Published:Updated:

திருவள்ளூர்: யாருக்கு மா.செ பதவி? - அ.தி.மு.க-வில் அமைச்சர்களுக்குள் கடும்போட்டி

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

திருவள்ளூர் மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்படவுள்ள அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவியை பெற அமைச்சர் பாண்டியராஜனுக்கும் அமைச்சர் பெஞ்சமினுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

சென்னை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஐவர் குழு உறுப்பினர்களான அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதில், நிர்வாக ரீதியாக மாவட்டங்களைப் பிரிப்பது, புதிய மாவட்டச் செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் நியமிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலுக்குப்பின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் பெஞ்சமின்
அமைச்சர் பெஞ்சமின்

ஐவர் குழு ஆலோசனைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க கட்சியினரின் தங்களின் தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி வருகின்றனர். கட்சித் தலைமையிடம் பதவி கேட்டு ஏராளமானவர்கள் தங்களின் பயோ டேட்டாக்களை அனுப்பி வருகின்றனர். இன்னும் சிலர் கட்சித் தலைமையில் முடிவெடுக்கும் நிர்வாகிகளிடம் நெருக்கத்தைக் காட்டிவருகின்றனர். 3 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கலாம் என ஐவர் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போதைய மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையைவிட கூடுதல் மாவட்டச் செயலாளர் பதவிகள் உருவாகும். அந்தப் பதவிகளைப் பிடிக்க முன்னாள் நிர்வாகிகள் முயற்சி செய்துவருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவெற்றியூர் ஆகிய 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இங்கு 5 சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் பதவி என 2 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்களாக எம்.எல்.ஏ சிறுணியம் பலராமனும், எம்.எல்.ஏ அலெக்ஸாண்டரும் இருந்துவருகின்றனர்.

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்
Vikatan

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைச்சர்களாக மாஃபா என்றழைக்கப்படும் பாண்டியராஜனும் பெஞ்சமினும் உள்ளனர். புதிய மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்கும் ரேஸில் இவர்கள் இருவரும் உள்ளனர். இவர்களைத் தவிர மாதவரம் மூர்த்தி, ரமணா, கோ.அரி ஆகிடியோரும் மாவட்டச் செயலாளர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ``சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி புதிய மாவட்டச் செயலாளர் பணியிடங்கள் உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2 அல்லது 3 சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் நியமிக்கப் படவுள்ளனர். அதன்மூலம் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும். பகுதிச் செயலாளர் பதவியையும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் புதிய பதவிகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது" என்றார்.

இதுகுறித்து அமைச்சர் பாண்டியராஜனின் ஆதரவாளர்கள் கூறுகையில், ``ஆவடி சட்டமன்றத் தொகுதியில் பாண்டியராஜன் போட்டியிட்டபோது தொடங்கிய உள்ளடி வேலைகள் இன்னும் தொடர்ந்துவருகிறது. அதன்பின்னணியில் இன்னாள், முன்னாள் நிர்வாகிகள் உள்ளனர். ஆனால், அதையெல்லாம் சமாளித்து தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை அமைச்சர் பாண்டியராஜன் நிறைவேற்றிவருகிறார். அதில் ஆவடி தொகுதி மக்களின் நீண்டநாள் கனவனான பட்டபிராம் ஐ.டி பார்க்கிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டிவிட்டார். அதனால் ஆவடி தொகுதியிலும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரிடம் அமைச்சர் பாண்டியராஜனுக்கு நல்ல பெயர் உள்ளது. அதனால்தான் கொரோனா தடுப்பு பணியில் அமைச்சர் பாண்டியராஜனை தண்டையார்பேட்டை பொறுப்பாளராக நியமித்துள்ளனர். எந்த வேலை கொடுத்தாலும் அதைச் சிறப்பாகச் செய்து முடிப்பார் என்ற நம்பிக்கை பாண்டியராஜன் மீதுள்ளதால் நிச்சயம் அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும்" என்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஓபிஎஸ்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஓபிஎஸ்
Vikatan

அமைச்சர் பெஞ்சமின் ஆதரவாளர்கள் கூறுகையில், ``ஜெயலலிதாவின் குட் புக்கில் இடம்பிடித்தவர் பெஞ்சமின். அதனால்தான் துணை மேயராக இருந்தவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிப்பணியில் ஈடுபட்டுவருகிறார். முதல்வர், துணை முதல்வர் மட்டுமல்லாமல் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அமைச்சர் பெஞ்சமின் நெருக்கமாகவே இருந்துவருகிறார். அதனால் நிச்சயம் அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் சிறப்பாகப் பணியாற்ற முடியும். இது, கட்சித் தலைமைக்கும் நன்றாகத் தெரியும்" என்றனர்.

திருவள்ளூர் மாவட்ட அரசியல் உள்கட்சி பூசலுக்கு பெயர்போன நிலையில் மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற அ.தி.மு.க-வினர் முடிந்தளவு முட்டி மோதிவருகின்றனர். யாருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

அடுத்த கட்டுரைக்கு