Published:Updated:

`சிப்காட் திட்டம் ரத்து!’ - அமைச்சருக்கு 27 வகை தானியங்கள் பரிசளித்த திருமங்கலம் விவசாயிகள்

அமைச்சருக்கு 27 வகை தானியங்களில் பரிசு
அமைச்சருக்கு 27 வகை தானியங்களில் பரிசு

சிப்காட் அறிவிப்பை ரத்து செய்து அரசாணை வெளியிட்டதால், திருமங்கலம் தொகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

தி.மு.க ஆட்சியில் அறிவித்த சிவரக்கோட்டை சிப்காட் திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனால், அந்தப் பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள். அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு 27 வகையான தானியங்களை அந்தப் பகுதி விவசாயிகள் பரிசாக வழங்கினர்.

அமைச்சருடன் விவசாயிகள்
அமைச்சருடன் விவசாயிகள்

கடந்த 2009 தி.மு.க ஆட்சிக்காலத்தில் சிவரக்கோட்டை பகுதியில் சிப்காட் அமைக்கும் திட்டத்தைத் தொடங்கி 1,478 ஏக்கர் பரப்பளவில் நிலங்களைக் கையகப்படுத்தினர். இந்தத் திட்டத்தை எதிர்த்து அந்தப் பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்தனர். ஆனாலும் அந்தத் திட்டம் கைவிடப்படவில்லை.

அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் அந்தத் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. ஆனாலும், சிப்காட் தொடங்குவதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் முதலமைச்சர் எடப்பாடியிடம் வலியுறுத்திவந்ததாகச் சொல்லப்படுகிறது.

அமைச்சருடன் விவசாயிகள்
அமைச்சருடன் விவசாயிகள்

இந்தநிலையில், கடந்த 21-ம் தேதி சிப்காட் திட்டத்துக்கான அரசாணை ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. இதை அந்தப் பகுதி மக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். சிப்காட் திட்டம் ரத்து செய்யப்பட்ட ஆணையை அந்தப் பகுதி மக்களிடம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று கலந்துகொண்டார்.

இந்தப் பகுதி விவசாயம் செய்ய முடியாத வறண்ட பகுதி என்று குறிப்பிட்டுத்தான் முந்தைய ஆட்சியில் நிலத்தைக் கையப்படுத்தினார்கள். ஆனால், இங்கு 27 வகையான தானியங்கள் விளைவிக்கப்படுகின்றன என்பதை இந்தப் பகுதி விவசாயிகள் எடுத்துச் சொல்லியும் அப்போதைய அரசு ஒத்துக்கொள்ளவில்லை. இதை நினைவுபடுத்தும்விதமாக 27 வகையான தானியங்களை சிவரக்கோட்டைப் பகுதி விவசாயிகள் தலைமையிலான விவசாய சங்கத்தினர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்குப் பரிசாக வழங்கினர்.

அமைச்சருக்கு 27 வகை தானியங்களில் பரிசு
அமைச்சருக்கு 27 வகை தானியங்களில் பரிசு

விவசாயிகளிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``தி.மு.க ஆட்சியின்போது விவசாய நிலங்களில் தொழிற்பேட்டை அமைக்க அரசாணை வெளியிட்டு இந்தப் பகுதியில் 1,478 ஏக்கர் நிலங்களை கையைகப்படுத்தினார்கள். கரிசல்மண் நிலமான இந்தப் பகுதியில் வரகு, கேழ்வரகு, சாமை, குதிரைவாலி, கம்பு, மக்காச்சோளம், ஆமணக்கு, அவுரி,பருத்தி, நித்தியகல்யாணி, உளுந்து, துவரை, சிவப்புச் சோளம், பாசிப்பருப்பு, மொச்சை, தட்டைப்பயறு, கொள்ளு, சீனி அவரை உட்பட 27 வகையான சிறுதானியங்கள் மூன்று போகம் விளையும் பகுதியாக இருந்துவருகிறது.

`வீட்டை விற்பேன்’ செல்லூர் ராஜு; `வாழும் வள்ளல்’ உதயகுமார் - மதுரையைக் கதிகலக்கும் போஸ்டர்கள்

சிவரக்கோட்டை உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் 15,000 மக்கள் விவசாயத்தால் பயனடைந்துவந்தனர். மேலும் இரண்டு லட்சம் கால்நடைகள் வைத்திருக்கும் மக்களும் இதன் மூலம் பயன்பெற்றுவந்தனர். அப்படிப்பட்ட நிலங்களில் சிப்காட் அமைத்தால், தங்கள் வாழ்வாதாரம் பறிபோகும் என்று இந்தப் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இவர்களுக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குரல் கொடுத்தார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

அமைச்சருடன் விவசாயிகள்
அமைச்சருடன் விவசாயிகள்

ஆனாலும், அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற உங்களின் நீண்ட நாள் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்துக்கு நான் எடுத்துச் சென்றேன். உடனடியாக ரத்து செய்து கடந்த 21-ம் தேதி அரசாணை வெளியிட்டார்.

இன்றைக்கு விவசாயத்தைக் காக்கும் ஒரே அரசாக அம்மா அரசு இருக்கிறது என்பததை இதன் மூலம் நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யாமல் கிராமசபைக் கூட்டம் என்ற பெயரில் கூட்டம் நடத்தி ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார்.

அமைச்சருடன் விவசாயிகள்
அமைச்சருடன் விவசாயிகள்

கிராமசபைக் கூட்டம் என்றால் ஊராட்சித் தலைவர்தான் கூட்ட வேண்டும். நான் நினைத்தால்கூட கூட்ட முடியாது. கிராமசபைக் கூட்டம் நடத்த இப்போது என்ன அவசியம் ஏற்பட்டிருக்கிறது... தி.மு.க ஆட்சியில் இந்த சிப்காட் திட்டம்போல் விவசாயிகளை அழிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டம் வரை பல பாதகமான திட்டங்களுக்குக் கையெழுத்திட்டார்கள்.

இன்று அதையெல்லாம் மறைத்து, பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைப் பொய் பேசுகிறார் ஸ்டாலின். இதையெல்லாம் விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த சிப்காட் திட்டத்தை ரத்து செய்து மட்டுமல்ல, காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, இன்றைக்கு ஒட்டுமொத்த விவசாய மக்களைக் காக்கும் அம்மா வழியில் நடக்கும் அரசாக இந்த அரசு செயல்பட்டுவருகிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு