Published:Updated:

`கெத்து, வச்சி செய்வது வார்த்தைகள் சிலப்பதிகாரத்தில் இருக்கு’- மாஃபா பாண்டியராஜன்

மாணவர்கள் மத்தியில் புதிய வார்த்தைகளை உருவாக்க மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. எல்லா தீர்ப்புகளும் தமிழ் மொழியில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Pandiyarajan
Pandiyarajan

18-வது தமிழ் இணைய மாநாட்டின் தொடக்கவிழா, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், க.பாண்டியராஜன் மற்றும் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் பாண்டியராஜன், ``இன்றைய இணைய உலகில் 80% தகவல் தொடர்புகள் கைப்பேசி மற்றும் இணையம் மூலமாக நடைபெறுகின்றன.

KP Anbazhagan
KP Anbazhagan

இதில் 54% தகவல் தொடர்புகள் ஆங்கிலத்தில் நடைபெறுகின்றன. தமிழ் மொழியில் தகவல் தொடர்பு 0.01% மட்டுமே நடைபெறுகிறது. உலகில் உள்ள 7 செம்மொழிகளில் தமிழ், சீன மொழியைத் தவிர மற்ற 5 மொழிகள் பேசப்படுவது கிடையாது. எனவே, இணையத் தகவல் தொடர்பில் தமிழ் மொழியை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் தமிழ்மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். இன்றைய இளைஞர்கள், புதிய வார்த்தைகளை உருவாக்கி வருகின்றனர். தெரிந்தோ தெரியாமலோ, 'கெத்து', 'வச்சி செய்வது' உள்ளிட்ட வார்த்தைகளைப் பிரபலப்படுத்தியுள்ளனர்.

இந்த 'கெத்து' `வச்சி செய்வது’ என்கிற வார்த்தைகள் சிலப்பதிகாரத்தில் உள்ளன. தற்போது, தமிழ் பாடலாசிரியர் தாமரை, நாம் மறந்த தமிழ் வார்த்தைகளைத் தன் பாடல்கள் மூலம் வெளிக்கொண்டுவருகிறார், அவருக்கு பாராட்டுகள். சொற்குவை என்கிற இணையதளத்தை உருவாக்கி, அதன்மூலம் புதிய தமிழ் வார்த்தைகளை உருவாக்கலாம். ஏற்கெனவே, நாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்திவந்த நிலையில், தற்போது தமிழ் பாதுகாப்புப் போராட்டம் நடத்த இளைஞர்கள் சொற்படை வீரர்களாகத் தயாராக வேண்டும். மாணவர்கள் மத்தியில் புதிய வார்த்தைகளை உருவாக்க மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

`தமிழும் சம்ஸ்கிருதமும் கலையின் இரண்டு கண்கள்’ - அமைச்சர் பாண்டியராஜன்
tamil
tamil

எல்லா தீர்ப்புகளும் தமிழ் மொழியில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தினமும் வரும் நூற்றுக்கணக்கான தீர்ப்புகளைத் தமிழ் மொழியில் மாற்றத் தேவையான மென்பொருள் இல்லாத காரணத்தால், பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிக்கு மாற்றப் பயன்படும் செயலியை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அடுத்ததாக, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், `` கணிப்பொறியை ஏற்றுக்கொள்ள முடியாத மொழி வளராது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கணினியில் நுழைந்த சொற்ப காலத்தில், தமிழ்மொழி பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

Vikatan

தமிழ்வழி பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாகக் கூறுவது தவறு. தமிழ் வழியில் படிக்க மாணவர்களை அரசு ஊக்குவிக்கிறது. தமிழ் வழியில் படிக்காதது மாணவர்களின் தவறுதானே தவிர, அரசின் தவறு அல்ல. மத்திய அரசு, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு நிறுவனம் என்ற அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. அதற்கு, மாநில அரசு பங்கு நிதியை தமிழக அரசு நிச்சயம் வழங்கும்” என்றார்.

Pandiyarajan
Pandiyarajan

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாண்டியராஜன், ``ஆயிரக்கணக்கான மொழிகள் இருக்கும் நிலையில், 120 மொழிகள்தான் இணையதளத்தில் பயன்படுத்தப் பட்டுவருகிறது. தமிழில், மீண்டும் ஒரு மொழிப்போர் நடத்தி, புதிய வார்த்தைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒரு இடமாக கீழடி மாறியுள்ளது. தமிழக அரசால் 40 அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. கீழடியை மிகப்பெரிய முயற்சியாகத் தமிழக அரசு கொண்டுசெல்கிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் இசைக்கல்லூரி அமைக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது'' என்று கூறினார்.