அரசியல்
Published:Updated:

“கொள்ளை பல்கலைக்கழகத்துக்கு வேலுமணி துணைவேந்தர்!”

கார்த்திகேய சிவசேனாபதி
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்திகேய சிவசேனாபதி

- கார்த்திகேய சிவசேனாபதி அதிரடி

வேட்பாளர் அறிவிக்கப்பட்டதில் ஆரம்பித்து வாக்குப்பதிவு வரை, ஒவ்வொரு நாளும் அனல் பறந்த தொகுதிகளில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியும் ஒன்று. ‘எளிதில் வென்றுவிடுவார்’ என்று எதிர்பார்க்கப்பட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராகக் கட்சியின் சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதியைக் களமிறக்கியது தி.மு.க. இதனாலேயே பரபரப்புக்கும் அதிரடிக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது தொண்டாமுத்தூர் களம். வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், கார்த்திகேய சிவசேனாபதியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

‘‘வேலுமணியை ‘ஊழல்மணி’ எனத் தொகுதி முழுவதும் கூறினீர்கள். ஆனால், வேலுமணி உங்கள் பெயரைக் கூடப் பயன்படுத்தவில்லை. ஊடகங் களில்கூட, ‘அவர் எனக்கு நிகரானவர் இல்லை. ஸ்டாலின்தான் எனக்கு நிகரானவர்’ என்று கூறுகிறாரே..?”

‘‘தி.மு.க வேட்பாளர் என்று சொல்லி பல இடங்களில் என்னை விமர்சித்திருக்கிறார். 150 மான நஷ்ட ஈடு வழக்குகளை இந்தத் தொகுதிக்குள் போட்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில் காவல்துறை அதிகாரிகளை அவரின் ஆட்கள் அடிக்கச் சென்றார்கள். சில மாதங்களுக்கு முன்பு வனத்துறை அதிகாரியை அடிக்க முயன்றார்கள். இந்த ரௌடியிசத்தில் அவரின் அண்ணன் அன்பரசன், வடவள்ளி சந்திரசேகர் இருவருக்கும் முக்கியப் பங்கு உண்டு. அதனால்தான், ‘தைரியம் இருந்தால் விவாதம் பண்ண வாங்க’ என்று அழைத்தேன். பயந்து ஓடித்தான் போனார். கொள்ளையடிப்பதற்கு ஒரு பல்கலைக்கழகம் தொடங்கினால், வேலுமணியைத் துணைவேந்தராக நியமிக்கலாம்.’’

‘‘தேர்தல் நடத்தும் அலுவலர், அவர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டதாகச் சொல்கிறீர்கள். இது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா?”

‘‘நிச்சயமாக எங்களுக்கு பாதிப்பு இருந்தது. மாவட்ட ஆட்சியர், ஐ.ஜி., கமிஷனர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை மாற்றினார்கள். அது பாசிட்டிவான விஷயம்தான். அந்த இடத்தில் நேர்மையான அதிகாரிகள் வந்ததால், நிறைய மாற்றங்கள் இருந்தன. ஆனால், ஆறேழு ஆண்டுகளாக வேலுமணிக்கு விசுவாசமாக இருந்த கீழ்மட்ட அதிகாரிகளில், ஒரே ஒரு இன்ஸ்பெக்டரைத் தவிர யாரும் மாற்றப்படவில்லை. அதன் பாதிப்பு கடைசிநேரம் வரை இருந்து கொண்டேதான் இருந்தது.’’

“கொள்ளை பல்கலைக்கழகத்துக்கு வேலுமணி துணைவேந்தர்!”

‘‘வாக்குப்பதிவின்போது செல்வபுரம் பகுதியில் என்னதான் நடந்தது?’’

‘‘காலை 7:30 மணி முதல் ஒவ்வொரு பூத்தாகச் சென்றுகொண்டிருந்தோம். எங்கள் பூத் ஏஜென்ட்களிடம் மட்டு மல்லாமல் மற்ற ஏஜென்ட்களிடமும் நலம் விசாரித்துக்கொண்டிருந்தேன். வெளியில் வரும்போது, பத்து, இருபது பேர் என்னைச் சூழ்ந்துகொண்டு, ‘இங்கு எதற்காகப் பிரசாரம் செய்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி பிரமுகர்களும் அதில் இருந்தார்கள். ‘எங்க அமைச்சரை எதிர்த்து நிக்கறியா..? கழுத்தை அறுத்துருவேன். உன் சாவு என் கைலதான்’ என்று கத்தினார்கள். அங்கிருந்த காவல்துறை எதையும் கண்டுகொள்ளவில்லை. தி.மு.க தொண்டர்களும் பொதுமக்களும் கோஷம் போடத் தொடங்கினார்கள். அதையடுத்து காவல்துறையினர் கேட்டை மூடிவிட்டார்கள். துணை கமிஷனர் ஸ்டாலின் வந்து, எங்களை மீட்டு காரில் ஏற்றினார். அப்போதும்கூட அந்தக் கும்பலைச் சேர்ந்தோர் கார்மீது ஏறினார்கள். போலீஸ் லத்தியைப் பறித்து கண்ணாடியை அடித்தார்கள். எங்கள் தொண்டர்களும் பொதுமக்களும் காரின் பக்கவாட்டில் ஏறி நின்றுகொண்டு அடியை வாங்கிக் கொண்டார்கள். அதனால்தான், எங்களுக்கு எதுவும் ஆகவில்லை. தற்போது அடிபட்டவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். எங்கள் ஆட்சி வந்தவுடன் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.’’

‘‘சுயேச்சையாகப் போட்டியிட்ட மன்சூர் அலிகான், தனது பூத் ஏஜென்ட்டை அ.தி.மு.க-வினருக்கு விட்டுக் கொடுத்ததை நீங்கள் கண்டுபிடித்ததுதான் பிரச்னைக்குக் காரணம் என்று சொல்கிறார்களே...’’

‘‘மன்சூர் அலிகானின் முதன்மை ஏஜென்ட் கொடுக்க வேண்டிய கடிதத்தில், பல இடங்களில் கையெழுத்து இல்லை. பல்வேறு குளறுபடிகள் அதில் இருந்ததால், அதற்கு ஆட்சேபனை தெரிவித்து அந்த பூத் ஏஜென்ட்களை வெளியேற்றிவிட்டோம். மன்சூர் அலிகானின் பூத் ஏஜென்ட்களாக அமர்ந்திருந்தவர்களெல்லாம் வேலுமணியின் ஆட்கள்தான். அவர் வேலுமணியின் பினாமி வேட்பாளர். இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகத்தான் மன்சூர் அலிகானைக் கொண்டுவந்தார்கள். மன்சூர் அலிகானின் ஏஜென்ட்களை வெளியேற்றினால், இவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது? இதன் மூலம், மன்சூர் அலிகான் இவர்களால்தான் வந்தார் என்பது தெளிவாகிவிட்டது.’’

‘‘பூத்தில் நீங்கள் ஓட்டுக் கேட்டதாக அ.தி.மு.க-வினர் சொல்கிறார்களே?’’

‘‘எங்களுக்கு விதிமுறைகள் நன்றாகத் தெரியும். விதிகளை மீறிச் செயல்பட்டது அவர்கள்தான். விதிகளை மீறியதற்காக வேலுமணி மீது காவல்துறையே வழக்கு பதிவு செய்திருக்கிறது. பி.ஜே.பி-யுடன் சேர்ந்து சம்பந்தமில்லாமல் பொய் பேசுவதற்கு அ.தி.மு.க-வினரும் கற்றுக்கொண்டுவிட்டார்கள்.’’

‘‘அ.தி.மு.க-வினரால் தாக்கப்பட்டதாக நீங்கள் சீன் போடுவதாக வேலுமணி கூறியிருக்கிறாரே?’’

‘‘அவருக்குப் பார்வை நன்றாக இருந்தால், அந்த வீடியோவை எடுத்துப் பார்க்கச் சொல்லுங்கள். அவர்களெல்லாம் அவரின் குண்டர்கள்தானே... இல்லை என்று சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்?’’

‘‘தேர்தல் முடிந்தவுடன் நீங்கள் ஊருக்குச் சென்றுவிடுவீர்கள் என வேலுமணி கூறுவது பற்றி?’’

‘‘இந்திய நாட்டுச் சட்டப்படி, ஓர் இந்திய பிரஜை எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம். மே 2-க்குப் பிறகு எம்.எல்.ஏ எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்பதுதான் முக்கியம்.’’