நகராட்சியாக இருந்த தூத்துக்குடி, கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 60 வார்டுகளை உள்ளடக்கிய இந்த மாநகராட்சியின் மேயர் பதவி, முதல் முறையாக தற்போது பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக வளர்ந்துவரும் தொழில் நகரம். தமிழகத்தின் கடல்வழி நுழைவு வாயிலான தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தினை உள்ளடக்கியது. மீன் பிடித்தல், உப்பு உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதி ஆகியவை முக்கியத் தொழிலாக உள்ளன.

இந்தியாவிலேயே குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தின் தூத்துக்குடியில்தான் அதிகளவு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சாலை, ரயில், விமானம், கப்பல் என நான்கு வகைப் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியின் மேயராக ஜெகன் பொறுப்பேற்றுள்ளார். இவர், தூத்துக்குடி மாவட்ட தி.மு.க-வை தொடர்ந்து 30 ஆண்டுக்கும் மேலாக தன் கைக்குள்ளும், கண் அசைவிலும் வைத்திருந்த, கலைஞர் கருணாநிதியின் ’முரட்டு பக்தன்’ என அழைக்கப்பட்ட மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ என்.பெரியசாமியின் இளைய மகன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதுமட்டுமில்லாமல், மகளிர் நலன் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவனின் தம்பியும் ஆவார். நகராட்சியாக இருந்த தூத்துக்குடி, தி.மு.க ஆட்சியில்தான் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது தூத்துக்குடி நகர்மன்றத் தலைவராக இருந்த கஸ்தூரி தங்கம் இந்த மாநகராட்சியின் முதல் மேயராக பொறுப்பேற்றார். அப்போது மறைந்த பெரியசாமி தனது சொந்த செலவில் 111 சவரன் தங்கச்சங்கிலியை மாநகராட்சிக்கு வழங்கி, அதை மாநகராட்சி தொடக்க விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அணிவிக்க வைத்தார்.

தற்போது, தூத்துக்குடி மாநகராட்சியாக பொறுப்பேற்ற ஜெகனுக்கு அதே 111 சவரன் தங்கச்சங்கிலியை தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி அணிவித்தார். தன் தந்தை நன்கொடையாகக் கொடுத்த தங்கச்சங்கிலியை கனிமொழி அணிவித்தபோது ஜெகனின் கண்களில் கண்ணீர் ததும்பியது. அதைக் கண்டு அமைச்சர் கீதாஜீவனும் கலங்கினார். இது தொண்டர்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.