Published:Updated:

எ.வ.வேலு முதல் செந்தில் பாலாஜி வரை... அதிமுகவில் இருந்து வந்து அமைச்சர் ஆனவர்கள் - ஒரு பார்வை!

தி.மு.க அமைச்சர்கள்
தி.மு.க அமைச்சர்கள்

இந்த அமைச்சர்களில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், எ.வ.வேலு, எஸ்.ரகுபதி, ஈரோடு S. முத்துச்சாமி, அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், செந்தில் பாலாஜி, சேகர் பாபு ஆகிய 8 பேர் வெவ்வேறு காலகட்டங்களில் அ.தி.மு.கவில் இருந்து தி.மு.கவுக்கு வந்தவர்கள்.

தமிழக முதல்வராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். அவருடன், 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த அமைச்சர்களில், 18 பேர் ஏற்கெனவே, தி.மு.க அல்லது அ.தி.மு.கவில் அமைச்சர்களாகப் பதவி வகித்தவர்கள். முதன்முறை அமைச்சராகப் பதவியேற்றவர்கள் 15 பேர். அமைச்சர்களில் பெண்கள், இரண்டு பேர், பட்டியல் சமூகத்தவர்கள் மூன்று பேர், சிறுபான்மை சமூகத்தவர்கள் 3 பேர். அது மட்டுமல்ல, இந்த அமைச்சர்களில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், எ.வ.வேலு, எஸ்.ரகுபதி, ஈரோடு S. முத்துச்சாமி, அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், செந்தில் பாலாஜி, சேகர் பாபு ஆகிய 8 பேர் வெவ்வேறு காலகட்டங்களில் அ.தி.மு.கவில் இருந்து தி.மு.கவுக்கு வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் குறித்த சிறிய அறிமுகத்தை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

எ.வ.வேலு
எ.வ.வேலு

இந்தப் பட்டியலில் முப்பதாண்டுகளுக்கு முன்பாகவே அ.தி.மு.கவில் இருந்து வெளியேறிவர் தற்போது பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் எ.வ.வேலு. நடுத்தர விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு 1984-ம் ஆண்டு தண்டராம்பட்டு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.கவில் வாய்ப்புக் கிடைத்தது. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரைவிட 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் வேலு. எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜானகி அணியில் சேர்ந்தார். நடிகர் பாக்யராஜ் கட்சி ஆரம்பித்தபோது, அதன் கொள்கை பரப்புச் செயலாளராகவும் பதவி வகித்தார். பின்னர் அந்தக் கட்சி காணாமல் போன நிலையில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைய முயன்றார். ஆனால், ஜானகி அணியில் இருந்தவர் என்ற முத்திரையால் ஓரம் கட்டப்பட்டார். இதனையடுத்து 1996-ல் திமுகவில் இணைந்தார் வேலு.

ஆனால், அவருக்கு உடனடியாக தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. 2001-ம் மற்றும் 2006-ல் தண்டராம்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றிய போது அவருக்கு உணவுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தொகுதி மறு சீரமைப்பில் தண்டராம்பட்டு தொகுதி இல்லாமல் போக, திருவண்ணாமலை தொகுதியில் 2011, 2016 மற்றும் 2021 தேர்தலில் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார். இந்தமுறை தன்னை எதிர்த்துப் போட்டியிட், பா.ஜ.கவின் தணிகைவேலுவைவிட, 94,673 வாக்குகள் அதிகம் பெற்று மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளார். தவிர, மிகவும் சக்தி வாய்ந்த பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

அடுத்ததாக நாம் பார்க்கவிருப்பது, எம்.ஜி.ஆரின் தீவிரமான ரசிகரும் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியுமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். எம்.ஜி.ஆரின் ரசிகராக மட்டுமில்லாமல் அரசியல் களத்தில் அவரின் போர்பப்டைத் தளபதியாகவும் விளங்கியவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அ.தி.மு.க தொடங்கப்பட்டு நடந்த முதல் தேர்தலிலேயே சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் ராமச்சந்திரன். தொடர்ந்து, 1980, 84-ல் சாத்தூர் தொகுதியிலும் 89-ல் விளாத்திகுளம் தொகுதியிலும் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்ஜிஆர் ஆட்சியில் கூட்டுறவு, பொதுப் பணித் துறை, மின்சாரத் துறை அமைச்சராகப் பதவிவகித்தார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று கட்சி இரண்டாகப் பிரிந்தபோது, இவர் ஜெ. அணியில் இருந்தார்.

ஜெயலலிதாவை ஆதரித்த 32 எம்.எல்.ஏ-க்களை விருதுநகருக்குக் கொண்டு வந்து, தனது ஸ்பின்னிங் மில்லில் தங்கவைத்து பாதுகாத்தார். தொடர்ந்து நடைபெற்ற தேர்தலிலும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். ஆனால், 1991 தேர்தலில், அ.தி.மு.க சார்பில் எம்.எல்.ஏவாக வெற்றிபெற்ற போதும் அவருக்கு அமைச்சர் பதவி எதுவும் வழங்கப்படாததால் அதிருப்தியடைந்தார். தொடர்ந்து, 1996 தேர்தலில அடைந்த தோல்விக்குப் பிறகு தி.மு.கவில் இணைந்தார். தொடர்ந்து, 2001-ல் வெற்றி, 2006 வெற்றி மற்றும் அமைச்சர் பதவி, 2011-ல் தோல்வி, 2016 மற்றும் 2021ல் வெற்றி பெற்றுள்ளார். தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

 தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி
தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி

அடுத்ததாக, தற்போது சட்டத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் எஸ். ரகுபதி. 1991-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருமயம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரான இவர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். பின்னர் தி.மு.கவில் இணைந்த இவர், புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.ஆனதோடு மட்டுமல்லாமல், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். தொடர்ந்து, 2011-ல் விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். தொடர்ந்து, 2016 தேர்தலில், திருமயம் சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.கவின் வைரமுத்துவை எதிர்த்துப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். தற்போதும் அதே தொகுதியில், அதே நபரை வெற்றிபெற்று சட்ட அமைச்சராகியிருக்கிறார் ரகுபதி.

அடுத்ததாக, ஸ்டாலின் அமைச்சரவையில் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் முத்துச்சாமி குறித்துப் பார்ப்போம். அ.தி.மு.க தொடங்கப்பட்டதில் இருந்து அந்தக் கட்சியில் செல்வாக்குமிக்க ஒரு நபராகவும் எம்.ஜி.ஆரின் மனசாட்சியாகவும் விளங்கியர் முத்துச்சாமி. 1977,80,84 ஆகிய மூன்று தேர்தல்களில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் எட்டு வருடம் போக்குவரத்துறை அமைச்சராகப் பணியாற்றியிருக்கிறார். தொடர்ந்து,1991 தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக மட்டுமல்லாமல் ஜெயலலிதா அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 1996-ல் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அ.தி.மு.கவில் புறக்கணிப்பட 2010-ல் தி.மு.கவில் இணைந்தார். தொடர்ந்து, 2011, 2016ல் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர், தற்போது, ஈரோடு மேற்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

அடுத்ததாக, தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் அனிதா ராதாகிருஷ்ணனைப் பற்றிப் பார்ப்போம். அ.தி.மு.க சார்பில் 2001 மற்றும் 2006-ல் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், 2001-ல் கால்நடை வளம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துறை அமைச்சராகப் பணியாற்றினார். 2010-ல், தலைமை மீதான மனக்கசப்பின் காரணமாக, தன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.கவில் இணைந்து தொடர்ந்து நடந்த இடைத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொடர்ந்து, 2011, 2016, 2021 என அதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். தற்போது, தமிழக மீன்வளத்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

தற்போது, போக்குவரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இராஜகண்ணப்பனைப் பற்றிப் பார்ப்போம். அ.தி.மு.க சார்பில்,1991 தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரான இராஜகண்ணப்பன், பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை என முப்பெரும் துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்தார். அ.தி.மு.கவில் ஜெயலலிதாவுக்குப் பிறகு செல்வாக்கு மிக்க நபராகவும் விளங்கினார். 2000-ம் ஆண்டில் அ.தி.மு.கவில் இருந்து விலகி, மக்கள் தமிழ் தேசம் எனும் கட்சியைத் தொடங்கினார். 2001 தேர்தலில், தி.மு.க கூட்டணியில் இணைந்து போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். தொடர்ந்து, 2006-ம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.

மதுரை கூட்டத்தில் ஸ்டாலின், ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர்
மதுரை கூட்டத்தில் ஸ்டாலின், ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர்

அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த ராஜ கண்ணப்பன், 2009-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் மீண்டும் சேர்ந்தார். அப்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். தொடர்ந்து, 2011 தேர்தலிலும் திருப்பத்தூர் தொகுதியில், பெரியகருப்பனை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பிறகு, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, இபிஎஸ்-ஓபிஎஸ் அணியில் சேர்ந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை அல்லது ராமநாதபுரத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு ‘சீட்’ மறுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த இராஜகண்ணப்பன், உடனடியாக திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பிரசாரமும் செய்தார். தொடர்ந்து மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார். இந்தமுறை அவர் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதோடு போக்குவரத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்.

`இதை தி.மு.க-வினரே நினைத்துப்பார்க்கவில்லை!’ - அமைச்சரவை எதிர்பார்ப்பும் விடுபட்டவர்களும்!

அடுத்ததாக தற்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சேகர் பாபு. ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளுல் ஒருவரான சேகர்பாபு, 2001 மற்றும் 2006 தேர்தல்களில் சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார். வட சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் பொறுப்பு வகித்த சேகர்பாபு, 2011 ல் திடீர் என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். தொடர்ந்து, தி.மு.க சார்பில், 2011-ல் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர், 2016 மற்றும் 2021 தேர்தலில் வெற்றிபெற்றார். தற்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

அடுத்ததாக நாம் பார்க்கவிருப்பது, தற்போது மின்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் செந்தில் பாலாஜி. 2010-ல் அ.தி.மு.கவில் இணைந்த செந்தில்பாலாஜிக்கு, 2011-ல் சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் பதவியேற்றார். 2016 தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தினகரன் அணியில் இருந்தார். அவர் தனிக்கட்சி ஆரம்பித்தபோது அவரின் போர்ப்படைத் தளபதிகளில் ஒருவராக விளங்கினார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2018 டிசம்பரில் தி.மு.கவில் இணைந்தார். அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தற்போது, கரூர் தொகுதியில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை வென்று சட்டமன்ற உறுப்பினராகவும் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராகவும் பதவியேற்றிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு