Published:Updated:

வேலுமணி சிறைக்கு செல்வது உறுதி! - அடித்துச் சொல்கிறார் கார்த்திகேய சிவசேனாபதி...

கார்த்திகேய சிவசேனாபதி
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்திகேய சிவசேனாபதி

காவிரி ஆத்துல மணலை மாட்டுவண்டில அள்ளுவாங்க. அதை எடப்பாடி அரசு தடுத்து நிறுத்தியிருக்குது. அதையே வாழ்வாதாரமாகக்கொண்ட ஏழைத் தொழிலாளர்கள் மாட்டுவண்டியை வித்துட்டு இருக்காங்க

“தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களைவிட கோவையில் மிகப்பெரிய அராஜகம் நடந்துகொண்டிருக்கிறது” என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொந்தளிக்கக் காரணம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அதனாலேயே வேறு எந்த வேட்பாளருக்கும் இல்லாத வகையில், தொண்டாமுத்தூர் தொகுதியில் சிறப்பு வியூகம் அமைத்து, பொருளாதாரத்திலும் சமூக செல்வாக்கிலும் வேலுமணிக்கு இணையான கார்த்திகேய சிவசேனாபதியைக் களமிறக்கியிருக்கிறது தி.மு.க. பிஸியான பிரசாரத்துக்கு நடுவில் அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“கட்சியிலும் ஆட்சியிலும் பவர்ஃபுல்லாக இருக்கும் அமைச்சர் வேலுமணியை எதிர்ப்பதில் தயக்கம் இல்லையா?”

“எதுக்குத் தயக்கம்? அவர் பவர்ஃபுல்னு எனக்குத் தோணலை. மக்கள்கிட்ட மரியாதையும் செல்வாக்கும் இருந்தாத்தான் அது பவர்ஃபுல். அதுக்குக் கட்சி, ஆட்சி, அதிகாரம் எதுவும் தேவையில்லை. வேலுமணிகிட்ட ஆட்சியும், அதிகாரமும், ஆணவமும்தான் இருக்குது. முதல்வர் உட்பட 32 அமைச்சர்கள்ல இவரைப்போல ஆணவம் பிடிச்சவரைப் பார்க்க முடியாது. அவர் மீது குற்றம் சொன்னால் மிரட்டுவது, பணத்தைக் கொடுத்து யாரையும் வாங்குறதுன்னு நினைக்குற மனிதர் அவர்.”

வேலுமணி சிறைக்கு செல்வது உறுதி! - அடித்துச் சொல்கிறார் கார்த்திகேய சிவசேனாபதி...

“அப்படியென்றால் வேலுமணிக்கு பலமே இல்லை என்று சொல்கிறீர்களா?”

“பணம்தான் அவரோட பலம். ஆனா, அதுக்கும் பெரிய மரியாதை இருக்கற மாதிரி எனக்குத் தெரியலை. பணம், அதிகாரத்தைத் தவிர அவர்கிட்ட எதுவும் இல்லை”.

“நீங்கள் மண் சுரண்டலுக்கு எதிராகப் பேசுகிறீர்கள். ஆனால், உங்கள் கட்சியின் செந்தில் பாலாஜியோ, ‘ஸ்டாலின் பதவியேற்ற ஐந்தாவது நிமிடத்தில் மண் எடுக்கலாம். எந்த அதிகாரி வந்தாலும் பார்த்துக்கொள்வேன்’ என்கிறார். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் சுற்றுச்சூழலுக்கு என்ன பாதுகாப்பு இருக்கப்போகிறது?”

“காவிரி ஆத்துல மணலை மாட்டுவண்டில அள்ளுவாங்க. அதை எடப்பாடி அரசு தடுத்து நிறுத்தியிருக்குது. அதையே வாழ்வாதாரமாகக்கொண்ட ஏழைத் தொழிலாளர்கள் மாட்டுவண்டியை வித்துட்டு இருக்காங்க. இப்படி மாட்டுவண்டியில மணலை அள்ளத்தான் அனுமதி கொடுப்பேன்னு செந்தில் பாலாஜி சொல்றார். மாட்டுவண்டிகளுக்குத் தடை விதிச்சுட்டு, ராட்சத இயந்திரங்கள்ல ஆத்தைத் தோண்டி மணல் எடுக்க அனுமதிக்கிறாங்க. இதை யாரும் எதிர்த்துப் பேசுறதில்லை.’’

“ஏற்கெனவே காவிரி ஆறு வறண்டுகிடக்கிறது. பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரி ஆற்றில் மாட்டுவண்டியில் மணலைச் சுரண்டினாலும், ராட்சத இயந்திரத்தில் மணலைச் சுரண்டினாலும் தவறுதானே?”

“ஒரு வருஷம் முழுசும் மாட்டுவண்டில மணல் எடுத்தாக்கூட, அ.தி.மு.க ஆளுங்க ஒரு மணி நேரத்துல எடுக்கற மணல் அளவுக்கு எடுக்க முடியாது. அந்தந்தப் பகுதியில இருக்கறவங் களோட வாழ்வாதாரத்துக்காக ஓரளவு இயற்கை வளங்களைப் பயன்படுத்தலாம். முற்றிலும் அழிக்கக் கூடாது.”

“தொண்டாமுத்தூரில் தி.மு.க குண்டர்களைக் களமிறக்கி, கலவரம் ஏற்படுத்த முயல்வதாக வேலுமணி சொல்கிறாரே?”

“நான் கிராமத்துல சாதாரணமா விவசாயம், கால்நடை, சுற்றுச்சூழல்னு இருந்தவன். எனக்கு எப்படி குண்டர்களோடு தொடர்பு இருக்கும்? தொண்டாமுத்தூர்ல ரெளடித்தனம் செய்யக்கூடிய ஒரே நபர் வேலுமணிதான்.”

வேலுமணி சிறைக்கு செல்வது உறுதி! - அடித்துச் சொல்கிறார் கார்த்திகேய சிவசேனாபதி...

“வேலுமணி மீது ஊழல் குற்றசாட்டு வைக்கிறீர்கள். தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஊழலே நடக்கவில்லையா?”

“ஒரு கட்சியின் தலைவி, முன்னாள் முதல்வர், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறை சென்றது அ.தி.மு.க-வுலதான். அப்படி கலைஞர், தளபதி மீது வழக்கு இருக்குதா? பத்தாண்டுக் காலமா ஆட்சியில இருந்த அ.தி.மு.க, ஊழல் செய்ததா எங்கள் மேல ஒரு வழக்கைக்கூடப் போட முடியலை. 85 ரூபாய் விளக்குமாறை 500 ரூபாய்க்குக் கொள்முதல் பண்றாங்க. 600 ரூபாய் பல்பை 2,500 ரூபாய்க்கு கவர்மென்ட்டுக்கு வித்த ஒரே மகராசன் வேலுமணிதான். ஆனா, தி.மு.க பத்தியும், என்னைப் பத்தியும் பொய், புரட்டுப் பேசுறார். `நேர்ல வாங்க... விவாதம் பண்ணலாம்’னு கூப்பிடறேன். `ஆன்லைன்ல வர்றேன், ஆட்டுக் குட்டில வர்றேன்’னு சொல்லிட்டு இருக்கார்.”

“வேலுமணியை வீழ்த்த என்ன வியூகம் வைத்திருக்கிறீர்கள்?”

“அவரை வீழ்த்த வியூகமெல்லாம் தேவை இல்லைங்க. அவர் பண்ணின அராஜகத்தால மக்கள் பயந்து கிடக்கறாங்க. அதையெல்லாம் மக்கள்கிட்ட சொன்னாலே போதும். அவர்மீது இருக்கும் வழக்குல ஜூன் மாதத்தில் இறுதித் தீர்ப்பு வருது. அதுல அவர் சிறைக்குச் செல்வது உறுதின்னு சட்ட வல்லுநர்கள் சொல்றாங்க. அதுக்காகத்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தால், எப்படியாவது சமாளிக்கலாம்னு பார்க்கிறார். அது நடக்காது!”