Published:Updated:

Central Vista: இடிக்கப்படும் தொன்மையான கட்டடங்கள்! - பாதுகாக்கப்படுமா ஆவணங்களும், சிற்பங்களும்?!

புதிய நாடாளுமன்றக் கட்டட மாதிரிப் படம்
புதிய நாடாளுமன்றக் கட்டட மாதிரிப் படம்

‘சென்ட்ரல் விஸ்டா’ பகுதியில் தடை விதிக்கப்பட்டதால், அங்குள்ள நிலவரமே வெளிப்படையாக இல்லாத சூழலில், சிற்பங்களும், ஆவணங்களும் முறையாகப் பாதுகாக்கப்படும் என்று கூறுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்கின்றனர் சமூக ஆர்வலகளும், வரலாற்று ஆய்வாளர்களும்.

கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படுத்தும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு விதிமுறைகளைப் பின்பற்றி பாதிப்புகளைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றுவருகின்றனர். இந்தநிலையிலும், இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணிகள் கொரோனா காலத்திலும் பல்வேறு எதிர்ப்புகளை மீறி விறுவிறுவென நடைபெற்றுவருகின்ரன. இது போன்றதொரு அசாதாரணமான சூழலில் இவ்வளவு பெரிய பொருட்செலவில் இது தேவைதானா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பிவருகின்றனர்.

புதிய நாடாளுமன்றம்
புதிய நாடாளுமன்றம்

கொரோனா இரண்டாம் அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. பாதிக்கப்பட்டவர்களில் பலரும் போதுமான மருத்துவ வசதிகளின்றி அல்லாடிவருகின்றனர். இதற்காக டெல்லி அரசாங்கமும் பல்வேறு தரப்பினரிடமிருந்து உதவிகளைக் கேட்டுவருகிறது. இந்தச் சூழலில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பணியாளர்களை அமர்த்தி மத்திய அரசின் ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தை ஏற்கெனவே குறிக்கப்பட்ட தேதிக்குள் முடித்தே தீருவோம் என்று பணிகள் நடந்துவருகின்றன.

சமீபத்தில், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதி இல்லை என்று அறிவிப்புகளைவைத்ததால் சர்ச்சை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது புதிய நாடாளுமன்றம் கட்டப்படும் இடத்தில் அதிக அளவிலான நிலப்பரப்பு தேவைப்படுவதால், அதன் அருகிலுள்ள மிகவும் தொன்மை வாய்ந்த கட்டடங்களான இந்தியாவின் தேசிய அருங்காட்சியகம், இந்திரா காந்தி தேசிய கலைக்கூடம், தேசிய ஆவணங்கள் காப்பகம் உள்ளிட்ட தேசத்தின் முக்கிய அடையாளங்களாக விளங்கிய மூன்று கட்டடங்களை விரைவில் இடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Central Vista Project
Central Vista Project
Twitter/GURKIRAT MAND

மொத்தம் 4,58,820 சதுர மீட்டர் தேவைப்படுவதால், சாஸ்திரி பவன், ஜவஹர் பவன், ரக்‌ஷா பவன், துணை ஜனாதிபதி மாளிகை, உத்யோக் பவன் உள்ளிட்ட பிற சில முக்கியமான அரசு கட்டடங்களையும் சேர்த்து இடிக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் இந்திய தேசிய அருங்காட்சியகத்தைப் பொறுத்தவரையில், மிகவும் தொன்மைவாய்ந்த அரிதான சிற்பங்கள், கல்வெட்டுகள், பழங்கால நாணயங்கள், ஓவியங்கள், நகைகள் உள்ளிட்டவை பாதுக்காக்கப்பட்டுவருகின்றன. இவற்றை வடக்கு மற்றும் தெற்குத் தொகுதிகளுக்கு மாற்றிவிட்டு அதன் மையக் கட்டடம் இடிக்கப்படவிருக்கிறதாம்.

அதேபோல் தேசிய ஆவணக் காப்பகத்தை முழுவதுமாக இடிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதில், சுமார் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் அங்கே சேகரித்துவைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு லட்சம் வரைபடங்களும், 25,000 கையெழுத்துப் பிரதிகளும், 1.3 லட்சம் முகலாயர் காலத்து ஆவணங்களும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இவை இடமாற்றம் செய்யப்படும்போது ஆவணங்கள் காணாமல் போகும் அபாயம் உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர் வரலாற்று ஆர்வலர்கள்.

இந்திரா காந்தி கலைக்கூடத்தில் இருக்கும் பொருள்களை டெல்லி ஜன்பத் ஹோட்டல் கட்டடம் புதுப்பிக்கப்பட்டு அங்கே மாற்றப்படவிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில், புதிய நாடாளுமன்றம் கட்டப்படும் இடத்திலுள்ள பழைமைவாய்ந்த கட்டடங்கள் முறையாகப் பாதுகாக்கப்படும், மேலும் அதில் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல் பணிகளும் பாரம்பர்ய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்குழுவின் ஒப்புதலுக்கு இணங்கவே நடைபெறும் என்று மத்திய அரசு தரப்பினர் தெரிவித்தது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

புதிய நாடாளுமன்றம்
புதிய நாடாளுமன்றம்

‘சென்ட்ரல் விஸ்டா’ பகுதியில் தடை விதிக்கப்பட்டதால் அங்குள்ள நிலவரம் குறித்தே வெளிப்படையாக இல்லாத சூழலில், தற்போது வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்களும், ஆவணங்களும் முறையாகப் பாதுகாக்கப்படும் என்று கூறுவதை எவ்வாறு நம்பி ஏற்றுக்கொள்வது என்று விமர்சித்து வருகின்றனர் சமூக ஆர்வலகளும், வரலாற்று ஆய்வாளர்களும். மேலும், கட்டடங்கள் இடிக்கப்படுவது குறித்து தெளிவான விளக்கத்தையும் அரசுத் தரப்பினர் தற்போது வரை வெளியிடவில்லை என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு