Published:Updated:

`நேரம் வந்துவிட்டது!’ - பொது சிவில் சட்டம் குறித்த கேள்விக்கு ராஜ்நாத் சிங் பதில்

`நாட்டு மக்கள் அனைவரும் அமைதிகாக்க வேண்டும். இதில் வெற்றி தோல்வி என்று பார்க்கக்கூடாது' என அயோத்தி தீர்ப்பு குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

நாடே எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த அயோத்தி விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம். இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள அயோத்திக்குள்ளேயே 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதேபோல், 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு நீதிபதிகள் கடும் கண்டனத்தையும் பதிவு செய்தனர். பாபர் மசூதி இருந்த நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டது செல்லாது எனவும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அயோத்தி தீர்ப்பு தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், ``வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அனைத்து மதங்களும் ஒன்றே என்பதை இது வலிமைப்படுத்துகிறது. இதன்மூலம், மதங்களுக்கு இடையேயான உறவு வலிமைப்படும். நாட்டு மக்கள் அனைவரும் அமைதிகாக்க வேண்டும். இதில், வெற்றி தோல்வி என்று பார்க்கக்கூடாது” என்றார்.

அப்போது, பொது சிவில் சட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு,`நேரம் வந்துவிட்டது’ என்ற ஒற்றை வரியோடு தனது பதிலை அவர் முடித்துக்கொண்டார். பொது சிவில் சட்டம் கொண்டுவருவோம் என பா.ஜ.க தேர்தலின்போதே வாக்குறுதிகொடுத்தது. இந்த முறை பா.ஜ.க பெரும்பான்மையுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. முத்தலாக் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் என அடுத்தடுத்து மசோதாக்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

`அயோத்தி தீர்ப்பு; சோம்நாத் கோயில்!' - அறக்கட்டளை பணிகளைத் தொடங்கும் மத்திய அரசு

பொது சிவில் சட்டம்

இந்தியாவுக்கான அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது, கிரிமினல் சட்டங்கள் மற்றும் சிவில் சட்டங்கள், அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாக வகுக்கப்பட்டன. சில தனிச்சட்டங்கள் மட்டும் மதங்களுடன் தொடர்புடையதாக வகுக்கப்பட்டன. குற்றவியல் மற்றும் தண்டனைச் சட்டம் அனைவருக்கும் பொதுவாக இருந்தாலும் திருமணம், மண முறிவு, தத்தெடுத்தல், சொத்துரிமை போன்றவற்றில் ஒவ்வொரு சமூகத்துக்கும் தனித் தனி சட்டம் உருவானது. அதன் அடிப்படையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்களுக்கு எனத் தனிச்சட்டங்கள் உள்ளன.

திருமணம்
திருமணம்

பொது சிவில் சட்டம், சிறுபான்மை மதத்தினர் உட்பட அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சட்டமாக அது அமையும். ஆனால், இதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. `பொது சிவில் சட்டம் கொண்டுவருவது, தேன்கூட்டில் கை வைப்பது போன்றது. இது, நாட்டுக்கே பேராபத்தாக அமையும்’ என்கின்றனர் இந்த சட்டத்துக்கு எதிரானவர்கள். ``ஒரு நாட்டில், ஒருவர் இரண்டு திருமணம் செய்துகொண்டால் குற்றம்; இன்னொருவர் செய்துகொண்டால் குற்றமில்லை என்கிற முரண்பாட்டை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்’’ என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள் இந்த சட்டத்துக்கு ஆதரவானவர்கள்.