Published:Updated:

`நேராக ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள்..!' - விக்கிரவாண்டியில் தகித்த திருமா

Thirumavalavan
Thirumavalavan

`பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்தால் தோற்றுவிடுவோம் என்ற பயம் அ.தி.மு.க-வுக்கு இருக்கிறது' என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று இரவு நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார் தொல்.திருமாவளவன். கூட்டத்தில் அவர் பேசியதாவது:

Vikkiravandi by election campaign
Vikkiravandi by election campaign

``விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாதிக் கட்சி என்றும் அது சேரும் கூட்டணி வெற்றி பெறாது என்றும் ஒரு கும்பல் 2001-ம் ஆண்டு முதல் அவதூறு பரப்பி வருகிறது. அதுகுறித்து மறைந்த தலைவர் கருணாநிதியிடம் நான் கூறியபோது, அதுகுறித்தெல்லாம் கவலைப்படத் தேவையில்லை என்றார். அதேபோல 2009-ம் ஆண்டு தி.மு.க கூட்டணியில் காங்கிரஸும் வி.சி.க-வும் மட்டுமே இடம்பெற்றிருந்தது. அந்தத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு நான் வெற்றிபெற்றேன்.

தலித் மக்கள் அல்லாத பலர் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். விழுப்புரத்தில் நின்ற ரவிக்குமாருக்கும் சிதம்பரத்தில் நின்ற எனக்கும், தற்போது வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூக மக்களும் ஆதரவளித்து வெற்றிபெறச் செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் அற்பர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் அதைப் பெரியளவில் நான் பார்ப்பதில்லை.

எந்தவிதமான போராட்டங்களையும் முன்னெடுக்காமல், வழக்குகளைச் சுமக்காமல், காவல் நிலையங்களுக்குச் செல்லாமல், சிறைக்குச் செல்லாமல் நேராக அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைக்கும் துணிச்சல் சினிமாக்காரர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது.
திருமாவளவன்

ஆனால், அதன் மூலம்தான் பொய்யான பரப்புரையைத் திட்டமிட்டு செய்கின்றனர். மக்களவைத் தேர்தலின்போது, விழுப்புரம் தொகுதியில் திருமாவளவன் பேசினால் ஓட்டு விழாது என்றும் அதனால் அவர் வரக்கூடாது என்றும் தி.மு.க தரப்பில் கூறியதாக ஒரு அவதூறைப் பரப்பி கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்தனர். தி.மு.க-வும் வி.சி.க-வும் கொள்கை அடிப்படையில் இணைந்திருப்பதால் எங்களைப் பிரிக்க முடியாது.

தி.மு.க தலைவர்கள் எதிர்பார்ப்பதைப்போல் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக இந்த இடைத்தேர்தலில் நாம் பணியாற்ற வேண்டும். நம்மைப் பிடிக்காதவர்கள் சாதி உணர்வைத் தூண்டியும் வன்முறையை ஏற்படுத்தியும் வாக்குகளைப் பெற முயற்சி செய்வார்கள். அதற்குள் நாம் சிக்கிவிடக் கூடாது. சாதிப் பெயரைச் சொல்லாமல் கடந்த 30 ஆண்டுகளாக நாம் கட்சி நடத்தி வருகிறோம். தோட்டத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. என்னை அழைத்த தோட்டக்காரர், தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியே வாருங்கள் அ.தி.மு.க-வில் 2 சீட்டுகள் வாங்கித்தருகிறேன் என்றும் தி.மு.க ஊழல் கட்சி மதுவிலக்குக்கு எதிரானது. அதனால் தி.மு.க-வுக்கு முட்டுக்கொடுப்பதைவிட்டு விலகி வாருங்கள் எனப் பலமுறை வசியப்படுத்தினார்.

இப்படியான வசியப் பேச்சுகள் பலமுறை நடைபெற்றிருக்கிறது. அப்போதெல்லாம் அந்த இடத்தில் இருந்து வெளியே வருவதற்காக 2 நாள்கள் அவகாசம் கொடுங்கள் என்று ஒரு காரணத்தைக் கூறிவிட்டு நகர்ந்துவிடுவோம்.

VCK Meeting
VCK Meeting

அதை நான் ஏற்காததால்தான் அவருக்கு என் மீது கோபம். தமிழகத்தில் தி.மு.க இல்லையென்றால் யார் ஆட்சிக்கு வருவார்கள்... அ.தி.மு.க ஆட்சிக்கு வருவதும் மோடி ஆட்சிக்கு வருவதும் ஒன்றுதான். அதனால்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மோடிக்கு எதிராக நிற்கிறது.

ஒவ்வொரு மாதமும் தமிழக அரசு பல கோடிகளை மத்திய அரசுக்கு கப்பமாகக் கட்டுகிறது என்று சமூக வலைதளங்களிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வருகின்றன. ஒருகட்டத்தில் இவர்களால் கப்பம் கட்ட முடியவில்லை. அதனால் இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று அ.தி.மு.க நினைக்கிறது. இன்னும் பி.ஜே.பி இவர்களுக்கு ஆதரவே தெரிவிக்கவில்லை. பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்தால் தோற்றுவிடுவோம் என்ற பயம் அ.தி.மு.க-வுக்கு இருக்கிறது. அவர்களுடன் கூட்டணி வைத்தாலும் தோற்கத்தான் போகிறீர்கள், வைக்கவில்லை என்றாலும் தோற்கத்தான் போகிறீர்கள். 2020-ல் நடிகர் ரஜினி வேறு அரசியலுக்கு வரப்போகிறாராம்.

Vck meeting
Vck meeting

எந்தவிதமான போராட்டங்களையும் முன்னெடுக்காமல், வழக்குகளைச் சுமக்காமல், காவல் நிலையங்களுக்குச் செல்லாமல், சிறைக்குச் செல்லாமல் நேராக அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைக்கும் துணிச்சல் சினிமாக்காரர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது.

ஊடக வெளிச்சத்துக்காக அவரை இங்கு இறக்க நினைக்கிறார்கள். ஒரு நடிகரோ நடிகையோ ஒரு வார்த்தையைக் கூறிவிட்டால் 3 நாள்கள் அதை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வார்கள். திரைப்படத்தில் நடித்துப் பெயரெடுத்துவிட்டால் நடிகர்களுக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் உருவாகிவிடுகிறது. தமிழக மக்கள் சினிமா மோகத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். 2020 தேர்தலில் எத்தனை நடிகர்கள் வந்தாலும், எத்தனை ஸ்டார்கள் வந்தாலும் தி.மு.க-வின் இந்தக் கூட்டணி தொடர்ந்தால் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு