Election bannerElection banner
Published:Updated:

புதுச்சேரி: `கார்ப்பரேட்டுகள், சனாதனம்... மத்திய அரசை இயக்கும் 2 சக்திகள்!’ - கொதித்த திருமாவளவன்

திருமாவளவன் எம்.பி
திருமாவளவன் எம்.பி

``காங்கிரஸ்காரரான படேல், இந்தியாவில் சிதறுண்டு கிடந்த சமஸ்தானங்களை ஒன்றிணைத்தவர். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தடை செய்ததுடன், அது ஒரு தீய சக்தி என்றும் சொன்னவர். அவர்களை எதிர்த்தவரையே இன்று தங்களுக்குச் சாதகமாக்கி அரசியல் செய்துவருகின்றனர்” -திருமாவளவன் எம்.பி

புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாக கவர்னர் கிரண் பேடி மீது குற்றம்சுமத்தியிருக்கும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், நேற்று முதல் அவருக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றன. மறைமலை அடிகள் சாலை, அண்ணா சிலை அருகில் நேற்று காலை தொடங்கிய போராட்டம் இரவிலும் தொடர்ந்தது. முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், கூட்டணி கட்சித் தலைவர் அனைவரும் அங்கேயே இரவு உணவை முடித்துவிட்டு தரையில் படுக்கைகளை விரித்துப் படுத்தனர்.

போராட்டக் களத்தில் உணவருந்தும் முதல்வர் நாராயணசாமி
போராட்டக் களத்தில் உணவருந்தும் முதல்வர் நாராயணசாமி

நேற்று இரவு சாரல் மழை பெய்த நிலையிலும் குளிரைப் பொருட்படுத்தாமல் அனைவரும் அங்கேயே உறங்கினர். இன்று காலையிலும் தொடர்ந்த போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., ரவிக்குமார் எம்.பி ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது பேசிய திருமாவளவன் எம்.பி., ``மக்கள்நலனுக்கு எதிராகச் செயல்படும் கிரண் பேடியை உடனே திரும்பப்பெற வேண்டும் என மோடி அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழகத்துக்கு ஆளுநர் பதவியும், புதுச்சேரிக்கு துணைநிலை ஆளுநர் பதவியும் தேவையே இல்லை. நாடு முழுவதும் ஆளுநர் பதவிகளே தேவையில்லை என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இருக்கும்போது, நடுவில் இந்த கவர்னர் பதவி தேவையா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு வேண்டியவர்களுக்குப் பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்தப் பதவிகள். மோடிக்கு தேவையானவர்களுக்குப் பதவி கொடுக்க வேண்டுமென்றால், அவர்கள் வீட்டில்வைத்துப் பதவியை கொடுத்துக்கொள்ளுங்கள்.

போராட்டக் களத்தில் உறங்கும் முதல்வர் நாராயணசாமி
போராட்டக் களத்தில் உறங்கும் முதல்வர் நாராயணசாமி

துணிச்சலான அதிகாரி, நேர்மையான அதிகாரி என பெயரெடுத்த கிரண் பேடி, ஊழலை ஒழிக்கப்போகிறேன் என அன்னா ஹசாரேவுடன் கைகோத்தார். அப்போதிருந்த காங்கிரஸ் அரசுக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டத்துக்கு மறைமுகமாகச் செயலாற்றியவர் இவர். தொடர்ந்து பா.ஜ.க-வில் இணைந்து செயல்படத் தொடங்கியவுடன் அவரும் ஒரு சங்கி என்பது தெரியவந்தது.

பெரியார் சொல்வதைப்போல பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. சங்கி என்றால் சங் பரிவார் அமைப்புகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சர்தார் வல்லபாய் படேலுக்கு ரூ.3,000 கோடியில் சிலைவைத்தார்கள். காங்கிரஸ்காரரான படேல், இந்தியாவில் சிதறுண்டு கிடந்த சமஸ்தானங்களை ஒன்றிணைத்தவர்.

ஹிட்லர்போல சித்திரிக்கப்பட்ட கிரண் பேடி படம்
ஹிட்லர்போல சித்திரிக்கப்பட்ட கிரண் பேடி படம்

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தடைசெய்ததுடன், அது ஒரு தீய சக்தி என்றும் சொன்னவர். அவர்களை எதிர்த்தவரையே இன்று தங்களுக்குச் சாதகமாக்கி அரசியல் செய்துவருகின்றனர்.

கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி இந்தப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். இந்தப் போராட்டத்தால் மோடி, கிரண் பேடியை வாபஸ் பெற்றுவிடுவாரா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனெனில், மோடியும் ஒரு சங்கிதான்.

Vikatan

நீட், ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு போன்றவற்றில் அதிகம் பாதிக்கப்படுவது இந்துக்கள்தான். அனைத்துக் கட்சிகளிலும் பெரும்பான்மையாக இருப்பது இந்துக்கள்தான். அப்படியிருக்க தாங்கள் மட்டும்தான் இந்துக்களுக்காகப் போராடுகிறோம் என்று கூறி மதத்தைவைத்து அரசியல் செய்கிறார்கள். கார்ப்பரேட்டுகள், சனாதனம் என்ற இரண்டு சக்திகள்தான் மத்திய அரசை இயக்குகின்றன” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு