Published:Updated:

`மூன்று முக்கிய சந்திப்புகள்!’ - டெல்லியில் முடிவாகும் மகாராஷ்டிரா அரசியல் இழுபறி?

இன்று நடைபெறும் இந்த மூன்று சந்திப்புகள் மகாராஷ்டிரா அரசியல் களத்தில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.

அமித் ஷாவுடன் உத்தவ் தாக்கரே
அமித் ஷாவுடன் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 10 நாள்கள் ஆகியும் யாரும் ஆட்சியமைக்க முடியாத சூழல் நிலவுகிறது. மொத்தமுள்ள 288 இடங்களில் பா.ஜ.க 105 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வென்றிருக்கின்றன. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

பா.ஜ.க - சிவசேனா
பா.ஜ.க - சிவசேனா

பா.ஜ.க - சிவசேனா கட்சிகள் கூட்டணியாகத் தேர்தலை சந்தித்திருப்பினும் முதலமைச்சர் பதவி தொடர்பாக முடிவுக்கு வரமுடியாததால் இழுபறி நீடிக்கிறது. தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் முதல் இரண்டரை ஆண்டுகள் முதல்வராகவும் அதன்பின்னர் பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒருவர் முதல்வராகவும் இருக்கலாம் என்ற சிவசேனா தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டும் அதை ஏற்க பா.ஜ.க தலைமை மறுத்துவருகிறது.

இந்த நிலையில், பா.ஜ.க அல்லாத கூட்டணிக்கு சிவசேனா தயங்காது என பா.ஜ.க-வுக்கு கடும் நெருக்கடி அளித்துவருகிறது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்றும் காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் எனவும் கூறப்பட்டது. எனினும் சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் உதவுவது நாடு முழுவதும் அந்தக் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என நினைக்கிறது.

சரத் பவார்
சரத் பவார்

இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், ``மக்கள் தங்களை எதிர்க்கட்சியாக இருக்கவே வாக்களித்துள்ளனர். அதன்படியே கட்சி செயல்பட விரும்புகிறது” என்றார். சரத் பவார் ஆட்சியை விரும்பாத பட்சத்தில் சிவசேனா ஆட்சியைப் பிடிப்பதில் சிக்கல் அதிகரிக்கும். இந்த நிலையில் இன்று முக்கியமான சில அரசியல் சந்திப்புகள் நடக்க இருக்கிறது, அதுவும் டெல்லியில்.

ஒருபுறம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசுகிறார். இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் அல்லது தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் இறுதி நிலைப்பாடு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

அமித் ஷா - மோடி
அமித் ஷா - மோடி

மறுபுறம் மகாராஷ்டிரா பா.ஜ.க சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேவேந்திர ஃபட்னாவிஸ் டெல்லியில் அமித் ஷாவை இன்று சந்தித்துப் பேசுகிறார். இது அரசியல் சார்ந்த சந்திப்பு கிடையாது, மக்கள் நலன் சார்ந்த சந்திப்பு என பா.ஜ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் மகாராஷ்டிரா முதல்வர் பதவி தொடர்பாகதான் இந்த சந்திப்பில் பேசப் போகிறார்கள் என்கிறது பா.ஜ.க வட்டாரம்.

பா.ஜ.க ஒருபுறம், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் மறுபுறம் என டெல்லியில் மகாராஷ்டிரா மாநில அரசியல் இழுபறிக்கு முடிவு எழுதப்படலாம் என இருக்கும் நிலையில், மகாராஷ்டிரா ஆளுநரை சந்திக்கிறது சிவசேனா. இன்று மாலை சிவசேனா கட்சியின் முக்கிய நிர்வாகி சஞ்சய் ராவத் கட்சியின் மற்ற சில முக்கிய உறுப்பினர்களுடன் ஆளுநரை சந்திக்க உள்ளதை ஆளுநர் மாளிகை உறுதி செய்துள்ளது.

மகாராஷ்டிரா தேர்தல்: பா.ஜ. - சிவசேனா
மகாராஷ்டிரா தேர்தல்: பா.ஜ. - சிவசேனா

இந்தச் சந்திப்பின்போது மகாராஷ்டிராவில் அதிக இடங்களை கைப்பற்றியுள்ள பா.ஜ.க-வை ஆட்சி அமைக்க அழைக்கலாம் எனவும், அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறும் பட்சத்தில் அடுத்த கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என சிவசேனா கோரிக்கை வைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று நடைபெறும் இந்த மூன்று சந்திப்புகள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.