கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஈடுபட்டிருந்தார். தற்போது இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில், காங்கிரஸ் முன்னிலை வகித்துவருகிறது.

இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர்," கர்நாடகாவில் பா.ஜ.க-வை வளர்க்கும் கட்சியாக ஜே.டி.எஸ் இருந்திருக்கிறது. பல மாநிலங்களில் பா.ஜ.க-வை வீழ்த்த விரும்பும் ஜே.டி.எஸ் போன்ற மாநிலக் கட்சிகள் தனியாக இயங்குவதுதான் தற்போதைய அரசியல் நெருக்கடியாக இருக்கிறது. இதை பிற காங்கிரஸ் அல்லாத மாநிலக் கட்சிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
பா.ஜ.க-வை எதிர்த்தால் மட்டும் போதாது. தேர்தல் களத்தில் வீழ்த்தியாக வேண்டும். அதற்கு எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும். அதற்காக, மாநிலக் கட்சிகள் காங்கிரஸுடன் இணக்கமாகப் பயணிக்க வேண்டும். அது ஒன்றுதான் நிபந்தனையாக இருக்கிறது. எனவே, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் கர்நாடகத் தேர்தலில், மக்கள் வாக்களித்திருக்கும் முறையைப் பார்த்து நல்ல முடிவுக்கு வர வேண்டும்.

ஜேடிஎஸ் மட்டும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருந்தால், கர்நாடகாவில் பா.ஜ.க-வை வேரோடு வெளியேற்றியிருக்கலாம். தமிழ்நாட்டில் தி.மு.க., அதன் தோழமைக் கட்சிகள் வலுவாக இருப்பதால், பா.ஜ.க-வால் இங்கு காலூன்ற முடியாது. அவர்கள் அ.தி.மு.க-வின் தோளில் ஏறிச் சவாரி செய்தாலும், அதற்கு வாய்ப்பில்லை. அதை வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் மக்கள் உணர்த்துவார்கள். இதில் கூடுதலாக அ.தி.மு.க-வும் பாதிக்கப்படவிருக்கிறது.
எனவே, இப்போதாவது அ.தி.மு.க எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அ.தி.மு.க - பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருந்தால் அ.தி.மு.க தேய்மானமடைய வாய்ப்பு இருக்கிறது. வலிமையாவதற்கு வாய்ப்பில்லை. வேண்டுமானால், எடப்பாடி போன்றவர்கள் ஒருசில இடங்களில் அவர்கள் விரும்புகிற வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், பெரும்பாலும் அது அ.தி.மு.க-வுக்கு பாதிப்பைத்தான் ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும். இதை நான் வலியுறுத்துகிறேன்.

வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் சிறுபான்மைச் சமூகம் மட்டுமல்ல, இந்துப் பெரும்பான்மை சமூகம் பா.ஜ.க-வைப் புறக்கணிப்பார்கள் என்பதற்கு ஆதாரமாக கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அமைந்திருக்கிறது. காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், யார் முதல்வர் என்ற போட்டி இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் போட்டி நிகழ்வது தவிர்க்க முடியாதது. ஆனால், அது எந்த வகையிலும் பா.ஜ.க வலுவடைவதற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது.
எனவே, தேசியத் தலைமை உடனடியாக இதில் தலையிட்டு விரைவில் முடிவெடுக்கும் என்று நான் நம்புகிறேன். காங்கிரஸ் கட்டுக்கோப்பாக இருப்பதன் மூலமாகத்தான் பா.ஜ.க-வை வீழ்த்த முடியும். இந்தத் தேர்தல் முடிவுகள் கட்டாயம் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். ஏனென்றால், பிரதமர் மோடி 40-க்கும் மேற்பட்ட முறை கர்நாடகாவுக்குச் சென்று, பல மணி நேரம் `ரோடு ஷோ’ எனும் பெயரில் மக்களைச் சந்தித்து பிரசாரம் மேற்கொண்டார். அமித் ஷா 20-க்கும் மேற்பட்ட முறை தேர்தல் பிரசாரத்துக்கு வந்தார்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலை ஒரு மாநில சட்டமன்றத் தேர்தலாக அவர்கள் பார்க்கவில்லை. நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாகத்தான் இந்தத் தேர்தலை மதிப்பீடு செய்திருக்கிறார்கள் என்பதைத்தான் அதிலிருந்து உணர முடிகிறது. பா.ஜ.க தலைவர் நட்டா திரும்பத் திரும்ப வந்து பிரசாரம் மேற்கொண்டார். சங் பரிவார் அமைப்புகள் மிகக் கடுமையாகக் களமிறங்கிப் பிரசாரம் செய்தார்கள். பிரதமர் மோடி உண்மையைத் திரித்து அவதூறு பரப்பினார்.
பஜ்ரங் பலி அமைப்பைத் தடை செய்வோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், பிரதமர் மோடி பஜ்ரங் என்றால் குரங்கு (அனுமன்) அந்த குரங்கை பலி கொடுப்போம் என்று காங்கிரஸ் பேசியது என்பதுபோல உண்மைக்கு மாறான தகவலைப் பரப்பி மதவெறியைத் தூண்டிப் பார்த்தார். அதையெல்லாம் தாண்டி இந்துச் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள், காங்கிரஸுக்கு ஆதரவு அளித்ததன் காரணமாகத்தான் இந்த வெற்றியைப் பெற முடிந்திருக்கிறது.

காங்கிரஸ் வெற்றி என்பது வெறும் சிறுபான்மைச் சமூகத்தினரால் மட்டும் பெற்ற வெற்றியல்ல. காங்கிரஸ் கட்சி இத்தனை இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது என்றால் அதில் சரிபாதிக்கும் மேலாக இந்துச் சமூகத்தின் வாக்குகளும் உள்ளன என்பதை நாம் அறிவோம். இதை சங் பரிவார் அமைப்புகள் உணர்ந்துகொள்ள வேண்டும். தங்களின் வெறுப்பு அரசியலைக் கைவிட வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கும், இப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கும் வேறுபாடு இருக்கிறது.
பா.ஜ.க ஒன்பது ஆண்டுகளாக ஆட்சி நடத்திவிட்டு, பத்தாவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் மக்களிடம் வெறுப்பையும் மனக்கசப்பையும்தான் பரப்பியிருக்கிறது. கடந்த முறை எதிர்க்கட்சிகளிடம் இருந்த ஒற்றுமை என்பது இப்போது வலுப்பெற்றிருக்கிறது. நிதிஷ் குமார் நேரடியாக மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். பா.ஜ.க-வை தோற்கவைப்பதற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம் எனவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என்பதை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். கடந்த ஆண்டுகளில் எதிர்க்கட்சிகளிடம் பெரிய இடைவெளி இருந்தது. இப்போது அந்த இடைவெளி வெகுவாகக் குறைந்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் அவருடைய பிறந்தநாள் அன்று பா.ஜ.க-வை வீழ்த்துவதுதான் என்னுடைய பிறந்தநாளுக்கான செய்தி எனத் தெரிவித்திருந்தார். கலைஞரின் நூற்றாண்டு விழா வரும் ஜூன் 12-ம் தேதி கொண்டாடப்படும் என எதிர்பார்க்கிறேன். அவரின் நினைவுக்கோட்டம் திருவாரூரில் திறக்கப்படவிருக்கிறது.
அனைத்திந்திய அளவில் தோழமைக் கட்சிகள் எல்லோரும் அழைக்கப்படுவார்கள். அந்த நிகழ்ச்சி நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும். எதிர்க்கட்சியை ஒருங்கிணைப்பதற்கு ஒரு தளமாக இது அமையும் என நம்புகிறேன். தி.மு.க அணியை பலவீனப்படுத்தக்கூடிய எந்தச் செயலிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஈடுபடாது. அப்படி ஈடுபடுவது பா.ஜ.க போன்ற சங் பரிவாரங்களுக்கு இடம் கொடுப்பதாக அமைந்துவிடும். தி.மு.க கூட்டணி மேலும் வலிமை பெற வேண்டும். தமிழ்நாட்டைக் கடந்து அகில இந்திய அளவில் அதை விரிவுபடுத்த வேண்டும் எனச் சொல்லி வருகிற இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
யாரையும் ரகசியமாகச் சந்திக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை. தேர்தல் களத்தில்கூட வெளிப்படையாகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசக்கூடியவன் நான். இதுவரை எந்தத் தேர்தலிலும், யாரையும் தனிப்பட்ட முறையில் நான் சந்தித்துப் பேசவில்லை. அப்படியான தேவையும் எனக்கு ஏற்படாது. அதில் நான் ஈடுபட மாட்டேன். அண்ணாமலை ஊழல் குறித்த பேச்சுக்கு மக்கள் பெரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஊடகங்கள்தான் அதற்குப் பெரும் முக்கியத்துவம் தருகின்றன. அது அரசியலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது" எனத் தெரிவித்திருக்கிறார்.