Published:Updated:

`ஆலோசகர் அரசியல்'... தலைமைச் செயலாளர் சண்முகம் மூட்டிய தீ... பழைய பகையைத் தீர்த்ததா தி.மு.க?

ஸ்டாலினும் சண்முகமும்

``ஆலோசகர்களை வைத்து கட்சிகள் அரசியல் செய்கின்றன'' என மூன்று மாதங்களுக்கு முன்பு தலைமைச் செயலாளர் சண்முகம் மூட்டிய தீதான், அவருக்கு எதிராகத் தி.மு.க இப்போது கொதிக்கக் காரணமா? அலசுகிறது கட்டுரை.

`ஆலோசகர் அரசியல்'... தலைமைச் செயலாளர் சண்முகம் மூட்டிய தீ... பழைய பகையைத் தீர்த்ததா தி.மு.க?

``ஆலோசகர்களை வைத்து கட்சிகள் அரசியல் செய்கின்றன'' என மூன்று மாதங்களுக்கு முன்பு தலைமைச் செயலாளர் சண்முகம் மூட்டிய தீதான், அவருக்கு எதிராகத் தி.மு.க இப்போது கொதிக்கக் காரணமா? அலசுகிறது கட்டுரை.

Published:Updated:
ஸ்டாலினும் சண்முகமும்

- ``தி.மு.க ஆற்றி வரும் நிவாரணப் பணிகளைப் பார்த்து தலைமைச் செயலாளருக்குப் பொறாமை.''

- ``எம்.பி-க்களை மதிக்காமல் டிவி-யில் சத்தத்தை அலறவைத்து அதைக் கவனித்துக்கொண்டு இருந்தார்.''

- `` `உங்களைப் போன்ற ஆட்களுக்கு வேறு வேலையில்லை' எனத் தலைமைச் செயலாளர் சொன்னார்.''

- ``எம்.பி-க்களை தலைமைச் செயலாளர் கொச்சைப்படுத்திவிட்டார்.''

- ``இவற்றையெல்லாம் சண்முகம் பேசவில்லை. அவருக்கு உத்தரவு போடும் எடப்பாடியின் வாய்ஸ்.''

தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு எதிராகத் தி.மு.க எம்.பி-க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறனின் சீற்றங்கள் இவை.

தலைமைச் செயலாளர் க.சண்முகம்
தலைமைச் செயலாளர் க.சண்முகம்

`ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களை வழங்க டி.ஆர்.பாலு தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு, தலைமைச் செயலாளர் சண்முகத்தை அண்மையில் சந்தித்தது. அந்தச் சந்திப்பில்தான் தலைமைச் செயலாளர் தங்களை அவமதித்துவிட்டதாகப் புகார் எழுப்பியிருக்கிறார்கள் டி.ஆர்.பாலுவும் தயாநிதி மாறனும். தலைமைச் செயலாளருக்கு எதிராக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``எதிர்க்கட்சித் தலைவரையோ, என்னைச் சந்திக்க வந்த தலைவர்களையோ, தி.மு.க-வையோ அவமதிக்கும் எண்ணம் எள்ளளவும் எனக்கு இல்லை. நான் ஒரு சாதாரணமான அரசு ஊழியன். அரசியல்வாதியல்ல. மக்களுக்காகப் பணியாற்றுவதுதான் என் வேலை. எனவே, எனக்கு யாரையும் உதாசினப்படுத்த வேண்டும் என்றோ, அவமதிக்க வேண்டும் என்றோ நான் எந்தக் காலத்திலும் நினைத்தது இல்லை. என் பணியை அர்ப்பணிப்போடு செய்கிறேன்'' என அதற்கு விளக்கம் அளித்திருக்கிறார் தலைமைச் செயலாளர்.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

உண்மையில் என்ன நடந்தது? தலைமைச் செயலாளர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம். ``கொரோனா பிரச்னை எழ ஆரம்பித்த நாளிலிருந்து ஒரு நாள்கூட தவறாமல் காலை 9 மணிக்கே கோட்டைக்கு வந்துவிடுவார் சி.எஸ். (தலைமைச் செயலாளர்) இரவு 9 மணிக்குத்தான் வீட்டுக்குப் புறப்பட்டுச் செல்வார். பல துறைகளின் அதிகாரிகளைச் சந்திப்பது; அவசர உத்தரவுகளைப் பிறப்பிப்பது; பணிகளை ஒருங்கிணைப்பது; முதல்வர் மீட்டிங்கில் பங்கேற்பது என ஓய்வின்றி பணியாற்றி வருகிறார். இந்தக் கடுமையான பணிச் சூழலுக்கு மத்தியிலும் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் சந்திக்க விரும்புகிறார்கள் என்றதும் ஒப்புக்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தலைமைச் செயலாளரின் அறையில் ஏ.சி போடுவதில்லை. ஜன்னல்களைத் திறந்து வைத்திருக்கிறார். பார்வையாளர்கள் பார்த்துப் பார்த்துதான் அவரின் அறைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகிறார்கள் என்றவுடன் நேரம் கொடுத்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்தவுடன் அவர்களை வரவேற்று, சோபாவில் அமரவைத்து நல்லபடியாகப் பேசினார். ஆனால், எம்.பி-க்களுடன் வந்த பத்து பதினைந்து பேர் திமுதிமுவென சி.எஸ் அறைக்குள் நுழைந்து, ஒரு லட்சம் விண்ணப்பங்களை பண்டல் பண்டலாகக் கொண்டுவந்து போட்டார்கள். கொரோனா காரணமாகக் கட்டுப்பாடு இருப்பதால் அதை மீறிக் கொண்டு வந்து போடப்பட்ட மனுக்களைப் பார்த்து தலைமைச் செயலாளர் அதிர்ச்சியடைந்துவிட்டார். எம்.பி-க்களுடன் வந்த நபர்கள் எல்லோரும் செல்போனில் வீடியோவும் போட்டோவும் எடுக்க ஆரம்பித்தனர். `இப்படியெல்லாம் செய்யாதீர்கள்' என்று தலைமைச் செயலாளர் சண்முகம் சொன்னார்.

தலைமைச் செயலாளர் சண்முகம்
தலைமைச் செயலாளர் சண்முகம்

டி.ஆர்.பாலுவிடமும் தயாநிதியிடமும் `கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறேன் சார்' என்று சண்முகம் சொல்லியிருக்கிறார். ஆனால், `எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள்? டேட் சொல்லுங்கள்' என்று டி.ஆர்.பாலுவும் தயாநிதி மாறனும் கறார் காட்டினார்கள். கடுமையான பணி அழுத்தத்திலிருந்த அவர், `இவ்வளவு சிக்கலான நேரத்திலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்கிறேன். தேதியையெல்லாம் எப்படி சார் சொல்ல முடியும்?' என்று கேட்டிருக்கிறார். அதை எதிர்க்கட்சி எம்.பி-க்கள் ஈகோவாக எடுத்துக்கொண்டார்கள். அனைவருக்கும் பொதுவான ஓர் அரசு ஊழியரான தலைமைச் செயலாளரை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால், அவர்களை சண்முகம் எந்த வகையிலும் அவமரியாதை செய்யவில்லை” என்றனர்.

``பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை அளிக்கச் சென்றபோது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் தங்களிடம் அவமரியாதையாக நடந்துகொண்டதால் அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று மக்களவை சபாநாயகருக்கு டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் கடிதம் அனுப்பி உள்ளனர்.

டி.ஆர்.பாலு கடிதம்
டி.ஆர்.பாலு கடிதம்

நாடாளுமன்றம் வரையில் சண்முகத்தைக் கொண்டு செல்ல காரணம் என்ன? பழைய பகை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். மூன்று மாதத்துக்கு முன்பு சண்முகம் மூட்டிய தீதான் இப்போது அவருக்கு எதிராகத் தி.மு.க கொதிக்கக் காரணம். ``ஆலோசகர்களை வைத்து கட்சிகள் அரசியல் செய்வது அதிர்ச்சியளிக்கிறது'' எனச் சண்முகம் பேசிய பேச்சுதான் இப்போது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருக்கிறது. முதலில் சண்முகம் என்ன பேசினார் என்பதைப் பார்ப்போம்.

ஜனவரி 25-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் தேசிய வாக்காளர் தினம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சண்முகம் பேசினார். ``பொருளை வாங்கத் தூண்டும், விளம்பர யுக்தியை, அதிகாரத்துக்கு வருவதற்காக அரசியலில் பயன்படுத்தும் சூழ்நிலை இன்று ஏற்பட்டுவிட்டது. அரசியல் ஆலோசகர் என்று சிலர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கட்சிகளுக்கு நம் ஆட்கள் சொல்ல முடியாத விஷயத்தையா அவர்கள் வந்து சொல்லிவிடப் போகிறார்கள்? மக்களுக்கு என்ன தேவை என்பதை அந்தக் கட்சிகள், மக்களிடம் போய்க் கேட்டாலே போதும். இதற்காக ஒருவரை அழைத்து வந்து, அவரை அரசியல் ஆலோசகராக நியமிப்பதும் அவர் ஆராய்ச்சி செய்து, அது தேவை இது வேண்டும் என்று சொல்வதும், அதை வைத்து அரசியல் நடத்துவதும் இந்தக் காலகட்டத்தில் நடக்கிறது'' என்றார்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்
தி.மு.க தலைவர் ஸ்டாலின்

சண்முகம் இப்படிப் பேசிய நேரத்தில்தான், பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தார். ``மக்களின் தேவைகளைக் கேட்டு அரசியல் செய்ய வேண்டும். ஆலோசகர்களை வைத்து அரசியல் செய்வது அல்ல'' என மறைமுகமாகச் சண்முகம் சீண்டியது தங்களைத்தான் என தி.மு.க நினைத்தது. சண்முகத்தைப் பழிவாங்க `ஒன்றிணைவோம் வா' மனுக்கள் விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்கள்'' என்கிறார்கள் அவர்கள்.

இந்த விவகாரத்தில் இன்னொரு பிரச்னையும் முளைவிட்டது. தலைமைச் செயலாளரை சந்தித்துவிட்டு அப்செட்டில் வெளியே வந்து பேட்டி அளித்த தயாநிதி மாறன், ``நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா?'' எனச் சொன்னது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, தாழ்த்தப்பட்டவர்களை தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவமதிக்கும் வகையில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தயாநிதி மாறனும் இப்படிப் பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது.

தயாநிதி மாறன்
தயாநிதி மாறன்

``தலைமைச் செயலர் குறித்து தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி. அந்த வேகத்தில் நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா? என்றது அதிர்ச்சியளிக்கிறது. அதில், உள்நோக்கம் இல்லையென்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது. இது தோழமை சுட்டுதல்'' என்று சொல்லியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். அவரைத் தொடர்ந்து திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்ட பலரும் தயாநிதி மாறனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில், ``நேற்றைய தினம் (13.5.20) தமிழக அரசின் தலைமைச் செயலாளரை சந்தித்தது குறித்து நான் அளித்த பேட்டியின்போது, தலைமை செயலாளர் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களை தாழ்வான முறையில் நடத்தினார் என்ற அர்த்தத்தில்தான் கூறியிருந்தேனே தவிர எவருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு சிறிதும் இல்லை. யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால், அதற்கு என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தன் ட்விட்டர் பக்கத்தில் தயாநிதி மாறன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism