Published:Updated:

`இடைத்தேர்தல்களால் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதில்லை!' - திருநாவுக்கரசர்

``தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத் தேர்தல்களால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் எதுவும் வரப்போவதில்லை. இருந்தாலும் மக்கள் ஆட்சிகளை எடை போடக்கூடிய தேர்தல் இது”என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், ``மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் பா.ஜ.க அரசு, அளித்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை மக்களுக்காக நிறைவேற்றவில்லை. நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளோ, புதிய தொழில் வாய்ப்புகளோ கிடையாது. எல்லாதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

அதனால், மத்திய அரசுக்கு பாடம் புகட்டும் விதமாகவும், பா.ஜ.கவின் பினாமி அரசாகவும், ஊழல் அரசாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க அரசுக்கு பாடம் புகட்டும் விதமாகவும் மக்கள் இந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்களில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். தமிழகத்தில் நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தல்களால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் எதுவும் வரப்போவதில்லை. இருந்தாலும் மக்கள் ஆட்சிகளை எடை போடக்கூடிய தேர்தல் இது. ஆட்சியாளர்கள் செய்த தவறுகளைக் கண்டிக்கக் கூடிய விதத்தில் மக்கள் வாக்களிப்பார்கள்.

“ராதாபுரம் நிலை நமக்கும் வந்தால்..?” - திகிலூட்டும் தேர்தல் முடிவுகள்

இரண்டாவது முறையாக மத்தியில் ஆளும் பொறுப்பை ஏற்ற பிரதமர் மோடி, முழுமையாக சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். நாடு முழுவதும் இருக்கக்கூடிய தவறுகளை சுட்டிக்காட்டி கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது வழக்கு போடுவது என்பது கண்டனத்திற்குரியது. இது கருத்து சுதந்திரத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நடக்கிற தாக்குதல். பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக வழக்கு போடுவது என்றால் இது ஜனநாயகமா? அல்லது சர்வாதிகாரமா? பொதுப்பணித்துறை முதல் நெடுஞ்சாலைத்துறை வரை எல்லாத் துறைகளிலும் 15 முதல் 18 சதவிகிதம் வரை கமிஷன்கள் இல்லாமல் வேலை நடைபெறுவதில்லை.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

இதிலிருந்து பா.ஜ.கவுக்கும் பங்கு போகிறது. அ.தி.மு.கவின் பங்குதாரராகதான் பா.ஜ.க செயல்படுகிறது. அதனால், மாநில அரசின் ஊழல்களை மத்திய அரசும் கண்டு கொள்வதில்லை. தற்போது தேர்தல் நடைமுறைகள் மாறிக்கொண்டே வருகிறது. தேர்தல் என்பது வியாபாரமாகிவிட்டது. மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் தேர்தலில் இன்னும் நிறைய சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்.

இடைத்தேர்தல் கள நிலவரம்... உற்சாக அ.தி.மு.க... உறக்கத்தில் தி.மு.க!

இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலின்போது போலீஸாரின் உதவியுடன் பணப்பட்டுவாடா நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ராதாபுரம் தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை பொறுத்து தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்ட அப்பாவு வெற்றி பெறுவார் என்றே தோன்றுகிறது. ஆனால், இதனை நீதிமன்றமே உறுதி செய்ய முடியும்.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

விரைவில் நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வேண்டும். சீன அதிபர், பிரதமர் மோடி சந்திப்புக்கு டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிமன்றம் காட்டிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தாத வகையில் அமைக்க வலியுறுத்தியுள்ளது. ஆனால், வரவேற்பு பேனர்கள் எதுவும் வைக்கவேண்டாம் என பிரதமர் மோடி சொல்லியிருந்தால் அது பாராட்டத்தக்க விஷயமாக இருக்கும். ஆனால் அவ்வாறு அவர் எதையும் சொல்லவில்லை” என்றார்.