தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நாடோடிப் பழங்குடிகள் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள், தாங்கள் குடும்பமாகச் செல்லும் இடங்களிலேயே தற்காலிகக் கூடாரங்கள் அமைத்து ஊசிமணி, பாசி விற்றும், பச்சை குத்தியும், வேட்டையாடுதல் தொழில் செய்தும் பிழைப்பு நடத்துகின்றனர். நாடோடிகளாகத் திரியும் இவர்களுக்கு நிரந்தர முகவரியும், இருப்பிடமும் இல்லாததால் அவர்களில் பெரும்பாலானோருக்கு ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு என எந்த அடையாள அட்டையும் இல்லாமல் இருந்துவந்தது. இந்த நிலையில் சமீபத்தில் பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, தமிழகம் முழுவதும் வசித்துவரும் நாடோடிப் பழங்குடிகளுக்கு அடையாளம் உருவாக்கும் பொருட்டு வாக்காளர் அடையாள அட்டை வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தை வசிப்பிடமாகக்கொண்டு வாழ்ந்துவந்த 54 நாடோடிப் பழங்குடிகள் குடும்பத்தில் தகுதியுள்ள 36 பேருக்கு முதற்கட்டமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மூன்று தலைமுறை போராட்டத்துக்குப் பின்பு, அரசால் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்ட முதல் அடையாள அட்டை என்பதால், இந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதை நாடோடிப் பழங்குடிகள் குடும்பத்தினர் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளான இன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றுவந்தது. முதன்முதலாக வாக்குரிமை பெற்ற நாடோடிப் பழங்குடிகள் குடும்பத்தினர் 36 பேருக்கும் போல்பேட்டையிலுள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி காலை 9:30 மணிக்குக் குடும்பமாக வந்திருந்த நாடோடிப் பழங்குடிகள் சமூகத்தினர் வரிசையில் நின்று, தங்களது முதல் வாக்கைப் பதிவு செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இது குறித்து நம்மிடம் பேசிய அவர்கள், "எங்களுக்குப் பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் முதன்முறையாக வாக்களிக்கும் உரிமையை அரசு அளித்துள்ளது. இதனால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கோம். மூணு தலைமுறையா வாக்குரிமைக்காகப் போராடிவந்தோம். இப்போதான் அந்த உரிமை எங்களுக்குக் கிடைச்சிருக்கு. குடியிருக்க அரசு எங்களுக்கு வீடு கட்டித் தரணும்" என்றனர்.