று டி.டி.வி.தினகரனே சொல்லிவிட்டார். அவர், அ.ம.மு.க என்று கட்சி நடத்துகிறார். அரசியல் அதிகாரத்துக்கே வராதவர் சசிகலா. அவரது பின்னால் எத்தனை தொண்டர்கள், எத்தனை எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள்... ஓ.பன்னீர்செல்வத்தின் பின்னால் எத்தனை எம்.எல்.ஏ-க்கள், எத்தனை மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள்?

சிவசங்கரி
சிவசங்கரி

இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என எல்லோரும் எளிய பின்புலத்திலிருந்து வந்தவர்கள். எங்கள் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இருப்பதால், கருத்துகளை எப்போதுமே பரஸ்பரம் பரிமாறிக்கொள்வோம். அவ்வளவுதான்.

சாமானிய மனிதர்களும் அரசியல் அதிகாரத்துக்கு வரலாம் என்ற நிலையை மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் ஏற்படுத்தினார். அவர் கட்டிய அ.தி.மு.க கோட்டையை, இன்னும் பெரிய கோட்டையாக உருவாக்கினார் ஜெயலலிதா. அவர்களைப் போன்ற பெரிய தலைவர்கள் இறக்கும்போது, சில சலசலப்புகள் வரத்தான் செய்யும். ‘எம்.ஜி.ஆரின் வாரிசு நான்தான்’ என்று ஜெயலலிதா நிரூபித்தார். ‘ஜெயலலிதாவின் வாரிசு நான்தான்’ என்பதை எடப்பாடியார் நிரூபித்துவருகிறார். ஜி20 வரை போய்வந்திருப்பவர் எடப்பாடி பழனிசாமிதான். இவரின் தலைமையில் மட்டுமே அ.தி.மு.க இருக்கிறது. சிறிய சலசலப்புகள் விரைவில் காணாமல்போய்விடும்” என்கிறார் சிவசங்கரி.

திருமாவளவன் முன்வைத்த கருத்து குறித்து இளஞ்சிறுத்தைகள் பாசறையின் செயலாளர் தா.மாலினிடம் பேசினோம்.

``தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு திராவிடக் கட்சிகள் வலுவாக இருப்பதால்தான், வலதுசாரி அரசியல் இங்கு எடுபடவில்லை. தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு பா.ஜ.க பல ஆண்டுகளாக முயன்றுவருகிறது. ஆனால், அதன் முயற்சி பலிக்கவில்லை. தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கு எதிராக ஒரு வலுவான அரசியலை முன்னெடுத்த ஜெயலலிதா, ‘மோடியா, இந்த லேடியா...’ என்று கேட்டார். ஆனால், அவரின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க தலைவர்கள் பா.ஜ.க-விடம் சரணடைந்துவிட்டார்கள்.

த.மாலின்
த.மாலின்

திராவிட இயக்கங்களைச் சிதைக்க வேண்டும் என்று வேலை செய்துவரும் பா.ஜ.க-வின் கட்டுப்பாட்டுக்குள் அ.தி.மு.க தலைவர்கள் போய்விட்டார்கள். இது, மிகவும் கவலைக்குரியது. அதைத்தான் வி.சி.க தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டிருக்கிறார். இந்த ஆபத்தை அ.தி.மு.க தலைவர்கள் உணர வேண்டும் என்ற அக்கறையுடன் எங்கள் தலைவர் பேசியிருக்கிறார். ஆனால், அதிகாரப் பசியுடன் இருக்கும் அ.தி.மு.க தலைவர்கள் இதை எந்த அளவுக்கு உணர்வார்கள் என்பது தெரியவில்லை” என்கிறார் தா.மாலின்.