கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``இலங்கையில் மகிந்த ராஜபக்சே பதவியிலிருந்து விலகும் நிலை மக்களின் போராட்டத்தால் நிகழ்ந்திருக்கிறது. மக்கள் சக்தி மகத்தான சக்தி என்பதை இலங்கைவாழ் மக்கள் இன்று உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.

இரக்கமின்றி, நீதி நேர்மையின்றி இன வெறியாட்டம் நடத்தி ஈழத்தமிழ் மக்களைக் கொன்றுகுவித்த ராஜபக்சேவுக்கு இன்று சிங்கள இனத்தைச் சேர்ந்த மக்களே பாடம் புகட்டும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உலக நாடுகளின் ஆதரவு என்னும் பெயரால் தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிய ராஜபக்சே, இன்று உலக நாடுகளின் ஆதரவைப் பெற இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இது பிற நாடுகளுக்கு ஒரு படிப்பினை... இந்தியாவுக்கும் ஒரு படிப்பினை. ஒரே நாடு, ஒரே கலாசாரம் என்ற பெயரில் அனைத்தையும் ஒற்றைத் தன்மையை நோக்கி இட்டுச் செல்கிறது. இந்தியைத் திட்டமிட்டு திணிக்கிறார்கள்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தியாவின் ஒரே கட்சியாக பி.ஜே.பி இருக்க வேண்டும். இந்தியாவின் ஒரே ஆட்சியாக பி.ஜே.பி ஆட்சி இருக்க வேண்டும் என எல்லாவற்றையும் ஒற்றைத்தன்மையை நோக்கி இட்டுச் செல்லும் போக்கு இங்கே வலுப்பெற்றிருக்கிறது. இலங்கையில் நிகழ்ந்தது இந்தியாவில் நிகழும் என்பதை பா.ஜ.க-வைச் சார்ந்தவர்கள், சங்பரிவார் அமைப்பைச் சார்ந்தவர்கள், ஆட்சியில் இருப்பவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சென்னை பெருநகரத்தில் நீதிமன்றத்தின் ஆணை என்கிற பெயரால் தற்போது ஏழை எளிய மக்களின் குடிசைகள் ஈவு இரக்கமின்றி அப்புறப்படுத்தப்படுவதும், அவர்களை நடுத்தெருவில் நிறுத்தும் மனப்போக்கும் தொடர்ந்து நீடிக்கிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நீதிமன்றம் அறிவித்தாலும், அதைத் தடுப்பதற்கு சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் அதிகாரம் இருக்கிறது. இது குறித்து முதல்வர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் ’லாக்கப் டெத்’ விசாரணை குறித்து தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். தொடர்ச்சியான இது போன்ற செயல்கள் தமிழ்நாடு அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது இன்றியமையாத தேவை. தி.மு.க அரசு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை தரும் என்ற நம்பிக்கையோடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மிகப்பெரிய அளவில் இந்தத் தேர்தலில் ஆதரவு நல்கியிருக்கிறார்கள். பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முதல்வர் முன்வர வேண்டும். மோடி அரசு நீடிக்கும் வரை பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டரின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனை சிந்தித்துப் பார்க்கும் பிரதமர், ஏழை எளிய மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை. ஓராண்டு காலத்தில் முதல்வர் நல்லாட்சி வழங்கியிருக்கிறார். ஆதலால்தான், அவருக்கு அகில இந்திய அளவில் சிறந்த முதல்வர் என்று நற்சான்றிதழ் கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி என்பது அ.தி.மு.க-தான் பா.ஜ.க எதிர்க்கட்சியாக வர வாய்ப்பில்லை” என்றார்.