Published:Updated:

`அது யாரும் போட்ட பிச்சை அல்ல; சட்டம் தந்த உரிமை!'- `தேசம் காப்போம்' பேரணியில் திருமாவளவன்

வி.சி.க தலைவர் திருமாவளவன்

அரசியலமைப்புச் சட்டம் இல்லை என்றால் நாம் யாரும் இங்கு நடமாட முடியாது. அப்படிப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு புதிய அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டுவருவது என்பதுதான் பா.ஜ.க -வின் நீண்டகால திட்டம்.

Published:Updated:

`அது யாரும் போட்ட பிச்சை அல்ல; சட்டம் தந்த உரிமை!'- `தேசம் காப்போம்' பேரணியில் திருமாவளவன்

அரசியலமைப்புச் சட்டம் இல்லை என்றால் நாம் யாரும் இங்கு நடமாட முடியாது. அப்படிப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு புதிய அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டுவருவது என்பதுதான் பா.ஜ.க -வின் நீண்டகால திட்டம்.

வி.சி.க தலைவர் திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய தேசம் காப்போம் பேரணி, நேற்று மாலை திருச்சியில் நடைபெற்றது. சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைக் காரணம்காட்டி, போலீஸார் பேரணிக்கு அனுமதி மறுக்கவே, உயர் நீதிமன்ற அனுமதியுடன் பேரணிக்கான முன்னேற்பாடுகள் தொடங்கியது.

இதற்காக, திருமாவளவன் முதல்நாளே திருச்சி வந்துவிட்டார். இந்நிலையில், பேரணி அறிவித்திருந்த உழவர் சந்தை மைதானம் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம் நடத்திவரும்நிலையில், வி.சி.க பேரணியும் அங்கு நடைபெறுவது சரியல்ல என நினைத்த போலீஸார், முதல்நாள் மாலை திடீரென பேரணிக்கான இடத்தை மாற்றினர்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் பேரணி
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் பேரணி

முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திருமாவளவன், பிறகு பொதுமக்களுக்கு பிரச்னை ஏற்படாத வகையில் நிகழ்ச்சி நடத்திட சம்மதித்தார். அதன்படி, திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் பிரிவு சாலையிலிருந்து, கிராப்பட்டி தமிழ்நாடு சிறப்பு காவல்படை மைதான நுழைவ்வாயில் வரை சுமார் மூன்று கி.மீ தூரம் பேரணி நடைபெற்றது. இதுபோன்ற காரணங்களால் தொடர்ந்து பரபரப்பு நிலவியது.

இதனிடையே, தமிழகம் முழுவதிலும் இருந்து அக்கட்சித் தொண்டர்கள், காலை முதலே மேளதாளம் முழங்க பேரணி நடந்த பகுதியில் குவிந்தனர். இதனால் திருச்சி மாநகரம் மற்றும் சென்னை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

மேடையில்  திருமா
மேடையில் திருமா

சரியாக, மதியம் 3 மணியளவில் பேரணி தொடங்க, திறந்த வேனில் நின்றபடி திருமாவளவன் கோஷங்களை முழங்கிய படியே வந்தார். இறுதியாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன், பொருளாளர் முகமதுயூசுப், விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், வன்னியரசு, தங்கதுரை, கனியமுதன் உள்ளிட்டோர் சகிதமாக மேடையேறினார் திருமாவளவன்.

இந்தக் கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும், இட ஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்க மத்திய அரசு சட்ட மசோதா கொண்டுவர வேண்டும், இட ஒதுக்கீடு உரிமையை இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் மேடையில் பேசிய திருமாவளவன், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாங்கள் ஏன் எதிர்க்கிறோம் என்றால், நாங்கள் தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கரின் பிள்ளைகள். நாங்கள் பதவி வெறி பிடித்தவர்களாக இருந்திருந்தால், மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமியின் காலடியில் கிடந்திருப்போம். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்டவை இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானதல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது. சங்பரிவார் கும்பலின் சதித்திட்டம் ஒவ்வொன்றாக அரங்கேற்றப்பட்டுவருகிறது

ரூபாய் 3,000 கோடி செலவில் சர்தார் வல்லபபாய் படேலுக்கு பா.ஜ.க சிலை வைத்துள்ளது. அந்த படேல் தடை செய்த இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். அதன் ஒரு அரசியல் அணிதான் பா.ஜ.க. அவர்களின் முதல் பகையும் வெறுப்பும் அரசியலமைப்பு சட்டத்தின்மீதுதான். அரசியலமைப்பு சட்டம் இல்லை என்றால், நாம் யாரும் இங்கு நடமாட முடியாது. அப்படிப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, புதிய அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டுவருவது என்பதுதான் பா.ஜ.க-வின் நீண்டகால திட்டம். இதற்காக வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே முயன்றனர். அதற்கு அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் ஒப்புக்கொள்ளவில்லை.

பட்டியலின மக்களை நீதிபதி ஆக்கியது தி.மு.க போட்ட பிச்சை என பெரியார் பாசறை வழிவந்த திராவிட பாரம்பர்யம் கொண்ட ஆர்.எஸ்.பாரதி பேசியிருப்பது அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. பட்டியலின மக்கள் நீதிபதிகள் ஆவது யார் தந்த பிச்சையும் அல்ல. அரசியல் சட்டம் தந்த உரிமை. வெறும் கோஷம்போடும் கும்பலாக இருப்போம் எனக் கனவு காணாதீர்கள். கோட்டையில் ஒரு நாள் கொடியேற்றுவோம். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கும்.

என்.பி.ஆர் நடைமுறைக்கு வந்தால், வாக்குரிமை பறிக்கப்படும். இதனால் 8 கோடி பேரின் வாக்குரிமை பறிக்கப்படும், நாடற்றவர்களாக்கப்படுவார்கள். இவர்களை அடைப்பதற்காக 26 ஆயிரத்து 658 திறந்தவெளி சிறைச்சாலைகள் அமைக்கப்படும். இதற்காக 12 லட்சம் கோடி செலவாகும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்தச் சட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு இடமில்லை. ஆனால், அவர்களை ஏமாற்றும் நோக்கில் அதி.மு.க மற்றும் பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை சட்டம் வேண்டும் என இரட்டை வேடம் போடுகின்றன. இவர்களைத் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

திருமாவளவன்
திருமாவளவன்

இந்தச் சட்டம், தேசத்திற்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் மட்டுமல்லாமல், சமூக, மத நல்லிணக்கம், ஜனநாயகம் உள்ளிட்ட அனைத்துக்கும் ஆபத்தானது. வரும் மார்ச் 4-ம் தேதி, டெல்லியில் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தேசிய அளவிலான பேரணி நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க 5 தென் மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு மார்ச் 4-ம் தேதி பயணமாக உள்ளோம். அதுமட்டுமல்லாமல், தேசம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளிலிருந்து தேசத்தைப் பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்" என்றார்.