Published:Updated:

உட்கட்சி குஸ்தியில் திமுக; அதிருப்தி வாக்குகளைக் குறிவைக்கும் அதிமுக! - திண்டிவனம் கள நிலவரம்?!

செஞ்சி மஸ்தான், சி.வி.சண்முகம்

அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க என திண்டிவனம் நகராட்சித் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவிவருகிறது.

உட்கட்சி குஸ்தியில் திமுக; அதிருப்தி வாக்குகளைக் குறிவைக்கும் அதிமுக! - திண்டிவனம் கள நிலவரம்?!

அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க என திண்டிவனம் நகராட்சித் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவிவருகிறது.

Published:Updated:
செஞ்சி மஸ்தான், சி.வி.சண்முகம்

விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை இறுதிசெய்து அறிவிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றன. பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகிய இரு பெரும்புள்ளிகள் வசிக்கும் முக்கியப் பகுதியாகத் திகழ்கிறது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் நகராட்சி. இந்தப் பகுதியில் பலம் பொருந்தி காணப்படும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க போன்ற அரசியல் கட்சிகளின் போட்டிக்குப் பஞ்சமில்லாத நகராட்சி. 27,990 ஆண் வாக்காளர்கள், 30,441 பெண் வாக்காளர்கள், இரண்டு திருநங்கைகள் என மொத்தம் 58,433 வாக்காளர்களைக்கொண்ட இந்த நகராட்சி, மொத்தம் 33 வார்டுகளை உள்ளடக்கியது.

திண்டிவனம் நகராட்சி அலுவலகம்
திண்டிவனம் நகராட்சி அலுவலகம்
Facebook

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நகராட்சியின் சேர்மன் பதவி இந்த முறை பெண்களுக்கு (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக இருக்கும் சி.வி.சண்முகம், வார்டு கவுன்சிலராகப் போட்டியிட விருப்ப மனு அளித்த தொண்டர்களிடம் நேர்காணல் நடத்தியபோது, தேர்தலில் செலவு செய்வதற்குத் தயாராக இருக்கும் வேட்பாளர்களைத்தான் இறுதிசெய்திருந்தாராம். பா.ஜ.க தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பதற்கு முன்தினமே விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், விழுப்புரம் நகராட்சிகளில் கூட்டணிக் கட்சியினருக்கு இடமளிக்காமல் தங்கள் கட்சி வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்திருந்தது அ.தி.மு.க தலைமை. திண்டிவனத்தில், 20-வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நகரச் செயலாளர் தீனதயாளனின் மனைவி கஸ்தூரியே சேர்மன் வேட்பாளராக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். தான் வசிக்கும் பகுதி என்பதால் திண்டிவனம் நகராட்சி சேர்மன் பதவியை பிடிப்பதற்கு மும்முரமாகச் செயல்பட்டுவருகிறாராம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் என்று அறிவித்து தராமல் இருப்பது, பொங்கல் தொகுப்பு பொருள்களின் குளறுபடிகள் என தி.மு.க மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை வாக்குகளாகக் கவர்ந்து இழுக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது அ.தி.மு.க தரப்பு. குறிப்பாக சுமார் 14 வார்டுகளில் வசிக்கும் குடிசைப் பகுதி மக்களை மையப்படுத்தி காய்நகர்த்திவருகின்றனர் அ.தி.மு.க-வினர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திண்டிவனம் பகுதியை எளிதில் கைப்பற்றிவிட்டதால் அதே வெற்றி முனைப்போடு, இந்தத் தேர்தல் பணிகளையும் அமைதியாகச் செய்துவருகிறார்கள் அ.தி.மு.க-வினர்.

``வாக்குச் சேகரிப்பு இறுதிக்கட்டத்தில் வேட்பாளர்களுக்கு தேவையான வைட்டமின் உதவிகளை மாவட்டச் செயலாளர் சி.வி.சண்முகம் கட்டாயம் செய்வார்" என்கிறார்கள் மாவட்டத்து முக்கியப்புள்ளிகள்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

தி.மு.க-வைப் பொறுத்தவரை விழுப்புரத்தில், மத்திய மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்டம் என இரண்டாகப் பிரிந்து செயல்பட்டுவருகிறது. மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள தி.மு.க தலைமை, வடக்கு மாவட்டத்தில் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருப்பதற்குக் காரணம் உட்கட்சிக்குள் நடக்கும் குஸ்திதான் என்கின்றனர் அந்தக் கட்சியின் உடன்பிறப்புகள் சிலர். அமைச்சரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான செஞ்சி மஸ்தானின் அதிகாரமே திண்டிவனம் வார்டு கவுன்சிலர் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும் நடந்துள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் அவர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`வார்டு கவுன்சிலர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனில், கமிஷன், தேர்தல் செலவு என தனித்தனியே வைட்டமின்களைக் காட்ட வேண்டுமாம். அதற்குத் தலையசைத்தவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்பட்டதாம்’ என்கிறார்கள். தீவிர விசுவாசிகள், குற்றப் பின்னணிகொண்டவர்கள், மாற்றுக் கட்சியிலிருந்து விலகி அண்மையில் தி.மு.க-வில் இணைந்தவர்களுக்கே சீட் ஒதுக்கப்பட்டதாம். குறிப்பாக, திண்டிவனம் அருகே 'பசி' எனத் தொடங்கும் ஊராட்சியில்... அண்மையில் நடந்து முடிந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற நபர், தற்போது தி.மு.க-வில் இணைந்துள்ளாராம். அவருக்கும், திண்டிவனம் நகராட்சியில் வார்டு கவுன்சிலராக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதாம். இதனால் கொதித்துப்போயிருக்கிறார்கள் மூத்த நிர்வாகிகள்.

செஞ்சி கே.எஸ்.மஸ்தான்
செஞ்சி கே.எஸ்.மஸ்தான்

திண்டிவனம் நகராட்சி சேர்மன் பதவிக்காக, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன் மனைவிக்கும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேதுநாதன் மனைவிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதை இறுதி செய்வதிலும் வைட்டமின் `ப’ விளையாடும் என்கிறார்கள்.

இதற்கிடையே, திண்டிவனம் நகரச் செயலாளராக இருக்கும் கபிலன், தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் சீட் கேட்டும் வழங்கப்படவில்லையாம். அதனால் விரக்தியில் இருந்த நகரச் செயலாளர் தரப்பு, கடந்த 31.01.2022 அன்று மதியம் தனியார் மண்டபம் ஒன்றில் மாவட்டச் செயலாளருக்கு எதிராக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்களாம். இந்தச் சம்பவமும் கட்சிக்குள் பூசலை ஏற்படுத்தியுள்ளது.

என்னதான் உட்கட்சிக்குள் பூசல் நிலவினாலும், ஆளுங்கட்சி என்ற பிம்பத்தோடும், `வைட்டமின்’ நம்பிக்கையோடும் திண்டிவனத்தில் களம் இறங்குகின்றனர் தி.மு.க-வினர்.

பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

பா.ம.க தரப்பிலோ, வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி இறுதி நிலையை எட்டியிருக்கிறதாம். திண்டிவனம் நகரத்தில் சுமார் ஐந்து வார்டுகளில் நிறைந்திருக்கும் சமூக மக்கள், ஏற்கெனவே தனித்து நின்றபோது கணிசமான வார்டுகளைக் கைப்பற்றிய நம்பிக்கையோடும் இம்முறையும் களம்காணவிருக்கிறார்களாம். பாமக நிறுவனரின் ஆலோசனைப்படி, திண்ணை பிரசாரத்தையும் செயல்படுத்தவிருக்கிறார்களாம். இம்முறை தங்களது பலத்தை நிரூபிக்க சாத்தியமான முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்கின்றன்வாம் தைலாபுரம் தோட்டத்து தரப்பு.

அ.தி.மு.க., பா.ம.க., தி.மு.க., என மும்முனைப் போட்டியில் இருக்கும் திண்டிவனம் நகராட்சிப் பதவிகளைக் கைப்பற்றப்போவது யார் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism