Published:Updated:

`குடியுரிமை கேட்டு மக்கள் வரிசையில் நிற்க வேண்டுமா?’ - டெல்லியில் கொதித்த பிரியங்கா காந்தி

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று இரவு சந்தித்தார்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்கள், டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாம் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பிறகு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்கள் இந்த சட்டத்துக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். டெல்லி இந்தியா கேட் பகுதியில் மாணவர்களின் போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று இரவு பங்கேற்றார். அங்கிருந்த மாணவர்களுடன் பிரியங்கா கலந்துரையாடினார்.

டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் பிரியங்கா காந்தி
டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் பிரியங்கா காந்தி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தேசிய குடிமக்கள் பதிவேடு அடிப்படையில் ஏழைகளுக்கு எதிரானது. இதில் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். யாராவது தங்களது நிலத்தை பற்றிய பழைய ஆவணங்களை எடுக்க வேண்டுமானால் முடியுமா. உங்களது பாட்டியால் காட்ட முடியுமா?.

அமைதியான வழியில் போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இளைஞர்களும், பொதுமக்களும் சொல்வதை இந்த அரசாங்க கேட்கவேண்டும். அமைதியான வழியில் போராட்டங்கள் நடந்துவருகிறது ஆனால் இந்த அரசாங்கம் தான் மக்களின் குரல்களுக்கு செவிசாய்க்கவில்லை.

 பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

அவர்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அரசானது மாணவர்களிடம் வந்து பேச தயங்குகிறது. அவர்களை யார் தடுக்கிறார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை இருப்பதால் ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக நடத்தப்பட வேண்டும்” என்றார்.