Published:Updated:

`இந்தியா கேட்' டிராக்டர் எரிப்பு டு வேளாண் சட்டங்கள் ரத்து! - `டெல்லி சலோ' போராட்டதின் ரீவைண்ட்

இந்தியா கேட் அருகே தீ வைக்கப்பட்ட டிராக்டர் முதல் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது வரை... டெல்லி விவசாயிகள் போராட்டம் கடந்துவந்த பாதை!

விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் விளைவாக, மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த நிலையில், டெல்லியில் விவசாயிகள் சுமார் ஓராண்டு நடத்திய போராட்டம் பற்றிய டைம்லைனை இந்தக் கட்டுரையில் காணலாம்!

ஜூலை-ஆகஸ்ட், 2020

புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தக் கூடாது என பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.

செப்டம்பர் 17, 2020

பிரதமர் மோடி அமைச்சரவையில், உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சராகப் பணியாற்றிய ஹர்சிம்ரத் கௌர் (பா.ஜ.க கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்தவர்) வேளாண் சட்டங்களை எதிர்த்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜ.க கூட்டணியிலிருந்து அந்தக் கட்சி விலகிக்கொண்டது.

செப். 15-27, 2020

செப்டம்பர் 15, 18-ம் தேதிகளில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள், செப்டம்பர் 20, 22-ம் தேதிகளில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. செப்டம்பர் 27-ம் தேதி இந்தச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

செப். 24, 2020

பஞ்சாப் விவசாயிகள் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மாதத்துக்கு மேலாக, பஞ்சாப் மாநிலத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

செப். 25, 2020

விவசாயிகளின் நாடுதழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கான (பாரத் பந்த்) அழைப்பை ஏற்று, பஞ்சாப், ஹரியானா, கர்நாடகா, உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டங்கள் நடைபெற்றன. தமிழகத்தில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.

இந்தியா கேட் அருகே நடந்த டிராக்டர் எரிப்பு
இந்தியா கேட் அருகே நடந்த டிராக்டர் எரிப்பு
Twitter
`நாடாளுமன்றத்தில் ரத்தாகும் வரை போராட்டம் தொடரும்!' - வேளாண் சட்டங்கள் ரத்து குறித்து விவசாயிகள்

செப். 28, 2020

டெல்லி `இந்தியா கேட்' பகுதி அருகில் டிராக்டர் ஒன்றைத் தீயிட்டுக் கொளுத்தி, வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தது இந்திய அளவில் கவனம் பெற்றது. தொடர்ந்து, பஞ்சாப், ஹரியானா, உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயப் போராட்டங்கள் தீவிரமடைந்தன.

நவம்பர் 25, 2020

மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், டெல்லியில் போராட்டம் நடத்த முடிவு செய்து, `டெல்லி சலோ' போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்தனர். டிராக்டரில் டெல்லி நோக்கிப் பயணம் செய்து வந்தவர்களை போலீஸார் தண்ணீர், கண்ணீர் புகைக்குண்டு உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்த முயன்றனர். இந்தச் சம்பவத்தில் மூன்று விவசாயிகள் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டது.

நவ. 26 - டிச. 2, 2020

பஞ்சாப், ஹரியானா, உ.பி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லைகளான சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தினர். கூடாரங்கள் அமைத்து அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டுக்கொண்டே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிசம்பர் 1, 2020

``அமைதியான வழியில் உரிமைக்காகப் போராடுபவர்களுக்குக் கனடா என்றும் துணை நிற்கும்'' என்பதை வலியுறுத்தி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்தார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எம்.பி-க்கள் சிலரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவளித்தனர்.

அமெரிக்காவில் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டங்களில், குடியரசு, ஜனநாயகக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்குபெற்றனர்.

டிச. 2, 2020

தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் பலவும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பல போராட்டங்களை நடத்தின.

டிச. 3, 2020

பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு, விவசாயச் சங்கங்களை அழைத்திருந்தது. குறிப்பிட்ட விவசாயச் சங்கங்களை மட்டும் அழைத்திருந்த காரணத்தால், பேச்சுவார்த்தையில் எந்தவொரு விவசாயச் சங்கமும் கலந்துகொள்ளவில்லை.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதைக் குடியரசுத் தலைவரிடம் திருப்பியளித்தார்.

டிச. 4, 2020

விவசாயச் சங்கங்களோடு மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால், டிசம்பர் 8-ம் தேதி பாரத் பந்த்-க்கு அழைப்பு விடுத்தனர். இதே நாளில் சுற்றுச்சூழலியலாளர் பாபா சேவா சிங் ( Baba Sewa Singh) தனது பத்மஶ்ரீ விருதைத் திருப்பியளித்தார்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

டிச. 7, 2020

பஞ்சாப், ஹரியானாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் 35 பேர் அரசு வழங்கிய விருதுகளைத் திருப்பியளிக்க, குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, திருப்பி அனுப்பினர்.

டிச. 8, 2020

நாடு தழுவிய முழு அடைப்புக்கு எதிர்க்கட்சிகள், விவசாயச் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. பல்வேறு மாநிலங்களிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அதே நாளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, 35 விவசாயச் சங்கங்களோடு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

டிச. 9, 2020

`விவசாயப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எழுத்து வடிவில் உத்தரவாதம் தருகிறோம்' என்று மத்திய அரசு அறிவித்தது. அதை ஏற்க விவசாயச் சங்கங்கள் மறுத்தன.

டிச. 10, 2020

`இந்தச் சட்டங்கள் அம்பானி, அதானிக்குத்தான் பயன்படும்’ என்று குற்றம்சாட்டிவந்த விவசாயிகள், ஜியோ சிம்களை பயன்படுத்துவதை நிறுத்தினர். பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜியோ நிறுவன டவர்கள் சில சேதப்படுத்தப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிச. 17, 2020

உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், ``விவசாயிகள் ஒரு நோக்கத்தோடு அமைதியாகப் போராடுகின்றனர். அவர்கள் போராடுவதற்கு முழு உரிமை உண்டு'' என்றது. வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்ததை ஏற்க மறுத்தது மத்திய அரசு.

டிச. 20, 2020

விவசாயப் போராட்டங்கள் குறித்த செய்திகளைத் தொடர்ந்து பகிர்ந்துவந்த `கிசான் ஏக்தா மோர்ச்சா' என்ற ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கியது ஃபேஸ்புக் நிறுவனம். பா.ஜ.க-வுக்கு ஆதரவாக ஃபேஸ்புக் செயல்படுகிறது என்று நெட்டிசன்கள் கொதித்தெழுந்த பிறகு அந்தப் பக்கம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. ட்விட்டரில் விவசாயிகளுக்கு ஆதரவான ஹேஷ்டேக்குகள் பலமுறை இந்திய அளவில் டிரெண்டானது. விவசாயிகளுக்கு ஆதரவாகப் பதிவிடப்பட்ட கருத்துகள் பலவும், மத்திய அரசின் அழுத்தம் காரணமாக நீக்கப்பட்டன.

டிச. 21, 2020

விவசாயிகள் சுழற்சிமுறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது தினமும் 11 விவசாயிகள் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

டிச. 30, 2020

6-ம் கட்ட பேச்சுவார்த்தையில் மின்கட்டண விவகாரம், வேளாண் கழிவுகள் எரிப்பதற்கு அபராதம் ஆகிய பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுதல், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வமான உத்தரவாதம் ஆகிய இரண்டு கோரிக்கைகள் தொடர்பாக முடிவுகள் எட்டப்படவில்லை.

ரிஹானா
ரிஹானா

ஜனவரி 7, 2020

குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தவிருப்பதாக அறிவித்த விவசாயிகள், அதற்கான முன்னோட்டத்தை டெல்லியின் நான்கு எல்லைகளிலும் நடத்தினர். ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் ஒத்திகை பார்த்தனர். ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

ஜன. 26, 2021

குடியரசு தினத்தன்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தியபோது, விவசாயிகளில் ஒரு பகுதியினர் அனுமதிக்கப்பட்ட பாதைகளிலிருந்து விலகி செங்கோட்டையை நோக்கிப் பயணம் செய்ய, வன்முறை வெடித்தது. போலீஸாருக்கும் பாதை விலகிச் சென்ற விவசாயிகளுக்கும் மோதல் ஏற்பட்டு கலவரம் பெரிதானது.

``பா.ஜ.க-வுக்கு நெருக்கமானவரான நடிகர் தீப் சித்துதான் கலவரத்துக்குக் காரணம்; எங்களுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்புமில்லை.''
விவசாய சங்கங்கள் அளித்த விளக்கம்
ரிஹானா பற்றவைத்த தீ; கிரிக்கெட்டர்களுக்கு டாப்ஸியின் பதிலடி; பிசிசிஐ அழுத்தம் - என்ன நடக்கிறது?

பிப்ரவரி 2, 2021 - டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகப் பாப் பாடகி ரிஹானா ட்வீட் செய்ய, உலக கவனம்பெற்றது விவசாயிகள் போராட்டம். இதையடுத்து, `இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னைகளில் யாரும் தலையிடக் கூடாது' என்று பொருள்படும்படி சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பலரும் ட்வீட் செய்தனர். இதனால் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக நெட்டிசன்கள் கொதித்தெழுந்தனர்.

பிப்ரவரி 3, 2021 - சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்ததை அடுத்து, சதி மற்றும் இரு தரப்பினரிடையே பகைமையை உண்டாக்கியது ஆகிய பிரிவுகளில், அவர்மீது வழக்கு பதிந்தது டெல்லி காவல்துறை.

மார்ச் - அக்டோபர், 2021 - கொரோனா இரண்டாம் அலை, அறுவடைக் காலம் உள்ளிட்ட சில காரணங்களால் டெல்லி எல்லைகளில் மிகக் குறைந்த அளவிலான விவசாயிகளே போராடிவந்தனர்.

அக்டோபர் 3, 2021 - உ.பி-யின் லக்கிம்பூர் மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் பேரணியில் பா.ஜ.க-வினருக்குச் சொந்தமான கார் விவசாயிகள்மீது ஏறியதில் எட்டு விவசாயிகளும், ஒரு பத்திரிகையாளரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கைதுசெய்யப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்தாகும் வரை போராட்டம் தொடரும்!
விவசாயிகள்
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நவம்பர் முதல் வாரம், 2021 - ``மத்திய அரசுக்கு நவம்பர் 26-ம் தேதி வரைதான் அவகாசம்... நவம்பர் 27-ம் தேதி முதல் மீண்டும் டிராக்டர்களில் டெல்லி எல்லைகளை நோக்கி விவசாயிகள் படையெடுக்கத் தொடங்குவார்கள். எங்கள் போராட்டத்தை வலுப்படுத்துவார்கள்'' என்று எச்சரித்திருந்தன விவசாயச் சங்கங்கள்.

நவம்பர் 19, 2021 - ``விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. வேளாண் சட்டங்களின் நலன்களை விவசாயிகளின் ஒரு பகுதியினருக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. எனவே, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருக்கிறோம். ஓராண்டுக்கு மேலாகப் போராடிவரும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தைக் கைவிட வேண்டும்'' என்று சொல்லி புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக அறிவித்தார் பிரதமர் மோடி

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

போராட்டக் களத்தில் உயிர்த் தியாகம் செய்த விவசாயிகள்!

இதுவரையிலும், கடும் குளிர், உடல்நலக் கோளாறு, சாலை விபத்து, போலீஸாருடனான மோதல், தற்கொலை, கலவரம் உள்ளிட்டவற்றின் காரணமாக 700-க்கும் அதிகமான விவசாயிகள் போராட்டக் களத்தில் உயிரிழந்ததாக விவசாயிகள் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு