Published:Updated:

`இது வாஜ்பாயின் பா.ஜ.க அல்ல!’ - யஷ்வந்த் சின்ஹா

இந்தி பேசும் மாநிலத்திலிருந்து நான் வந்தாலும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்தை நான் எதிர்க்கிறேன்.

yaswant sinha
yaswant sinha

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில், ம.தி.மு.க சார்பில் அறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் மாநாடு நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும், ஏராளமான ம.தி.மு.க-வினர் திடல் முழுவதும் நிரம்பியிருந்தனர். அப்போது மேடையில் பேசிய யஷ்வந்த் சின்ஹா, ``நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்ட அறிஞர் அண்ணா, உரிய காலத்தில் மாபெரும் சிறப்புமிக்க முதல்வராகத் தமிழகத்தில் பொறுப்பேற்றார்.

yaswant sinha - modi
yaswant sinha - modi

அண்ணா தற்போது உயிருடன் இருந்து அப்போது முழங்கியதை இப்போது முழங்கினால் அவரை தேசத்துரோகி, பாகிஸ்தான் ஆதரவாளர் என்று கூறியிருப்பார்கள். வைகோ அழைத்து நான் மறுத்ததே இல்லை. அவரின் திருமணத்துக்கும் வந்து வாழ்த்தியுள்ளேன். டெல்லியில் கிளர்ச்சிக் கொடியேந்தி போராடியபோதும் நான் பங்கேற்றிருக்கிறேன். இந்த விழாவுக்கு என்னை மட்டுமல்ல ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோரையும் அழைத்திருந்தார். ஃபரூக் காவல் வைக்கப்பட்டுள்ளதாலும் மற்றும் சிலர் சில அழுத்தத்தினாலும் வரவில்லை. ஆனால், நான் வந்திருக்கிறேன். நான் நெஞ்சில் துணிவேந்தி நாளை ஸ்ரீநகர் செல்வேன்.

என் நண்பனைச் சந்திப்பதற்காக... காஷ்மீர் மக்களை சந்திப்பதற்காகச் செல்வேன். டெல்லியில் இன்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பவர்களுக்கு இந்தியாவைப் பற்றி, இந்திய மக்களைப் பற்றித் தெரியவில்லை. எப்படியாவது ஆட்சியில் இருந்தால்போதும் என எண்ணுகின்றனர். இந்தி பேசும் மாநிலத்திலிருந்து நான் வந்தாலும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்தை நான் எதிர்க்கிறேன். நாட்டின் பல தலைவர்களும் வாஜ்பாய்க்கு ஆதரவாக இருந்தார்கள். ஏனெனில் அவர் மாறுபட்டவராக இருந்தார். தற்போது பா.ஜ.க-வில் மோசமான சூழல் நிலவுகிறது.

vajpayee - modi
vajpayee - modi

இன்றைய பா.ஜ.க வாஜ்பாயினுடைய பா.ஜ.க அல்ல. வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியா. பல மதம், மொழி இதுதான் இந்தியா. இதை அறியாததால்தான் ஒரே மொழி ஒரே நாடு என்பதை தூக்கிப் பிடித்து வருகின்றனர். மாநிலங்களுக்குச் சுயாட்சி வேண்டும் என்பதே அண்ணா கூறியது. காஷ்மீர் சகோதரர்களுக்காகக் கிளர்ந்தெழுங்கள் என்பதைக் கூறவே இங்கு வந்துள்ளேன். 1947 இணைப்பு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள புனிதத்தைத் துடைத்தெறிந்திருப்பதே இன்றைய நடவடிக்கை காட்டுகிறது. இந்த ஆட்சியில் ஒரு மாநிலம் பிரிக்கப்பட்டு அந்தஸ்து குறைக்கப்பட்டுள்ளது", என்றார்.