Election bannerElection banner
Published:Updated:

`ஸ்கெட்ச் முரசொலிக்கா... இல்லை உதயநிதிக்கா?' - துக்ளக் விழாவில் ரஜினி பேசியதன் பின்னணி என்ன?

ரஜினி மற்றும் உதயநிதி
ரஜினி மற்றும் உதயநிதி

ரஜினியின் முரசொலி பேச்சுக்கும் உதயநிதிக்கும் தொடர்பு உண்டு. பழிக்குப் பழி அரசியல் பின்னணியை அலசுகிறது இந்தக் கட்டுரை!

``நான் ஆன்மிகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அடித்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டும் அளவுக்கு ஆன்மிகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரி ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை. ஒரு தப்பும் செய்யாமல் என்னை அடிப்பவரை நான் அடிப்பது தவறு என்று சொன்னால், அந்த தவற்றை நான் 1,000 முறை செய்வேன்.''

- 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போது ரஜினி சொன்ன வார்த்தைகள் இவை! துக்ளக் பொன்விழாவில் ரஜினி பேசிய பேச்சுக்கும் இந்த ஓப்பனிங்குக்கும் சம்பந்தம் உண்டு.

விழாவில் ரஜினிகாந்த்
விழாவில் ரஜினிகாந்த்

``முரசொலி வைத்திருந்தால் தி.மு.க-காரர். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி'' என துக்ளக் விழாவில் பேசிய ரஜினியின் பேச்சுக்கு எதிர்வினைகள் கிளம்பியிருக்கின்றன. ``முரசொலியைப் படிப்பவர்கள் எல்லாம் வெறும் தி.மு.க-வினர்தான். அவர்களுக்குப் பெரிய அறிவு ஞானம் எல்லாம் இல்லை'' என்பதுதான் ரஜினி பேச்சின் சாராம்சம். துக்ளக் விழாவில் முரசொலியை ஏன் ரஜினி சீண்டினார்... அதற்குப் பின்னால் இருக்கும் பழிக்குப்பழி அரசியல் என்ன?

கடந்த அக்டோபரில் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் ரஜினி. அதில் ``பணம், பதவியை எதிர்பார்த்திருப்பவர்கள், இப்போதே மன்றத்தில் இருந்து விலகி விடுங்கள்’’ என எச்சரித்திருந்தார். `ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப். மே... மே... மே...’ என்ற தலைப்பில் ரஜினி அறிக்கையைக் கிண்டல் செய்தது முரசொலி. ரஜினி ரசிகர்களுக்குப் பதில் சொல்வது போல வெளியிடப்பட்ட அந்தக் கட்டுரை `சிலந்தி' என்கிற பெயரில் வெளியிடப்பட்டிருந்தது.

சிலந்தி கட்டுரை
சிலந்தி கட்டுரை

இந்தக் கட்டுரை ரஜினி ரசிகர்களிடையே அதிர்வலையை உண்டாக்கிய நிலையில், ``என்னையும் உங்களையும் யாராலும் எந்தச் சக்தியாலும் பிரிக்கமுடியாது. நாம் செல்லும் பாதை நியாயமானதாக இருக்கட்டும்'' என ரசிகர்களுக்கு விளக்கம் ஒன்றைக் கொடுத்தார் ரஜினி. இப்படியான சூழலில் அந்தக் கட்டுரைக்கு முரசொலி வருத்தம் தெரிவித்தது. ``சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து முரசொலியில் வெளிவந்த கட்டுரை சில நல்ல மனதைப் புண்படுத்தி இருப்பதாகக் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இனி அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தது முரசொலி.

இந்தப் பிரச்னை ஓய்ந்த நிலையில்தான் அடுத்து குடியுரிமை திருத்தச்சட்டம், அடுத்த பிரச்னைக்கு விதை போட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் மாணவர்கள், இஸ்லாமியர்கள், அரசியல் கட்சிகள், மதச்சார்பற்ற அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. குறிப்பாக, மாணவர்கள் உக்கிரத்துடன் போராடினார்கள்.

முரசொலியின் வருத்தம்
முரசொலியின் வருத்தம்

குடியுரிமை விவகாரத்தில் ஆங்காங்கே வன்முறைகள் வெடிக்க... உடனே ரஜினி ட்விட்டரில், ``எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழியாகிவிடக் கூடாது. தேசப் பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது" எனச் சொல்லியிருந்தார். இந்தப் பதிவில் எந்த இடத்திலும் குடியுரிமைச்சட்டம் பற்றி ரஜினி குறிப்பிடவில்லை. பொத்தாம்பொதுவாகவே கருத்து சொல்லியிருந்தார்.

ரஜினியின் இந்தக் கருத்து வெளியான நேரத்தில்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தி.மு.க கூட்டணிக் கட்சிகள் கண்டன ஊர்வலத்தை நடத்தத் தேதி குறித்திருந்தார்கள். ரஜினியின் கருத்துக்குப் பதிலடி தரும் வகையில் தி.மு.க இளைஞர் அணிச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ``குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடைபெறும் பேரணியில் அனைவரும் பங்கேற்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு `வன்முறை' என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவிட்டு வரவும்'' எனச் சொல்லியிருந்தார். ரஜினியின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் வன்முறை, வயதான வசதியான பெரியவர் என்கிற சொல்லாடல்கள் எல்லாமே ரஜினியைக் குறிப்பிடும் வார்த்தைகள்தான்.

ரஜினி ட்வீட்
ரஜினி ட்வீட்

இப்படி அடுத்தடுத்து குறி வைத்து தன்னை தி.மு.க. சீண்டியதால்தான் முரசொலியைப் பற்றி துக்ளக் விழாவில் ரஜினி பேசினார் என்கிறது அவரது நண்பர்கள் வட்டாரம். ரஜினி ரசிகர்களை வயதானவர்கள் எனக் கிண்டல் அடித்து மீம்ஸ்கள் வலம்வரும் சூழலில், முரசொலி பத்திரிகையின் நிர்வாக இயக்குநராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினே `வயதான பெரியவர்களை' என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியது அவரது ரசிகர்களைக் கொதிப்படைய வைத்தது. இதற்குப் பதிலடி தரவேண்டும் என்பதற்காகவே உதயநிதி பொறுப்பில் இருக்கும் முரசொலியை ரஜினி விமர்சித்திருக்கலாம்.

ரஜினி பங்கேற்ற துக்ளக் விழாவில் என்னவெல்லாம் நடந்தது? - வெளிவராத விஷயங்களின் நேரடி  ரிப்போர்ட்!

``ரஜினியின் துக்ளக் விழா பேச்சுக்குப் பின்னால் இருக்கும் விஷயத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள் சிலர். ``முரசொலி மீது ரஜினிக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதனால்தான், அதன் பவளவிழாவில் ரஜினி கலந்துகொண்டார். விழாவில் பேசுவதற்காக ரஜினியை அழைத்திருந்தார்கள். ஆனால், `பேசவில்லை. விழாவில் நிச்சயம் கலந்துகொள்கிறேன்' என வாக்குறுதி கொடுத்து, அதன்படி விழாவிலும் பங்கேற்றார். ரஜினிக்கு விழாவில் ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கினார். உதயநிதி ஸ்டாலினோ ரஜினியைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அந்த முரசொலி பவளவிழாவே உதயநிதி மேற்பார்வையில்தான் நடைபெற்றது. கமல்ஹாசன் விழாவில் பங்கேற்று முரசொலியை வாழ்த்திப் பேசினார். ரஜினி அப்படி மேடையில் பங்கேற்காமல் இருந்தது அவருடைய விருப்பம் சார்ந்தது. இதில் அவரை கட்டாயப்படுத்த முடியாது. ஆனால், இதை மனதில் வைத்துத் தொடர்ந்து ரஜினியை எதிரி போலப் பார்த்தார் உதயநிதி.

முரசொலி பவள விழாவில் ரஜினி, ஸ்டாலின், உதயநிதி
முரசொலி பவள விழாவில் ரஜினி, ஸ்டாலின், உதயநிதி

முக்கியமானவர்கள் இருந்த இடத்தில் ரஜினியைத் தனிப்பட்ட முறையில் உதயநிதி விமர்சித்துப் பேசியதும் ரஜினியின் காதுக்கு எட்டியதாகச் சொல்கிறார்கள். இத்தனைக்குப் பிறகும் ரஜினி பொறுமையாகத்தான் இருந்தார். உதயநிதிக்கு ரஜினி மீது இருந்த கோபத்தால்தான் அவரை கிண்டல் அடித்து `ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப். மே.. மே.. மே' என்கிற கட்டுரையை உதயநிதி பொறுப்பில் இருக்கும் முரசொலியில் வரவைக்க முடிந்தது. பெரிய ஆளுமைகளை விமர்சிக்கும்போது கொஞ்சம் நாகரிகமாகத்தான் முரசொலியில் எழுதுவது வழக்கம். ஆனால், அந்தக் கட்டுரை கடுமையான கிண்டலான வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருந்தது. இது எல்லாமே ரஜினி மீதான ஏதோ ஒரு கோபத்தின் வெளிப்பாடுதான். இது `ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப். மே.. மே.. மே' கட்டுரையோடு முடியவில்லை. வயதானவர்கள் வர வேண்டாம் என்று வயது மூப்பையும் உடல்நலனையும் வைத்துக் கிண்டல் அடிக்கும் நிலைக்கு உதயநிதி போனது எல்லாம் நாலாந்தர பேச்சாளர்கள் செய்யக்கூடியது. இதை தி.மு.க தலைவரின் மகனே செய்வது அதிகபட்சமான செயல். `ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப். மே.. மே.. மே' கட்டுரைக்கு வருத்தம் தெரிவித்தது போல வயதானவர்கள் வரவேண்டாம் போன்ற விமர்சனத்தையும் ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும்'' என்றார்கள்.

முரசொலி பவள விழாவில் ரஜினி..
முரசொலி பவள விழாவில் ரஜினி..

``முரசொலி வைத்திருந்தால் தி.மு.க-காரர். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி'' என ரஜினி சொன்னதும் உடனே உதயநிதி ரியாக்‌ஷன் காட்டினார். ``முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவர்னா புரட்சித்தலைவர், தைரியலெட்சுமின்னா அம்மா-கால் நூற்றாண்டாகக் கால்பிடித்து காலம் கடத்தி `தலை சுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியைக் கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே தி.மு.க-காரன். நான் தி.மு.க-காரன். பொங்கல் வாழ்த்துகள்'' என ட்வீட் போட்டார். இப்படியான வார்த்தை மோதல்கள் அனைத்துமே ரஜினிக்கும் தி.மு.க-வுக்கும் இடையே புகைச்சல் இருப்பதை வெட்டவெளிச்சமாக்குகின்றன.

உதயநிதி ட்வீட்
உதயநிதி ட்வீட்
ரஜினி பங்கேற்ற துக்ளக் விழாவில் என்னவெல்லாம் நடந்தது? - வெளிவராத விஷயங்களின் நேரடி  ரிப்போர்ட்!

`பாபா' படப் பிரச்னையில் ராமதாஸுடன் மோதல் ஏற்பட்ட நிலையில்தான், 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி வேட்பாளர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார் ரஜினி. அப்போது வெளியிட்ட அறிக்கையில்தான் ராமதாஸைக் கடுமையாக விமர்சித்துவிட்டு, ``நான் ஆன்மிகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அடித்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டும் அளவுக்கு ஆன்மிகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரி ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை. ஒரு தப்பும் செய்யாமல் என்னை அடிப்பவரை நான் அடிப்பது தவறு என்று சொன்னால், அந்தத் தவற்றை நான் 1,000 முறை செய்வேன்’’ என்றுச் சொன்னார்.

இப்போது முரசொலியைச் சீண்டியிருப்பதும்கூட `என்னை அடிப்பவரை நான் அடிப்பது தவறு என்று சொன்னால், அந்தத் தவற்றை நான் 1,000 முறை செய்வேன்' என்பதுபோலத்தான்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு