Published:Updated:

எம்.எல்.ஏ-க்கள் பதவி நீக்கம்... இந்த 11 பேரும் நொந்த 18 பேரும்! #Timeline

11 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு
11 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு

11 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கை நேற்று முன்தினம் முடித்துவைத்தது உச்சநீதிமன்றம்... அந்த வழக்கு கடந்து வந்த பாதை பற்றிய டைம்லைன் இது!

டிசம்பர் 5, 2016

முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அடுத்த சில மணி நேரங்களில், தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.

டிசம்பர் 31, 2016

அ.தி.மு.க-வின் நியமனப் பொதுச் செயலாளராகப் பதவியேற்றுக் கொண்டார் சசிகலா.

சசிகலா அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவி ஏற்ற நிகழ்வில்...
சசிகலா அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவி ஏற்ற நிகழ்வில்...
பிப்ரவரி 4, 2017

சசிகலா முதலமைச்சராகப் பதவியேற்க வேண்டுமென்ற நிர்பந்தத்தால் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.

பிப்ரவரி 7, 2017

பதவியை ராஜினாமா செய்த பின், ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்து பரபரப்பைக் கிளப்பினார் ஓ.பி.எஸ். தியானத்துக்குப் பின், ``என்னைக் கட்டாயப்படுத்தியதால்தான் ராஜினாமா செய்யும் இக்கட்டான சூழலுக்கு ஆளாக்கப்பட்டேன். தர்மயுத்தத்துக்கு நான் தயார்" என்று பேட்டியளித்தார். பதிலுக்கு சசிகலாவும், ``யாரையும் நிர்பந்தப்படுத்தி எதுவும் நடக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டுக்குப் பின்னால் தி.மு.க இருக்கிறது" என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

ஜெயலலிதா சமாதியில் ஓ.பி.எஸ் தியானம்
ஜெயலலிதா சமாதியில் ஓ.பி.எஸ் தியானம்
பிப்ரவரி 14, 2017

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவருக்குக் கீழமை நீதிமன்றம் கொடுத்திருந்த நான்காண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். சிறைக்குச் செல்லும் முன்பு சட்டமன்றக் குழுத்தலைவராகவும் தமிழக முதல்வராகவும் எடப்பாடி பழனிசாமியைத் தேர்வு செய்தார் சசிகலா.

பிப்ரவரி 18, 2017

எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. `ரகசிய வாக்கெடுப்பு வேண்டும்' என ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் தி.மு.க-வும் கோரிக்கை விடுத்தன. அதற்குச் சபாநாயகர் மறுக்க... பெரும் அமளியைச் சந்தித்தது பேரவை. தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் 122 பேர் எடப்பாடி அரசுக்கு ஆதரவு தெரிவிக்க, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது எடப்பாடி தலைமையிலான அரசு.

எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்கு!
ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவான 11 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி அரசை எதிர்த்து வாக்களித்தனர்.
ஏப்ரல் 18, 2017

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் மூத்த அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ``கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் தலையீடு இன்றி நடக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. டி.டி.வி.தினகரனை ஒதுக்கிவிட்டு, எந்தத் தலையீடும் இல்லாமல் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்துவோம்" என்று கூறி பரபரப்பைக் கிளப்பினார்.

ஆகஸ்ட் 17, 2017

ஆறு மாதங்களில் பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணிகள் இணைந்தன. அப்போதிருந்த ஆளுநர் வித்யாசாகர்ராவ், இருவரையும் கைகோத்து வைத்தார். ஓ.பி.எஸ் துணை முதல்வரானார்.

ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்
ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்
ஆகஸ்ட் 27, 2017

எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்ட 11 பேரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு தொடுத்தது. இதே கோரிக்கையை முன் வைத்து தினகரன் தரப்பும் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 18, 2017

தமிழகச் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் எண்ணிக்கை எடப்பாடி அரசுக்கு இல்லாத சூழல் இருந்தது. பெரும்பான்மையைக் காட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பிருக்கிறது என நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு வாதிட்டு வந்த நேரத்தில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்து அதை உறுதி செய்தார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால்.

அக்டோபர் 25, 2018

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தினகரன் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. `18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்' என எடப்பாடி அரசுக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.

ஏப்ரல் 27, 2018

11 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரித்த இந்திரா பானர்ஜி தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு, ``தகுதி நீக்க விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவர் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில், அவரது அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடவோ, முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தவோ முடியாது" என்று தீர்ப்பளித்தது. மேலும், சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பிக்கும் உத்தரவு நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டது என்று கூறிய நீதிபதிகள், 11 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிய எல்லா வழக்குகளையும் தள்ளுபடி செய்தனர்.

சட்ட பேரவைத் தலைவரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடவோ, முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தவோ முடியாது.
சென்னை உயர் நீதிமன்றம்
அக்டோபர் 30, 2018

உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது தி.மு.க.

`நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை குறையும்!' - 11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கின் தீர்ப்பு சொல்வது என்ன?
பிப்ரவரி 4, 2020

விரைவில் விசாரிக்க வேண்டுமெனப் பல மாதங்களாக உச்ச நீதிமன்றத்தில், தி.மு.க-வினரால் கோரிக்கை முன் வைக்கப்பட்டு வந்த 11 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு, ஒரு வழியாக விசாரணைக்கு வந்தது.

11 பேரைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு மீது 3 வருடங்களாக முடிவெடுக்காமல் சபாநாயகர் தாமதம் காட்டியது ஏன்? தி.மு.க அளித்த மனு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து விரிவாகச் சட்டமன்றச் செயலாளர் பதிலளிக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றம்

மேற்கண்டவற்றை உத்தரவிட்டு வழக்கைப் பிப்ரவரி 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.

பிப்ரவரி 14, 2020

தமிழக சபாநாயகர் தரப்பில், ``சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கும் நடவடிக்கைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டோம். இந்த விவகாரத்தில் விரைவில் ஒரு தீர்வுகாணப்படும்" என்ற வாதம் முன் வைக்கப்பட்டது. சபாநாயகர் தரப்பு வாதத்தை ஏற்று, ``நடவடிக்கை எடுக்க வேண்டுமெனச் சபாநாயகருக்கு எந்த காலக்கெடுவும் விதிக்க முடியாது. மேலும், சபாநாயகர் சட்டப்படி செயல்பட்டு இந்த விவகாரத்தில் முடிவெடுப்பார் என நம்புகிறோம்" என்று கூறி வழக்கை முடித்து வைத்தது எஸ்.ஏ பாப்டே தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு.

அடுத்த கட்டுரைக்கு