Published:Updated:

`தவறாக அச்சிடப்பட்ட வள்ளுவர் படம்!’ - தமிழ்ப் பல்கலைக்கழக அழைப்பிதழ் சர்ச்சை

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறை சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில், திருவள்ளுவர் படம் தவறாக இருந்ததால் பெரும் சர்ச்சை எழுந்தது.

அழைப்பிதழ்
அழைப்பிதழ் ( ம.அரவிந்த் )

அதஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறை சார்பில் நடைபெற உள்ள சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழில், திருவள்ளுவர் படம் தவறாக அச்சடிக்கப்பட்டிருந்ததால் பெரும் சர்ச்சை எழுந்ததுடன் தமிழ் ஆர்வலர்கள் பலரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது.

தமிழ்ப் பல்கலைக்கழகம்
தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை மர்ம நபர்கள் அவமதிப்பு செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இது தொடர்பாக தங்களுடைய கண்டனத்தைத் தெரிவித்தனர். தமிழ்ப் பல்கலைக் கழக மாணவர்கள் பல்கலைக்கழக வாயிலில் இதற்காகப் போராட்டமும் நடத்தினர்.

இந்த நிலையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறை சார்பில், வரும் 13-ம் தேதி சசிகலா கணவரான ம.நடராசன் நினைவு அறக்கட்டளை சார்பில் சொற்பொழிவு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்ட அழைப்பிதழில், திருவள்ளுவர் படத்தில், வலது கையில் இருக்க வேண்டிய எழுத்தாணி இடது கையிலும் இடது கையில் இருக்க வேண்டிய சுவடி வலது கையிலும் இருப்பது போல மாற்றி அச்சடிக்கப்பட்டிருந்தது.

அழைப்பிதழ்
அழைப்பிதழ்

இதைக் கண்ட தமிழ் ஆர்வலர்கள் பலரும் அதிர்ச்சி யடைந்ததுடன் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். மேலும், திருவள்ளுவர் படம் தவறாக அச்சடிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் தமிழ்ப் பல்கலைக் கழக நிர்வாகத்துக்கும் சென்றது.

இதைத் தொடர்ந்து அவசர அவசரமாக அடுத்த ஒரு மணி நேரத்தில் திருவள்ளுவர் படம் சரியாக இருப்பதுபோல் புதிய அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இது தற்செயலாக நடந்தது எனப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்ப் பல்கலைக்கழகம்
தமிழ்ப் பல்கலைக்கழகம்

இது குறித்து தமிழ் ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், ``தமிழின் வளர்ச்சிக்காகத் தொடங்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அதன் துணைவேந்தர் கலந்துகொண்டு தலைமை உரையாற்ற உள்ள நிகழ்ச்சிக்கு அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் திருவள்ளுவரின் அமைப்பையே மாற்றிப்போட்டு அச்சிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை உடனே அவர்கள் சரி செய்தாலும் வரும் காலங்களில் தமிழ் மற்றும் திருவள்ளுவர் விஷயத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாது என்பதை இந்தத் தவறு உணர்த்துகிறது" என்றனர்.