மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கியப் பணி, எழுத்தாளுமையைப் போற்றும்விதமாக, அவர் பயன்படுத்திய பேனாவின் மாதிரி வடிவத்தை பிரமாண்ட சிலையாகச் சென்னை மெரினா கடலுக்கு நடுவே அமைக்க, தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக சுமார் 81 கோடி ரூபாய் செலவில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையைவிடப் பெரியதாக 134 அடி உயரத்தில் பேனா சிலை அமைக்கப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும், கடலில் அமையவிருக்கும் இந்த பேனா சிலைக்குச் செல்லக் கரைமீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டரும் என மொத்தம் 650 மீட்டர் தொலைவில், கடற்பரப்பிலிருந்து 6 மீட்டர் உயரத்தில் இரும்பாலான கண்ணாடிப் பாலம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நினைவுச்சின்னத்துக்கு `முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச்சின்னம்' என்று பெயரிடப்படவிருக்கிறது. ஏற்கெனவே, கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் சுமார் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டுவரும் நிலையில், மேலும் இரண்டு மடங்கு செலவில் புதியதாகக் கடலில் பேனா சிலை வைப்பதற்கு பல்வேறு தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "கலைஞருக்கு பேனா வடிவிலான நினைவுச்சின்னம் வைப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனச் சொல்பவர்களின் டி.என்.ஏ-வை நாம் பரிசோதிக்க வேண்டும். கலைஞர் நீண்டகாலம் தமிழ் சமுதாயத்துக்காக, தமிழருக்காக உழைத்த ஒரு மனிதர். அவர் எவ்வளவு எழுத்துப் பணி செய்திருக்கிறார் என்பதை இந்தச் சமூகம் அறியும். மேலும், கலைஞரின் நினைவாக அவருடைய சிலையை வைக்காமல் பேனா சிலையை வைப்பது எவ்வளவு இலக்கிய நயம்மிக்க, ரசனையான செயல்.... அதை காங்கிரஸ் வரவேற்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.