Published:Updated:

ரஜினி பங்கேற்ற துக்ளக் விழாவில் என்னவெல்லாம் நடந்தது? - வெளிவராத விஷயங்களின் நேரடி ரிப்போர்ட்!

துக்ளக் விழா ஹைலைட்ஸ்
துக்ளக் விழா ஹைலைட்ஸ்

வெங்கய்ய நாயுடு நாற்காலி உயர்ந்தது ஏன்? இரட்டை மைக் போடியம், சோ-வின் டைமிங் பேச்சு, திடீரென முளைத்த டீபாய் என துக்ளக் விழாவில் நடந்த சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் பற்றிய லைவ் கவரேஜ் இது!

`` `சோ'வின் பத்திரிகை வெளிவந்துவிட்டதாமே!''

``அப்படியா... இனிமேல் நமக்கு நல்ல விருந்துதான்!''

- துக்ளக் பத்திரிகையின் முதல் இதழின் அட்டைப் படத்தில் இரண்டு கழுதைகள் பேசிக்கொள்ளும் டயலாக் இது. 1970 ஜனவரியில் வெளியான அந்த முதல் இதழுக்குப் பிறகு பொன்விழா கொண்டாடும் இப்போதைய இதழிலும் அதே கழுதைகள்தான் ரேப்பரை ஆக்கிரமித்திருக்கின்றன.

துக்ளக் முதல் இதழ்...
துக்ளக் முதல் இதழ்...

``ஐம்பது வருஷம் கழுதையா உழைச்சதைப் பாராட்டி, நம்மை அட்டையில் போட்டிருக்காங்க!''

``ரொம்ப பீத்திக்காத! நாம மட்டுமா உழைச்சோம்? துக்ளக் வளர்ச்சிக்கு எத்தனையோ அரசியல்வாதிகள் உழைச்சாங்க. அவங்க அத்தனை பேரையும் போட முடியாதேன்னு ஒரு அடையாளத்துக்கு நம்மை மட்டும் போட்டிருக்காங்க!'' என்று அந்தக் கழுதைகள் பேசிக்கொள்கின்றன.

பொன் விழா ஆண்டு துக்ளக் ரேப்பர்
பொன் விழா ஆண்டு துக்ளக் ரேப்பர்

``கழுதைகள் எண்ணிக்கை நாட்டில் குறைந்துகொண்டே வருவது வருத்தம் அளிக்கிறது'' என துக்ளக் விழாவில் ரொம்பவே வருத்தப்பட்டார், அதன் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி.

துக்ளக் பொன்விழா கொண்டாடும் இந்த நேரத்தில் சோ இல்லை. ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 14-ம் தேதி துக்ளக்கின் ஆண்டு விழா நடைபெறுவது வாடிக்கை. `சோ பேசுகிறார்' என்கிற பேனரைப் பார்த்துவிட்டு, ஆண்டு விழாவில் வாசகர்கள் கூடுவார்கள். விழாவைக் காண்பதற்காக வாசகர்கள் பலர் நேரத்துக்கு முன்பே அரங்கத்துக்கு வெளியே வரிசையில் காத்திருந்து, அரங்கத்திற்குள் நுழைந்து விழாவைக் கண்டு ரசிப்பார்கள். இது ஒவ்வோர் ஆண்டும் நிகழும்.

இந்த ஆண்டு பொன் விழா ஆண்டு என்பதால், எதிர்பார்ப்பு இரட்டிப்பாக இருந்தது. விழா நடைபெற்ற கலைவாணர் அரங்கில் நீண்ட வரிசையில் காத்திருந்து அரங்கத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள் வாசகர்கள்.

வரிசையில் வாசகர்கள்
வரிசையில் வாசகர்கள்

`ரஜினியும் பேசுகிறார்' என்பதால் அவருடைய ரசிகர்களும் வந்திருந்தார்கள். தண்ணீர் பாட்டில்களை அரங்கத்திற்குள் கொண்டுசெல்ல போலீஸார் தடை போட்டதால், நுழைவு வாயில் அருகே வாசகர்கள் கொண்டு வந்த தண்ணீர் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

கறுப்பு மீது மத்திய அரசுக்கு சமீப காலமாகக் கடுப்பு. துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு பங்கேற்கும் துக்ளக் விழாவிற்கு வருகிறவர்கள், `கறுப்பு உடை அணிந்து வரக்கூடாது. அடையாள அட்டையுடன் வர வேண்டும்' என விளம்பரம் செய்திருந்தார்கள்.

உள்ளே அனுமதிக்கப்படாத தண்ணீர் பாட்டில்கள்...
உள்ளே அனுமதிக்கப்படாத தண்ணீர் பாட்டில்கள்...

வரிசையில் உள்ளே நுழைந்தவர்களிடம், அரசின் அடையாள அட்டைகளில் ஒன்றைக் காட்டினால், அந்த அட்டையையும் விழாவுக்கு வந்தவர்களையும் புகைப்படம் எடுத்தார்கள். இதற்காக ஒரு டீம் ஒன்று இயங்கிக்கொண்டிருந்தது.

அரங்கம் நிரம்பி, வெளியே வராண்டாவிலும் வாசகர்கள் பெரிய திரையில் துக்ளக் நிகழ்ச்சியைப் பார்த்தார்கள். வந்தவர்களில், இந்துத்துவா மற்றும் பி.ஜே.பி ஆதரவாளர்கள்தான் அதிகம்.

கறுப்பு உடைக்கு  தடா
கறுப்பு உடைக்கு தடா

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், பி.ஜே.பி-யைச் சேர்ந்த இல.கணேசன், ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்திருந்தனர். அ.தி.மு.க-விலிருந்து வந்த ஒரே ஒருவர், மைத்ரேயன்தான். ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் துக்ளக் ஆண்டு விழாவுக்கு மைத்ரேயன் வருவார்.

பத்மா சுப்பிரமணியம், நல்லி குப்புசாமி போன்ற கட்சி சார்பில்லாதவர்களும் ஆஜர் ஆனார்கள். ஹெச்.ராஜா அரங்கத்திற்குள் நுழைந்தபோது மட்டும் கைத்தட்டல்கள் எழுந்தன. பொன் ராதாகிருஷ்ணனுக்குக்கூட அப்படியான வரவேற்பு இல்லை. பொன். ராதாகிருஷ்ணன் வந்தபோது, வாசன் எழுந்து நின்று அவரிடம் கை குலுக்கினார். அருகில் அமர்ந்திருந்த ஹெச்.ராஜா எழுந்திருக்கவில்லை.

பொன்னார், வாசன், இல கணேசன், ஹெச்.ராஜா...
பொன்னார், வாசன், இல கணேசன், ஹெச்.ராஜா...

விழா, மாலை 6 மணிக்குதான் தொடங்கியது. ஆனால், `5 மணிக்கே அரங்கத்துக்குள் வந்துவிட வேண்டும்' எனச் சொல்லியிருந்தார்கள். அதனால் அரங்கத்தில் பகவத்கீதையின் சம்ஸ்கிருத உரையும் அதற்கு சோவின் தெளிவுரையும் ஒலிபரப்பினார்கள்.

விழா மேடை
விழா மேடை

மேடையின் பின்புறம் பெரிய டி.வி திரை. அதில் சோவின் படம். அதன் இரண்டு பக்கமும் இருந்த சின்னத் திரையில், ஒன்றில் சோவும் இன்னொன்றில் குருமூர்த்தியும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

விழா மேடையின் முன் வரிசையில் நான்கு சேர்கள் போடப்பட்டிருந்தன. அதில், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, ரஜினிகாந்த், குருமூர்த்தி, துக்ளக் அசோசியேட் எடிட்டர் மதலை, பதிப்பாளர் சுவாமிநாதன் ஆகியோர் அமர்ந்திருந்தார்கள். இந்த நாற்காலிகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தன.

நடுவில் இருக்கும் நாற்காலி மட்டும் உயரமாக
நடுவில் இருக்கும் நாற்காலி மட்டும் உயரமாக

எந்த வித்தியாசமும் காட்டப்படவில்லை. ஆனால், வெங்கய்ய நாயுடு உட்கார்ந்திருந்த சேர் மட்டும் கொஞ்சம் உயரமாக இருந்தது.

`துணை ஜனாதிபதிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்' என அவரது அலுவலகத்திலிருந்து சொல்லப்பட்டதால், ஒரே மாதிரியாக இருந்த நாற்காலிகளில் ஒன்றின் உயரத்தை அதிகரிக்க, `பிளாஸ்டிக் பாட்டம்' பொருத்தியிருந்தார்கள். இதனால், வெங்கய்ய நாயுடு அமர்ந்திருந்த சேர் மட்டும் சற்று உயரமாக இருந்தது.

பிளாஸ்டிக் பாட்டம் பொருத்தப்பட்ட வெங்கையா நாயுடு நாற்காலி
பிளாஸ்டிக் பாட்டம் பொருத்தப்பட்ட வெங்கையா நாயுடு நாற்காலி

வெங்கய்ய நாயுடு பேசுவதற்கு ஒன்றும், மற்றவர்கள் பேசுவதற்கும் ஒன்றும் என மேடையில் இரட்டை மைக் போடியம் இருந்தன. வெங்கய்ய நாயுடு பேசும் மைக் போடியத்தில், கை வைக்கும் பகுதி சாய்வு தளமாக இருந்ததால், அங்கே தண்ணீர் பாட்டிலை வைக்க முடியவில்லை.

அதனால், அருகிலேயே சில்க் துணியால் சுற்றப்பட்ட நாற்காலி ஒன்றை அவசரமாக ரெடி செய்து, கொண்டுவந்து வைத்தார்கள். அதன்மீது தண்ணீர் பாட்டில் ஒன்று வைக்கப்பட்டது.

தற்காலிக டீபாய் ரெடி செய்யும் போலீஸ்
தற்காலிக டீபாய் ரெடி செய்யும் போலீஸ்

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு, கடந்த கால துக்ளக் ஆண்டு விழாக்களில் சோ பேசிய பேச்சுகளிலிருந்து கொஞ்ச விஷயங்களைத் தொகுத்து வீடியோவாக வெளியிட்டார்கள். சோ முன்பு பேசிய சில விஷயங்கள் இன்றைய அரசியலைப் பிரதிபலிப்பதாக இருந்தது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் இந்தியா முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் சூழலில், ``மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இருக்க வேண்டும். ஆனால், அரசியல் ஈடுபாடு இருக்கக் கூடாது. அதற்காக நேரத்தைச் செலவிடக்கூடாது. அரசியலில் நுழைந்து சம்பாதிக்க முடியும். அரசியல் ஒரு வியாபாரமாக இருப்பதால் மாணவர்களும் அதில் ஈடுபாடு காட்டுகிறார்களோ என்னவோ. இதைத் தவிர்க்காவிட்டால், மாணவர்கள் எதிர்காலத்தில் கஷ்டப்படுவார்கள்'' என்று என்றைக்கோ சோ பேசிய பேச்சு திரையில் ஓடிக்கொண்டிருந்தது.

தற்காலிக டீபாய் ரெடி செய்யும் போலீஸ்
தற்காலிக டீபாய் ரெடி செய்யும் போலீஸ்

மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு மன்மோகன் சிங் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது, ``ஸ்விஸ் வங்கிகளில் இருக்கும் கறுப்புப் பணம் இந்தியாவுக்கு வருமா?" என எல்லோரும் கேட்கிறார்கள். ``இந்த ஆட்சி (மன்மோகன் சிங்) நீடித்துக்கொண்டிருக்கும் வரையில் வராது. இந்த ஆட்சி மாறினால் வரும்'' என்கிறார் திரையில் சோ. மோடி ஆட்சிக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆகப் போகிறது.

ஸ்விஸ் வங்கியிலிருந்து கறுப்புப் பணம் வந்தபாடில்லை. கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வரத்தான் பணமதிப்பிழப்பை மோடி கொண்டுவந்தார். அதன் பாதிப்பு இன்னும் ஓயவில்லை. வேலூா் சலவன்பேட்டையைச் சேர்ந்த மூதாட்டி புவனேஷ்வரி, பண மதிப்பிழப்பு தெரியாமல் சேர்த்துவைத்திருந்த 12,000 மதிப்புள்ள செல்லாத பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்த விஷயம் கடந்த வாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

குருமூர்த்தி
குருமூர்த்தி

``கறுப்புப் பண விஷயம் பற்றி என்னைவிட ஆடிட்டர் குருமூர்த்திக்கு நன்றாகவே தெரியும். யார் யார் எங்கெல்லாம் பணம் வைத்திருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். அவர் வச்சிருக்காருனு நான் சொல்லவில்லை'' என்று முன்பு சோ பேசிய பேச்சு திரையில் ஓடிக்கொண்டிருந்தது.

குருமூர்த்தியிடமிருந்து இந்தத் தகவலைப் பெற்று, மத்திய அரசு ஏன் உடனே நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரியவில்லை. ``குருமூர்த்தியின் பொருளாதார அறிவு பலருக்கு நாட்டில் இல்லை. அறிவாளியினு நான் யாரையும் ஒத்துக்கொள்வதில்லை'' என்றும் சொல்கிறார் சோ. அவர் உயிருடன் இருந்திருந்தால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை என்ன சொல்லியிருப்பார்?

விழாவில் பேசும் ரஜினிகாந்த்
விழாவில் பேசும் ரஜினிகாந்த்

சோவின் பழைய பேச்சுகளில், ரஜினி அரசியலுக்கு வருவது பற்றிய பேச்சு முத்தாய்பாக இருந்தது. ``ராஜாவாக இருக்கிறவன் ஆலோசனை கேட்காமல் இருப்பது தப்பு. அதற்காக நிறைய பேர்கிட்ட ஆலோசனை கேட்பதும் தவறு. அந்த ஆலோசனையை வெளியில் சொல்வதும் தவறு. `நல்ல ஆலோசனையைக் கேட்டு சரியான முடிவுக்கு வருகிறவன் நல்ல அரசன்' என்கிறது மகாபாரதம். ரஜினி யார்கிட்ட ஆலோசனை கேட்கிறார் என்பது எனக்குத் தெரியாது. நல்ல ஆலோசனை கேட்டு, அவர் அரசியலுக்கு வருவது நல்லது. எடுத்த முடிவில் அவர் உறுதியாக நிற்க முடியும். ரஜினிக்கு மக்களிடம் ஈர்ப்பு சக்தி இருக்கிறது. ஜனங்க அவரை நம்புறாங்க. நேர்மை அவரிடம் பரிபூரணமாக இருக்கிறது. நல்ல நிர்வாகியாக இருக்கிறார்'' என ரஜினியைப் பற்றி சிலாகித்துப் பேசினார் சோ.

திரையில் சோ பேசி முடிக்கும் போது, சரியாக ரஜினி அரங்கத்திற்குள் நுழைந்தார். அவரை குருமூர்த்தி வரவேற்று, முன்வரிசையில் அமரவைத்தார். அதன்பின், விழாவில் இரண்டாவது அமர்வு தொடங்கியது. துக்ளக் பணியாளர்களையும் கட்டுரையாளர்களையும் அறிமுகம்செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்களை அறிமுகம்செய்ய வெங்கய்ய நாயுடு பேசும் மைக் போடியம் முன்பு குருமூர்த்தி சென்றபோது, அவரை எதிர்ப்பக்கம் இருந்த இன்னொரு போடியத்துக்கு பேச அனுப்பினார்கள் பாதுகாப்புப் படையினர்.

கேள்விகளுக்கு பதில் சொல்லும் குருமூர்த்தி
கேள்விகளுக்கு பதில் சொல்லும் குருமூர்த்தி

மேடைக்குச் செல்ல இரண்டு பக்கத்திலும் படிக்கட்டுகள் இருந்தன. வெங்கய்ய நாயுடு பயன்படுத்தப்போகும் இடது பக்கம் இருந்த படிக்கட்டுகள் வழியாக யாரையும் மேடையில் ஏற பாதுகாப்பு போலீஸார் அனுமதிக்கவில்லை. பத்திரிகையாளர் மாலன் பெயர் அறிவிக்கப்பட்டதும் அந்தப் படிக்கட்டு வழியாக மேடையேற முயன்றார். அவரை அந்த வழியாக அனுமதிக்காமல் வலது பக்க படிக்கட்டு வழியாக போகச்சொன்னது போலீஸ்.

``லேட்டஸ்ட்டாக துக்ளக்கில் எழுத ஆரம்பித்திருக்கும் கட்டுரையாளர் மாலன்'' என்று குருமூர்த்தி அறிமுகம் செய்தபோது, கைதட்டல். உடனே, ``பார்த்தீங்களா அவருக்கு எவ்வளவு வரவேற்பு'' என்றார் குருமூர்த்தி.

லதா ரஜினிகாந்த்
லதா ரஜினிகாந்த்

அடுத்து, வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார் குருமூர்த்தி. ``கடந்த காலங்களில் தமிழகத்தில் நல்ல கூட்டணி அமைய சோ பாடுபட்டார். அதுபோல வருகிற சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் கூட்டணி அமைய உதவுவீர்களா?'' என்று ஒருவர் கேட்க, ``கூட்டணி அமைப்பதை சோ வெளிப்படையாகச் செய்வார். அப்படி நான் செய்ய மாட்டேன். அது பாதிப்பை ஏற்படுத்தும்'' என்றார் குருமூர்த்தி.

``ஜே.என்.யூ-வில் நடக்கும் விஷயங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' என்ற கேள்விக்கு, ``ஜே.என்.யூ-வின் டி.என்.ஏ-வே நாட்டுக்கு விரோதமானதுதான். இந்திரா காந்தி ஆட்சியிலேயே போலீஸை உள்ளே அனுப்பினார்கள். 43 நாள்கள் ஜே.என்.யூ-வை மூடினார்கள். ஜே.என்.யூ திருத்தப்பட வேண்டும். இல்லையென்றால் மூட வேண்டும்'' என்றார் குருமூர்த்தி.

பாபர் மசூதி தொடர்பான கேள்விக்கு, ``அந்த இடத்தை இந்துக்களுக்கு முஸ்லிம்கள் விட்டுத் தரத் தயாராக இருந்தார்கள். இடதுசாரிகள் முஸ்லிம்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி, அதை விட்டுத் தரக்கூடாது எனச் சொல்லி பிரச்னையைப் பெரிதாக்கினார்கள்'' என்று பதில் சொன்னார்.

விழாவில்...
விழாவில்...

``நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த உடனே, எடப்பாடி ஆட்சி கவிழும் எனச் சொன்னார் ஸ்டாலின். கல் பிள்ளையார் போல எடப்பாடி உட்கார்ந்திருக்கிறார். அவரைக் கீழே இறக்க முடியவில்லை'' என்று சொல்லி கேள்வி-பதில் நேரத்தை முடித்த குருமூர்த்தி, மேடையைவிட்டு கீழே இறங்கி ரஜினி அருகில் வந்து அமர்ந்துகொண்டார்.

அதன்பின், பிரதமர் மோடியின் உரை திரையில் ஒளிபரப்பப்பட்டது.

``சோ இன்று இல்லாவிட்டாலும், கடந்த 50 ஆண்டுகளாக அவர் ஆற்றிய பணிகள் பெருமைக்குரியவை. முதல் பக்கத்தில் வரும் கேலிச்சித்திரம், மக்களுக்கு எளிய முறையில் பல விஷயங்களைப் புரியச் செய்துவிடும். இந்தியாவில் முடியாது என்று நினைத்ததெல்லாம் தற்போது நிறைவேறிக் கொண்டிருக்கின்றன'' என்றார் மோடி.

மோடியின் உரை
மோடியின் உரை

மோடி பேசி முடித்தபோது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குருமூர்த்தியிடம் வந்து, ``துணை ஜனாதிபதி சில நிமிடங்களில் வந்துவிடுவார்'' என்று சொல்ல, அவரை வரவேற்க போர்ட்டிகோவுக்கு குருமூர்த்தி போனார். மறக்காமல், அருகில் அமர்ந்திருந்த ரஜினியையும் கையோடு அழைத்துப்போனார்.

வழக்கமாக விழாவை நடத்துகிறவர்கள்தான் விஐபி-களை வரவேற்க போர்ட்டிகோ வரை செல்வார்கள். விழாவுக்கு வந்த விருந்தினரை எல்லாம் அழைத்துக்கொண்டு போவது கிடையாது. ரஜினிக்கு மட்டும் அந்த `மரியாதை' கிடைத்தது.

வெங்கைய்ய நாயுடு நாற்காலியின் ஸ்பெஷல் பெட்..
வெங்கைய்ய நாயுடு நாற்காலியின் ஸ்பெஷல் பெட்..

வெங்கய்ய நாயுடு மேடையேறுவதற்கு முன்பு, முன்வரிசையில் இருந்த தலைவர்களுக்கும் பிரமுகர்களுக்கும் கைகுலுக்கி வணக்கம் சொன்னார். அந்த நேரத்தில், அவருடைய பாதுகாப்பு அதிகாரி, வெங்கய்ய நாயுடு அமரும் நாற்காலியில் அவருடைய முதுகு வலிக்காமல் இருப்பதற்கான குஷனை அதில் பொருத்தினார்.

வெங்கய்ய நாயுடுவுக்கு நடராஜர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார்கள். ரஜினிக்கு ராகவேந்திரர் படத்தைக் கொடுத்தார்கள். ``இந்த இரண்டு நினைவுப் பரிசுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அது 17 கிலோ. இது 7 கிலோ'' என விளக்கம் கொடுத்தார் குருமூர்த்தி.

வெங்கைய்ய நாயுடுவுக்கு நினைவு பரிசு
வெங்கைய்ய நாயுடுவுக்கு நினைவு பரிசு
ரஜினிக்கு நினைவு பரிசு
ரஜினிக்கு நினைவு பரிசு

குருமூர்த்தி பேசி முடித்த பிறகு மைக் பிடித்தார் ரஜினி. ``சோவை ஆளாக்கிய இரண்டு எதிரிகளில் ஒருவர் பக்தவச்சலம். மற்றொருவர் கருணாநிதி. முரசொலியைக் கையில் வைத்திருந்தால் அவர் தி.மு.க-காரர்; துக்ளக்கை கையில் வைத்திருந்தால் அவர் அறிவாளி.

பத்திரிகைகள் பொய்யை உண்மையாக்காதீர்கள். நடுநிலை பத்திரிகைகளும் பத்திரிகையாளர்களும் மனசாட்சிப்படி மக்களுக்கு செய்திகளைச் சொல்லுங்கள்'' என்று சொல்லி பேச்சை முடித்தார் ரஜினி.

ரஜினி
ரஜினி
`தனக்கு உதவிய தமிழகத்துக்கு நண்பர் ரஜினி உதவ வேண்டும்!' - கமல்ஹாசன்

இறுதியாகப் பேசிய வெங்கய்ய நாயுடு, ``இதழியலுக்கு சோ ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. சோவின் இதழியல் நடை அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். நான் அரசியலை விட்டு வெளியில் வந்துவிட்டேன். தற்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைந்துகொண்டிருக்கிறார்'' என்றார்.

சிறப்பு மலர் வெளியீடு
சிறப்பு மலர் வெளியீடு

மோடி பெயரைச் சொல்லும்போதும், கருணாநிதியையும் தி.மு.க -வையும் திட்டும் போதும் கூட்டம் ஆர்ப்பரித்தது. இடையில், `பாரத் மாதாகி ஜெ' கோஷமும் அவ்வப்போது ஒலித்தது. அங்கே வந்தவர்கள் யார் என்பதை இந்த இரண்டு விஷயங்களே உணர்த்தும்..!

அடுத்த கட்டுரைக்கு