Published:Updated:

``அதிமுக என்னை வளர்த்திருக்கிறது; நானும் அதிமுக-வை வளர்த்திருக்கிறேன்” - திருநாவுக்கரசர்

திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்

“கூட்டணி என்பது அவசியத்துக்காகத்தான் வைத்துக்கொள்ளப்படுகிறது. திமுக-வுக்கு காங்கிரஸ் தேவை, எங்களுக்கும் திமுக தேவை.” - காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்.

``அதிமுக என்னை வளர்த்திருக்கிறது; நானும் அதிமுக-வை வளர்த்திருக்கிறேன்” - திருநாவுக்கரசர்

“கூட்டணி என்பது அவசியத்துக்காகத்தான் வைத்துக்கொள்ளப்படுகிறது. திமுக-வுக்கு காங்கிரஸ் தேவை, எங்களுக்கும் திமுக தேவை.” - காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்.

Published:Updated:
திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்

அதிமுக ஜா-ஜெ என்று பிளவுபட்டிருந்த காலத்தில் ஜெயலலிதாவின் தளபதிகளில் ஒருவராகக் களமாடியவர் திருநாவுக்கரசர். தற்போது காங்கிரஸ் எம்.பி-யாக இருந்தாலும் அதிமுக விவகாரங்களை உன்னிப்பாக கவனிப்பவர் என்கிற முறையில், அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

``அதிமுக-வில் முன்னணி, முக்கியத் தலைவராக இருந்திருக்கிறீர்கள். இப்போது அந்தக் கட்சியில் நடக்கும் விவகாரங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

``அதிமுக-வில் பல ஆண்டுகள் பணியாற்றியவன். அதிமுக என்னை வளர்த்திருக்கிறது. நானும் அதிமுக-வை வளர்த்திருக்கிறேன். இளைஞர் அணியில் நான் போட்ட நிர்வாகிகள் இ.பி.எஸ் அணியிலும் இருக்கலாம், ஓ.பி.எஸ் அணியிலும் இருக்கலாம். என்னால் கல்லூரிகளிலிருந்து அடையாளம் கண்டு கொண்டுவரப்பட்டவர்கள்தான் இன்று பல தலைவர்களாக இருக்கிறார்கள். என்னுடைய சமகாலத்தில் அண்ணன் பண்ருட்டி ராமசந்திரன், பொன்னையன் போன்றவர்கள்தான் மிச்சம் இருக்கிறார்கள். பல பேர் விலகிவிட்டார்கள். சிலர் தி.மு.க பக்கம் போய்விட்டார்கள், சிலர் இயற்கை எய்திவிட்டார்கள். எனவே இப்போது இருக்கிற அ.தி.மு.க அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.

எங்களுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர்கள், இளைஞர் அணிச் செயலாளர்களாக இருந்தவர்கள்தான் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்-ஸிலிருந்து பலர். சிலர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பார்த்திருக்கலாம். சிலர் கையைத் தொட்டிருக்கலாம். சிலர் அவரின் பேச்சைத் தூர இருந்து கேட்டிருக்கலாம். அவரைப் பார்க்காதவர்கள்கூட இருக்கலாம். அது தவறு கிடையாது. ஆனால், இந்த தலைமுறையில், இப்போது இருக்கிற தலைவர்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க-வை உருவாக்கிய தலைவர்களோடு ஒப்பிட முடியாது. அதேநேரத்தில் இன்றைக்கு நடந்துகொண்டிருக்கும் இந்தப் பிரச்னையில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்களிடையே யாருக்குப் பெரும்பான்மை இருக்கிறதோ அவர்கள்தான் வெற்றிபெற முடியும். அப்படி பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சிக்குத் தலைமை ஏற்றாலும், உடன்படாத இன்னொரு தலைவர் மக்களைச் சந்திக்கும்போது மாற்றம் நேரலாம். அந்த இருவரில் யாருக்கு மக்கள் இடத்தில் ஆதரவு இருக்கிறதோ அவர்தான் இந்தக் கட்சியின் தலைவராக வருங்காலங்களில் செயல்பட முடியும்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெயலலிதா - திருநாவுக்கரசர் - கே.கே.எஸ்.எஸ்.ஆர்
ஜெயலலிதா - திருநாவுக்கரசர் - கே.கே.எஸ்.எஸ்.ஆர்

``உங்களுக்கும் இது போன்ற இரட்டைத் தலைமை அனுபவம் இருக்கிறதல்லவா?”

``ஆம்... எனக்கும் ஜெயலலிதாவுக்கும் கருத்து வேறுபாடு வந்தபோது அந்த 26 எம்.எல்.ஏ-க்களில் 8 எம்.எல்.ஏ-க்களும், 14 எம்.பி-க்களில் 7 எம்.பி-க்களும் என்னோடு வந்தார்கள். சட்டமன்றத்தில் அ.தி.மு.க ஜெயலலிதா, அ.தி.மு.க திரு என்று சபநாயகர் வாய்ப்பளித்தார். இரு அணியும் தேர்தல் ஆணையத்தை அணுகினோம். அதில் பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயலலிதா பின்னே இருந்ததால் சின்னம் அவர்களுக்குக் கிடைத்தது. தொடர்ந்து பொதுச்செயலாளராக செயல்பட முடிந்தது. அதற்கு மேல் அ.தி.மு.க என்று நான் சொல்ல முடியாது என்பதால் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க என்று வைத்துக்கொண்டேன். இதுதான் கடந்தகாலப் பார்வை. யாருக்கு பெரும்பான்மை, தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கிடைக்கிறதோ அவர்தான் அந்தக் கட்சியின் தலைமையாகவும், கட்சியை வழிநடத்தவும் முடியும்.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``தமிழ்நாட்டில் இன்றைக்கு வளர்ந்துவரும் பா.ஜ.க உட்பட பல கட்சிகள் சமூகப் பின்புலம்கொண்ட தலைமையைவைத்து அதிலிருந்து வாக்குவங்கியை உருவாக்கி, தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்துகின்றன என்கிறார்கள். அந்த இடத்தை காங்கிரஸ் தவறவிடுவிட்டதா?”

``இந்தியா சாதிக் கட்டமைப்பு உள்ள நாடு. இருந்தாலும் சாதியை மட்டும் முழுமையாக வைத்து அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வி நிர்ணயம் செய்யப்படுவதில்லை. அதேநேரத்தில் சாதிக்கான பங்கு இல்லாமலும் இல்லை. இருக்கிறது. சமீபகாலமாக அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்விகளில் பணத்துக்கு எப்படி ஒரு பங்கு இருக்கிறதோ, அதேபோல்தான் இதுவும். இது தவிர்க்க முடியாது. ஒரு மதத்தை முன்னிலைப்படுத்தி எப்படி அரசியலில் வெற்றிபெற முடியாதோ, அதேபோல் ஒரு சாதியை மட்டும் முன்னிலைப்படுத்தி வெற்றிபெற முடியாது என்பதும் இருக்கிறது. எல்லோருக்கும் பிரதிநிதித்துவம் கொடுத்து ஆட்சியிலும் கட்சியிலும் வாய்ப்புகள் கிடைக்கும்போதுதான் அது சமமான வளர்ச்சியாக இருக்க முடியும். இல்லாவிட்டால் அதுவே ஒரு கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாகிவிடும்.”

``தமிழ்நாட்டில் ‘திராவிடக் கட்சிகளின் தோளில் ஏறித்தான் பயணிக்கின்றன தேசியக் கட்சிகள்’ என்று தொடர் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனவே?”

``கூட்டணி என்பது அவசியத்துக்காகத்தான் வைத்துக்கொள்ளப்படுகிறது. திமுக-வுக்கு காங்கிரஸ் தேவை, எங்களுக்கும் திமுக தேவை. திமுக தமிழ்நாட்டில் பெரிய கட்சி. எல்லா இடங்களிலும் அமைப்புரீதியாக பலமாக இருக்கக்கூடிய கட்சி. ஆனால் திமுக-வுக்கும் காங்கிரஸ் தேவையாக இருக்கிறது. அதேபோல் இந்திய அளவில் காங்கிரஸ் பெரிய கட்சியாக இருந்தாலும், தமிழ்நாட்டு அளவில் சின்னக் கட்சியாக இருப்பதால் எங்களுக்கும் திமுக தேவையாக இருக்கிறது. இது எங்களுக்கு மட்டுமல்ல, எதிர் முகாமில் இருப்பவர்களுக்கும் இதேநிலைதான். தேவைகள் அடிப்படையில் இருவர் சேர்ந்து பயணிக்கிறோம். அதற்காக இன்னொருவர் தோளில் ஏறி, தொற்றிக்கொண்டு போகிறார் என்பதெல்லாம் சரியான வார்த்தை இல்லை.”

திருநாவுக்கரசர் வாழ்த்து கூறியபோது...
திருநாவுக்கரசர் வாழ்த்து கூறியபோது...

``இந்துத்துவா குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு?”

``இன்று எல்லாக் கட்சிகளும் மதங்களை-சாமிகளை தீவிரமா எதிர்ப்பதோ அல்லது ஆன்டி இந்துத்துவாவாகவோ இருப்பதில்லை. அப்படி யாரும் அரசியல் நடத்த முடியாது. சிறுபான்மை மக்கள் வேண்டும்... அதேநேரத்தில் பெரும்பான்மை மக்களும் வேண்டும். எனவே அரசியல்ரீதியாக வாக்கு வாங்க வேண்டும் எனும்போது தங்களது வேகத்தைக் குறைத்துக்கொள்கின்றனர். சில விஷயங்களில் சமரசமும் செய்யவேண்டியிருக்கிறது. பெரியார் பேசினார் என்றால் அவர் ஓட்டுக் கேட்கவில்லை. அதே வேலையில் ஓர் ஆட்சி மதச்சார்புடைய ஆட்சியாகவும் இருக்கக் கூடாது. எல்லா மதங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சாதி அமைப்பு, மதப் பின்னணி கொண்டும் சில கட்சிகள் செயல்பட்டுக்கொண்டு, `இல்லை’ என்று வெளியே சொல்லலாம். ஆனால், அதன் கட்டமைப்பு, நிர்வாகிகள், செயல்பாடுகள், யாரைச்சார்ந்து யாருக்காக அரசியல் செய்கிறார்கள் என்று பார்த்தால் ஒருசில கட்சிகளுக்கு அதுதான் முதுகெலும்பு, அஸ்திவாரமாக இருக்கும். இங்கு எல்லா மொழியும், மதமும், சாதியும் சமம்தான். அவரவர் பிரதிநிதித்துவத்துக்கு ஏற்ப அவரவர்களுக்கு உரிமைகளும், சலுகைகளும், வளர்ச்சிக்கான பலன்களும் கிடைக்க வேண்டும். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி எல்லோரையும் பொதுவாக நடத்தக்கூடிய கட்சியாக இருக்கிறது.”

`` `சமீபத்தில் ராகுல் காந்தி விசாரணைக்காகச் சென்றபோது நடந்த போராட்டம்போல், மக்கள் பிரச்னைக்கு காங்கிரஸ் நடத்தியிருக்கிறதா?’ என்கிற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே..?”

``இது உணர்ச்சிபூர்வமாக ஏற்படக்கூடிய விஷயம். சித்தாந்தரீதியாக, கொள்கைரீதியாக, பொருளாதாரரீதியாக நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் வேறு. உணர்ச்சியின் அடிப்படையில் நடக்கும் விஷயம் வேறு. அதேவேளையில் ஜி.எஸ்.டி., வேலைவாய்ப்பின்மை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இந்துத்துவா முன்னிறுத்தப்பட்டு சிறுபான்மை மதத்தினருக்கு எதிராகச் செயலாற்றும்போது, விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், தலித் பிரச்னைகள், விலைவாசி உயர்வு... என மக்கள் சந்திக்கும் அடிப்படைப் பிரச்னைகளிலிருந்து பெரிய பிரச்னைகள் வரை ஒவ்வொன்றுக்கும் முதல் குரல் கொடுத்ததோடு, களத்திலும் போராடியவர் ராகுல் காந்தி. அகில இந்திய அளவில் பிரதான எதிர்க்கட்சியின் தலைவர், அடையாளம். அவருக்கே பிரச்னை வரும்போது தொண்டர்கள் உணர்ச்சிவசப்படுவது, எல்லா இடங்களிலும் போராடுவது இயற்கை.”

ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி
ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி

``ராகுல்மீது நடத்தப்பட்ட விசாரணை அரசியல் காரணங்களுக்காக மட்டுமா?”

``ஆம்... மோடியை ஒவ்வொரு கூட்டத்திலும் விமர்சிக்கும்போது  ‘நான் ஊழலற்றவன். அதனால் யாருக்கும் பயப்படவேண்டியதில்லை. என்னை யாரும் அச்சுறுத்த முடியாது’ என்று பேசுவார். அதற்காகவே மக்கள் மத்தியில் இவர்மீதும் தவறு இருக்கிறது என்று காட்டிக்கொள்வதற்காக ஏழு நாள்கள், ஐம்பது மணி நேரத்துக்கு மேல் விசாரணை என்கிற பெயரில் மன உளைச்சலைக் கொடுத்திருக்கிறார்கள். எந்த நாட்டிலும், சர்வாதிகாரிகூட சம அந்தஸ்தில் இருக்கும் தலைவரை இதுபோல் மோசமாக நடத்த மாட்டார். இதனால் நம் நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குறியாகியிருக்கிறது.”

``தொடர் தோல்விகளைச் சந்தித்துவரும் காங்கிரஸை மீட்டெடுக்க என்ன வழி?”

``தேர்தலில் தோல்வியடைந்த பிறகு ராகுல் காந்தி தன் பதவியை ராஜினாமா செய்து, `மற்றவர்கள் யாராவது வழிநடத்துங்கள்’ என்று ஒரு வாய்ப்பும் கொடுத்தது ஜனநாயகப் பண்பு. ஆனால், எல்லா மாநிலங்களிலும் இருக்கக்கூடிய தலைவர்கள், மக்கள், தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுவான தலைவர்கள் யாரும் இல்லையே... இந்தச் சூழ்நிலையில் மீண்டும் அவரே தலைமை ஏற்று நடத்த வேண்டும். ரோட் ஷோ, மக்களைச் சந்திப்பது எனப் பயணங்களைக் கடுமையாக மேற்கொண்டு கட்சியை வேகப்படுத்தினால்தான் இலக்கை நோக்கிப் பயணிக்க முடியும். அவரும் தலைமை ஏற்காமல், சோனியா காந்தி அம்மாவும் பிரசாரம் செய்யாமல் யாரை முன்னிலைப்படுத்தி தொண்டர்கள் கட்சியை பலப்படுத்த முடியும்... மக்களைச் சென்றடைய முடியும்... இதுவே சரியான தருணம். ராகுல் காந்தி இனியும் காலம் தாழ்த்தக் கூடாது. அவர் தலைமைப் பொறுப்பை ஏற்று, நாடு முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.”