Election bannerElection banner
Published:Updated:

`சனாதனத்தை வேரறுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம்!' - தொல்.திருமாவளவன்

திருமாவளவன்
திருமாவளவன்

`முறைகேடுகளையோ, விதிமுறைகளுக்குப் புறம்பாக நடக்கும் ஆளும் கட்சியினரையோ கைதுசெய்ய தேர்தல் ஆணையத்தால் முடியாது. பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வலிமை தேர்தல் ஆணையத்துக்கு இல்லை' என திருமாவளவன் பேச்சு.

விழுப்புரத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய தொல்.திருமாவளவன், ``இந்தத் தேர்தல், அரசியல் அதிகாரத்துக்கான போரல்ல. `ஜனநாயகத்தின் கருத்தியல் போர்’ எனும் கொள்கை முழக்கத்தோடு தி.மு.க-வுடனான கூட்டணியில் நாங்கள் நிற்கிறோம். `சனாதனத்தை வேரறுப்போம்; ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்!' என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் வி.சி.க விடுக்கும் அறைகூவல். தமிழ் மண்ணில் சாதி உணர்வை வளர்த்து, மத உணர்வைத் தூண்டி, மதத்தின் பெயரால் சமூகத்தைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட முயலும் பா.ஜ.க-வின் உள்நோக்கத்தை மக்களுக்கு அம்பலப்படுத்துவதே என்னுடைய கொள்கை.

பாஜக என்பது ஓர் அரசியல் கட்சி அல்ல... ஆர்.எஸ்.எஸ் எனும் பாசிச இயக்கத்தின் அரசியல் பிரிவுதான் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ் கொள்கை கோட்பாடுகளைப் பின்பற்றி இயங்கும் அணி அது.
தொல்.திருமாவளவன்.
தேர்தல் அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சி.
தேர்தல் அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சி.

சமத்துவத்துக்கு எதிரான சனாதனத்தைத் தன் மூச்சாகக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, பா.ஜ.க-வின் மூலம் பெரும்பான்மையை முன்னெடுக்கிறது. மதத்தின் பெயரால். பெரும்பான்மையினர், சிறுபான்மையினராக இருப்பவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். இதுவே ஜனநாயகத்தின் சிறப்பம்சம். ஆனால், ஆர்.எஸ்.எஸ் வெறுப்பு அரசியலை மூலதனமாகக்கொண்டு, மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது. இதையே தன் செயல் திட்டமாகக் கொண்டிருக்கிறது. அவற்றை நடத்துவதற்காகவே பா.ஜ.க இருக்கிறது.

"குனிந்து போகும் அளவுக்கு பலவீனம் இல்லை" - 'தோழமை சுட்டுதல்' குறித்து திருமா!

இந்தியா முழுவதும் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைத்துவருகிறது. `மத உணர்வை வளர்க்க வேண்டுமானால், சாதி உணர்வை ஊட்ட வேண்டும்' என்பது அவர்களுடைய யுக்திகளில் ஒன்று. சாதியின் அடிப்படையில் இந்து சமூகத்தைப் பிளவுபடுத்துகிறார்கள். மதத்தின் அடிப்படையில் இந்திய சமூகத்தையே பிளவுபடுத்துகிறார்கள்!. இதுதான் அவர்களுடைய உயிர்மூச்சு.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களால் தமிழகத்தினுள் வர முடியவில்லை. காரணம், கலைஞர் மற்றும் ஜெயலலிதா எனும் இரு செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் இரு துருவங்களாக இருந்ததுதான். இன்று அவர்கள் இருவரும் இல்லாததால், அ.தி.மு.க முதுகில் ஏறி சவாரி செய்து, மதவாத அரசியலை நிலைநாட்டிவிடலாம் என்று களமிறங்கியுள்ளனர். மதவாத அரசியலுக்கு இங்கு இடமில்லை என்பதே தி.மு.க அணியிலுள்ள கட்சிகளின் நோக்கம். பா.ஜ.க ஒட்டுமொத்த நாட்டையே தனியார்மயமாக்க முடிவெடுத்திருக்கிறது. அதன் பினாமி அ.தி.மு.க., அந்த அணிக்குத் தலைமை தாங்குகிறது. அ.தி.மு.க-வை வீழ்த்துவது முதன்மையான சவால் அல்ல. பா.ஜ.க-வை ஒரு சக்தியாக இங்கு அணிதிரளவிடக் கூடாதென்பது ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு சவால்" என்றார்.

விழுப்புரம் தேர்தல் பிரச்சாரம்.
விழுப்புரம் தேர்தல் பிரச்சாரம்.

பின், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த தொல்.திருமாவளவன்,``அ.தி.மு.க-வின் கூட்டணி ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்துக்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் கூட்டணி. இது முறியடிக்கப்பட வேண்டுமென மக்களிடம் கேட்கிறோம். பா.ஜ.க-வை முன்னிறுத்தி அதையே தி.மு.க கூட்டணியின் போட்டிக் கட்சி என நினைத்து இந்தத் தேர்தலை ஒரு கருத்தியல் யுத்தமாகவே பார்க்கிறோம். தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தித்தரும் பணியை மட்டுமே செய்கிறது. முறைகேடுகளையோ, விதிமுறைகளுக்குப் புறம்பாக நடக்கும் ஆளும்கட்சியினரையோ கைதுசெய்ய தேர்தல் ஆணையத்தால் முடியாது. அப்பாவி மக்களின் சிறு தொகையைப் பறிப்பதையே அவர்களின் தேர்தல் பணியென நினைக்கிறார்கள். ஆளுங்கட்சியினர் வெளிப்படையாகவே செயல்பட்டுவருகின்றனர். அவர்களிடம் பணப்புழக்கம் அதிகமாகவே இருக்கிறது. அதைக் கட்டுப்படுத்தும் வலிமை தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. கருத்துக்கணிப்புகள் எங்களுக்குச் சாதகமாகவே கூறப்பட்டாலும் நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு