தினகரனைப் பயன்படுத்தி சசிகலாவுக்கு செக்... எடுபடுமா எடப்பாடியின் கோடு அரசியல்?

`சசிகலா என்கிற கோட்டை சிறிதாக்க, பக்கத்தில் தினகரன் என்கிற கோட்டைப் பெரிதாக வரைகிறார் எடப்பாடி பழனிசாமி’ என்கிறார்கள் அ.தி.மு.க-வின் உள்விவகாரம் அறிந்தவர்கள்.
அரசியலில் ஒரு கணக்கு உண்டு. ஒரு பிரச்னை விஸ்வரூபமெடுத்தால், அதை நீர்த்துப்போகச் செய்வதற்காக, மற்றொரு பிரச்னையைப் பெரிதாக்குவார்கள். ஒரு கோட்டைச் சிறிதாக்க, அருகில் பெரிய கோடு வரையும் நுணுக்கமான அரசியல்தான் இது. இதேபாணியில், சசிகலா பிரச்னையைச் சமாளிக்க, இப்போது தினகரனைக் கையில் எடுத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
பிப்ரவரி 10-ம் தேதி திருப்பத்தூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய பழனிசாமி, ``சிலர் திட்டமிட்டே சதிசெய்து அ.தி.மு.க-வைக் கைப்பற்ற முயல்கிறார்கள். 2017-ல் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சிறப்பான ஆட்சியைக் கொடுத்துக்கொண்டிருந்தபோது, எங்களிடமிருந்த எம்.எல்.ஏ-க்களை பிரிக்கப் பார்த்தார்கள். 18 பேரைப் பிரித்து, ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, கட்சியைக் கைப்பற்றப் பார்த்தார் டி.டி.வி.தினகரன். அதை முறியடித்து அம்மாவின் ஆட்சியை நிலைநாட்டினோம். தினகரன் பத்தாண்டுக் காலம் கட்சியிலேயே கிடையாது. அம்மாவால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர். ஏதோ ஒரு சந்தர்ப்பச் சூழலில் கட்சிக்குள் நுழைந்துகொண்டார். இப்போது சதிவலை பின்னிக்கொண்டிருக்கிறார்.
அவரை ஒருபோதும் அ.தி.மு.க ஏற்றுக்கொள்ளாது. இது தொண்டர்கள் ஆளுகின்ற கட்சி. ஒரு குடும்பம் ஆள்வதற்கு ஒருபோதும் இந்தக் கட்சி தலை வணங்காது. இனி அ.தி.மு.க தொண்டன்தான் இந்தக் கட்சிக்கு முதலமைச்சராக வர முடியும். தினகரன் எத்தனை அவதாரம் எடுத்தாலும், அ.தி.மு.க-வை இனி ஒருபோதும் உடைக்க முடியாது. உங்கள் கனவு பலிக்காது” என்று வீராவேசமாகப் பேசினார். இதே கருத்தை வேலூரில் நடைபெற்ற கூட்டத்திலும் பேசிய பழனிசாமி, ``தினகரனை நம்பிச் சென்ற 18 பேரும் நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்கள். அவரை நம்பினால் நடுத்தெருதான்” என்று சாபமிட்டார். அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவதற்கு தினகரன் இன்று எதுவும் புதிதாக முயலவில்லை. பல்வேறு காலக்கட்டங்களில் வெளிப்படையாகவே, `அ.ம.மு.க-வை ஆரம்பித்ததே அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதற்காகத்தான்’ என்று தொடர்ச்சியாக கட்சியைக் கைப்பற்றும் தன் நோக்கத்தைக் கூறிவருகிறார் தினகரன்.

தவிர, 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது தினகரனை ஒரு பொருட்டாகக்கூட பழனிசாமி மதிக்கவில்லை. பிரசாரத்தின்போது தி.மு.க தலைவர் ஸ்டாலினை மட்டுமே தன்னுடைய எதிரியாக நிலைநிறுத்திக்கொண்டார். தினகரனைப் பற்றி எந்த இடத்திலும் பேசியதில்லை. உள்ளாட்சித் தேர்தலின்போதும் இதே கதைதான். ஆக, தினகரன் இப்போதுதான் ஏதோ செய்து அ.தி.மு.க-வை உடைக்க முயல்வதுபோல முதல்வர் பாய்வதற்கு காரணம், கோடு அரசியல். `சசிகலா என்கிற கோட்டை சிறிதாக்க, பக்கத்தில் தினகரன் என்கிற கோட்டை பெரிதாக வரைகிறார் எடப்பாடி பழனிசாமி’ என்கிறார்கள் அ.தி.மு.க-வின் உள்விவகாரம் அறிந்தவர்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க சீனியர் நிர்வாகிகள் சிலர், ``அ.தி.மு.க-வில் சசிகலா ஒரு தவிர்க்க முடியாத பிம்பம். கட்சியின் போராட்டங்கள், பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு அவர் வெளிப்படையாகத் தலைகாட்டவில்லை என்றாலும், அவர்தான் கட்சியை இயக்கினார் என்பது எல்லோருக்கும் தெரியும். 2016 சட்டமன்றத் தேர்தலில் சீட்டுப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களைக் கையாண்டதும் அவர்தான். தவிர, பிப்ரவரி 2017-ல் பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற பிறகு, ஆட்சியைத் தக்கவைத்ததும் அவர்தான். இன்று சூழல் எவ்வளவோ மாறியிருக்கிறது.
சசிகலாவின் காலில் விழுந்துதான் முதல்வர் நாற்காலியை பழனிசாமி பெற்றார் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதனால், சசிகலா என்கிற பிம்பத்தைத் தன் கையால் பழனிசாமி உடைப்பது கஷ்டம். அவருக்கு ஓர் உளி தேவைப்படுகிறது. அதுதான் தினகரன். தினகரனை நேரடியாகத் தாக்குவதன் மூலமாக மூன்று லாபங்கள் தனக்குக் கிடைக்குமென பழனிசாமி கணக்குபோடுகிறார்.

ஒன்று, தினகரனைத் தாக்கினால் சசிகலாவின் பிம்பம் சிறிதாகும் என நம்புகிறார் பழனிசாமி. பழனிசாமியின் விமர்சனங்களுக்கு தினகரன் பதிலடி கொடுப்பதும், அதற்கு அமைச்சர்கள் எதிர்வினையாற்றுவதுமாக லாவணி அரசியல் செல்லும் பட்சத்தில், சசிகலா என்கிற பிம்பம் மங்கத் தொடங்கிவிடும். தினகரனுக்கு என்று ஒரு கட்சி இருக்கிறது. அ.ம.மு.க-வின் பொதுச் செயலாளராக அவர் இருக்கிறார். சசிகலாவின் நிலை அப்படியல்ல. ஒருவேளை நீதிமன்றம் அனுமதித்து சசிகலா தேர்தலில் போட்டியிட்டாலும், சுயேச்சையாகத்தான் களமிறங்க வேண்டியிருக்கும். இரட்டை இலைச் சின்னம் அவருக்குக் கிடையாது. அ.ம.மு.க வேட்பாளராகக் களமிறங்கினால், அதன் பிறகு அ.தி.மு.க-வுக்கு சசிகலா உரிமை கோர முடியாது. இந்தச் சிக்கல்கள் சசிகலாவுக்கு இருப்பதை உணர்ந்ததால்தான், தினகரனை பெரிய ஆளாக்கி, சசிகலாவை மட்டுப்படுத்தப் பார்க்கிறார் பழனிசாமி. இதன் மூலமாக, மன்னார்குடி உறவுகளுக்குள்ளும் குழப்பங்கள் ஏற்படும். இதுவும் பழனிசாமிக்கு லாபம்தான்.
இரண்டாவது, அ.தி.மு.க-வைப் பிடிக்காத வாக்காளர்கள் என்று ஒரு வகையினர் இருக்கிறார்கள். இவர்களுக்கு தி.மு.க-வைப் பிடிக்காமல் இருந்தாலும் சரி, அ.தி.மு.க-வை எதிர்க்க வேண்டுமே என்பதற்காக, பெரும்பகுதி தி.மு.க-வுக்குத்தான் வாக்களிப்பார்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக தினகரனை வளர்த்துவிடுகிறார் பழனிசாமி. இதன் மூலமாக, தி.மு.க-வுக்குச் செல்லும் அ.தி.மு.க எதிர்ப்பு வாக்குகள் சிதறும் என்பது அவர் மனக்கணக்கு. இதில், அ.தி.மு.க-வுக்கு வரும் தி.மு.க எதிர்ப்பு வாக்குகள் சிதறி தினகரனுக்கு மடைமாறும் அபாயமும் இருக்கிறது. இதைச் சரிக்கட்டுவதற்காகத்தான், அவ்வப்போது `தினகரனும் தி.மு.க-வும் மறைமுகக் கூட்டணி போட்டிருக்கிறார்கள்’ என்று வெடியைக் கிள்ளி எறிகிறார் பழனிசாமி.

மூன்றாவது, சாதிக் கணக்கு. சமீபத்தில் மாநில உளவுத்துறை முதல்வருக்கு அளித்திருந்த ரிப்போர்ட்டில், `அ.ம.மு.க பிரிந்து நிற்பதால், தென்மாவட்டங்களிலும் டெல்டாவிலும் அ.தி.மு.க-வுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக முக்குலத்தோர் சமுதாயத்தின் வாக்குகள் கணிசமாக விழாது’ என்று கூறியிருந்தனர். இதனால், தினகரனைத் தாக்குவதன் மூலமாக அ.ம.மு.க பக்கம் முக்குலத்தோர் வாக்குகள் அணி திரள வியூகம் வகுக்கிறார் பழனிசாமி. இதில் பல லாபங்கள் இருக்கின்றன.
தி.மு.க-வுக்குச் செல்லும் முக்குலத்தோர் வாக்குகள் சிதறும். டெல்டாவிலும் தென் மாவட்டங்களிலும் இருக்கும் முக்குலத்தோர் வாக்குகள் கிடைக்காவிட்டாலும், முத்தரையர், நாடார், பிள்ளைமார், தேவேந்திர குல வேளாளர் போன்ற இதர சமூகங்கள் தனக்கு ஆதரவாக வரும் என்பது பழனிசாமியின் வியூகம். இதன் ஒரு பகுதியாகத்தான் மதுரையில் நடைபெற்ற முத்தரையர் மாநாட்டில் அவர் கலந்துகொண்டார். செங்குந்த முதலியார் சமூகத்தைச் சேர்ந்த கிருபானந்த வாரியாரின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தார். தினகரனைத் தாக்குவது பலவகையிலும் பழனிசாமிக்கு லாபம்தான்” என்றனர்.

ஒரு வருடத்துக்கு முன்பு வரை தினகரனின் பெயரை உச்சரிப்பதற்குக்கூட சங்கோஜப்பட்ட எடப்பாடி பழனிசாமி, இன்று மேடைக்கு மேடை தினகரனைத் தாக்க ஆரம்பித்திருக்கிறார். தினகரனைத் தாக்குவதன் மூலமாக ஒரு கோடு அரசியலை வரைய ஆரம்பித்திருக்கிறார் பழனிசாமி. அது அவருக்குக் கைகொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.