Published:Updated:

`மோடி எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசினாரே.. அது என்ன?’ -முதல்வரின் விமர்சனத்துக்கு திருமாவளவன் பதிலடி

திருமாவளவன்
திருமாவளவன்

`கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் தலைவர்களோடு தொலைத்தொடர்பில் கலந்தாய்வு செய்தாரே, அது என்ன அவருடைய அறியாமையின் வெளிப்பாடா?’ - திருமாவளவன்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையாகப் போராடி வருகின்றன. கொரோனா வைரஸைத் தடுக்க மருந்து எதுவும் இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், ஊரடங்கு மூலம் மட்டுமே அதன் சமூகப் பரவலைத் தடுக்க முடியும். அதனால்தான் இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு
ஊரடங்கு

எனினும் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பின்னர் கொரோனாவால் பாதிக்கப்படாத பகுதிகளில் சில தளர்வுகள் இருக்கும் என அறிவித்த மத்திய அரசு அதற்கான சில வழிமுறைகளையும் வெளியிட்டது. இதற்கு பல்வேறு கட்டங்களில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. தமிழகத்தில் என்ன மாதிரியான தளர்வுகள் இருக்கும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் திங்கள்கிழமை இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார் முதல்வர் பழனிசாமி.

இந்த நிலையில், இது தொடர்பாகப் பேசியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ``இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று மே, ஜூன் மாதங்களில்தான் உச்சத்தை எட்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நேரத்தில், மே 3-ம் தேதி வரை முழு அடைப்பை அறிவித்த மத்திய அரசு, ஏப்ரல்-20 முதல் அதில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியிருக்கிறது. அரசு அலுவலகங்கள் இயங்கவும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
ஏப்ரல் 20 -க்குப் பிறகு.. விவசாயம் முதல் ஐ.டி வரை! - கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் துறைகள் எவை?

அதுபோலவே, தமிழக அரசும் இங்குள்ள பல்வேறு தொழிற்சாலைகள் இயங்குவதற்கு ஏற்பாடு செய்து வருவதாகத் தெரிகிறது. இதன் மூலம், மக்கள் கும்பல் கும்பலாகப் பயணிப்பதற்கும் ஓரிடத்தில் திரளாகக் கூடுவதற்கும் நெருக்கமாக இருந்து பணியாற்றுவதற்குமான கட்டாயம் ஏற்படும். அதன்வழி நோய்த்தொற்று அதிகரிக்கவும் வாய்ப்பு உருவாகும். அத்தகைய ஒரு கேடான சூழல் உருவாகுமேயானால், அதற்கு முழுஅடைப்பில் திடீரென தளர்வுகளை ஏற்படுத்த முயலும் மத்திய-மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்.

சமூகப் பரவல் என்னும் 3-வது கட்டத்துக்குப் போய்விடாமல் தடுப்பதற்கு அல்லது தாமதிப்பதற்கே முழு அடைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு இப்போதுதான் துவக்கியுள்ளது. `ரேபிட் டெஸ்டிங் கிட்' என்னும் துரித சோதனைக் கருவிகளின் முதல் தவணை மத்திய அரசால் பகிர்ந்தளிக்கப்பட்டு, இன்றுதான் உரிய மாநிலங்களுக்கு அவை போய்ச் சேர்ந்துள்ளன. தமிழகத்தைப்பொறுத்தவரையில், போதிய எண்ணிக்கையில் படுக்கைகளோ, வென்டிலேட்டர்களோ கைவசமில்லை. மருத்துவர்களுக்கான பாதுகாப்பு இப்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

அமெரிக்காவுக்குப் பார்சலான தமிழக ஆர்டர்; குழப்பும் அரசு - ரேபிட் டெஸ்ட் விவகாரத்தில் என்ன நடக்கிறது?

இந்த நிலையில், ஏதோவொரு அழுத்தத்துக்குள்ளாகி மே 3 வரையிலான முழுஅடைப்பில் இருவாரங்களுக்கு முன்னதாகவே தளர்வுகளை ஏற்படுத்தி, வழக்கமான இயல்புநிலையை ஏற்படுத்த முயல்வது தீவிரமான சமூகப் பரவலுக்குக் காரணமாகிவிடும்; அது பேராபத்தாக முடியும்.

கொரோனா பரவலைச் சமாளிக்கப் போதுமான முன் தயாரிப்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் மத்திய, மாநில அரசுகளின் இந்தத் தளர்வு நடவடிக்கைகள், குறிப்பிட்ட சில கார்ப்பரேட் முதலாளிகளின் அழுத்தம் காரணமாகவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவுமே மேற்கொள்ளப்படுகின்றனவோ என்கிற ஐயம் எழுகிறது.

ஊரடங்கு
ஊரடங்கு

மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளில் உள்ள போதாமைகள் மற்றும் குறைகளைச் சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சிகள் ஆற்றவேண்டிய கடமை. அதைச் செய்தால் `எதிர்க்கட்சித் தலைவர்களிடம் ஆலோசனை கேட்க அவர்களென்ன மருத்துவர்களா?’ என்று முதல்வர் கேலி பேசுவது அதிர்ச்சியளிக்கிறது. இது முதல்வரின் பொறுப்புக்கேற்ற நாகரிகமல்ல என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அப்படியென்றால், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் தலைவர்களோடு தொலைத்தொடர்பில் கலந்தாய்வு செய்தாரே, அது என்ன அவருடைய அறியாமையின் வெளிப்பாடா? என்ற கேள்வி எழுகிறது. மருத்துவம் படித்தவர்களே எதிர்க்கட்சித் தலைவர்களாக இருக்க வேண்டுமென்றால், முதல்வர் பதவிக்கும்கூட அது பொருந்தும்தானே என்கிற `லாஜிக்', இங்கே கேள்வியாக எழுகிறது.

முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

அரசியல் தலைவர்கள் கட்டாயம் அறிந்திருக்கவேண்டியது ஜனநாயகம் என்ற மருத்துவத்தைத்தான். அதுதான் சர்வாதிகாரம் என்ற நோய்த் தொற்றிலிருந்து நாட்டைக் காப்பாற்றும். கொரோனா தொற்று தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களைத்தான் அழிக்கும். ஆனால், சர்வாதிகாரம் என்னும் நோய்த்தொற்றோ ஒட்டுமொத்த நாட்டையும், அடுத்தடுத்த தலைமுறையையும் அழித்துவிடும்.

`குற்றம் சொல்லும் நேரமா இது! ஆலோசனை வழங்க அவர்  என்ன மருத்துவரா?’ - ஸ்டாலினை சாடிய முதல்வர்

எனவே, தமிழக முதல்வர் சர்வாதிகாரம் என்னும் ஜனநாயகவிரோத நோய்த்தொற்றுக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதே எமது கவலை” எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு