Published:Updated:

சாத்தான்குளம்:`லாக்அப் மரணமில்லை; யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை!’- கடம்பூர் ராஜு

பென்னிக்ஸ் - ஜெயராஜ்
பென்னிக்ஸ் - ஜெயராஜ்

``கடந்த 1996-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில்தான் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் காவல்நிலையத்தில் லாக் அப்பில் இரண்டு பேர் உயிரிழந்தனர். காவல்நிலையத்திலேயே தாக்கப்பட்டு அங்கேயே உயிரிழந்ததால்தான் அதற்கு லாக் அப் மரணம் என்று பெயர்”

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த இதே காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்த ஸ்ரீதரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஆய்வாளர் ஸ்ரீதர்
பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஆய்வாளர் ஸ்ரீதர்

இச்சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த சென்னை ஆயுதப்படையில் பணிபுரிந்துவரும் ஆயுதப்படை காவலர் சதீஷ்முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக, கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் நிலையத்தின் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பர்னாந்து சேவியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக மாவட்ட குற்றவியல் நீதிபதி ஹேமா, கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் ஆகியோர் கோவில்பட்டி கிளைச்சிறையில் நேற்று விசாரணை நடத்திய நிலையில், இரண்டாவது நாளாக இன்று, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீஸாரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்த வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் அனுமதி பெற்று சி.பி.ஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம்: `உழைப்பைத் தவிர வேறெதுவும் தெரியாதுண்ணே!' -உதயநிதியிடம் கலங்கிய சகோதரி

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் போலீஸார் தாக்கியதால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட கணேசமூர்த்தியின் வீட்டிற்கு நேரில் சென்று அமைச்சர் கடம்பூர்ராஜூ, கணேசமூர்த்தியின் மனைவி ராமலட்சுமி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,``கடந்த 1996-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில்தான் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் காவல்நிலையத்தில் லாக் அப்பில் இரண்டு பேர் உயிரிழந்தனர். காவல்நிலையத்திலேயே தாக்கப்பட்டு அங்கேயே உயிரிழந்ததால்தான் அதற்கு லாக் அப் மரணம் என்று பெயர். ஆனால், தற்போது சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு, அங்கிருந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு 2, 3 நாள்களுக்கு பின்னர்தான் இருவரும் உயிரிழந்தனர்.

அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு

எனவே, இவர்களின் மரணம் இது லாக்அப் மரணம் அல்ல. இருப்பினும், முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து 2 உதவி ஆய்வாளர்களை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார். மதுரை உயர்நீதிமன்ற கிளை, அந்த வழக்கை தாமாக முன்வந்து எடுத்து, நீதிபதி முன்னிலையில் 3-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வை செய்ய வேண்டும். அதனை ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த அரசு உறுதுணையாக இருந்தது. உடற்கூறு ஆய்வு அறிக்கையை நீதிபதி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்.

ஆனால், இந்த மரணத்தை எம்.பி., கனிமொழி `லாக்அப் மரணம்' எனக் கூறியுள்ளார். அரசியலுக்காக இப்படி அவர் சொல்கிறார். எதிர்கட்சிகள் அப்படி செய்தாலும் மக்களுக்கு உண்மை தெரியும். இவ்வழக்கில் உயர்நீதிமன்றம் என்ன வழிமுறைகளை சொல்கிறதோ, என்ன தீர்ப்பு சொல்கிறதோ அதனை பின்பற்றி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயாராக உள்ளது" என்றார்.

இதையடுத்து எம்.பி., கனிமொழி தனது ஃபேஸ்புக்கில், ``சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் மூச்சுத் திணறலாலும், உடல்நலக் குறைவாலும் உயிரிழந்தனர் என உடற்கூராய்வு முடிவு வெளியாவதற்கு முன்னரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தற்போது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, `இது லாக்-அப் மரணம் கிடையாது' என்று கூறுகிறார். இந்த அரசிடமிருந்து, கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு நமக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்? முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை காப்பாற்றுவதற்கு முயற்சிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது" எனப் பதிவிட்டிருந்தார்.

கனிமொழி எம்பி
கனிமொழி எம்பி

இதுகுறித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ``சாத்தான்குளம் சம்பவத்தில் அரசு யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். நான் தெரிவித்த கருத்தில் நீதிமன்ற முடிவின்படி அரசு உடனடி நடவடிக்கை எடுத்து சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்கிற கருத்தை தெரிவித்திருந்தேன். அதை மறைத்து, அரசு சம்மந்தப்பட்டவர்களை காப்பாற்ற முயற்சிப்பதாக எம்.பி., கனிமொழிஅவர்கள் தவறான கருத்தை பதிய வைக்க முயற்சிக்கிறார். இதில் துளியளவும் உண்மை இல்லை" என்றார்.

சாத்தான்குளம்: `அப்பவே நடவடிக்கை எடுத்திருந்தால்...’ -பிப்ரவரியில் நடந்தது என்ன?
அடுத்த கட்டுரைக்கு