Published:Updated:

அ.தி.மு.க கடும் அதிருப்தி - நெல்லையில் பா.ஜ.க தேர்தல் அலுவலகம் திறப்பு நிறுத்திவைப்பு!

பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன்
பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன்

`தமிழகம் முழுவதுமுள்ள 234 தொகுதிகளிலும் பா.ஜ.க சார்பாக பிரசார வேலைகளைத் தொடங்கிவிட்டோம். சட்டமன்றத்துக்குள் பா.ஜ.க சார்பாக இரட்டை இலக்கத்தில் எம்.எல்.ஏ-க்கள் செல்வார்கள்’ என்று மாநிலத் தலைவர் முருகன் தெரிவித்தார்.

தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் நெல்லை தொகுதியிலுள்ள பூத் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்தார். முன்னதாக 400 பேர் இரு சக்கர வாகனத்தில் பங்கேற்ற பேரணியை தச்சநல்லூரில் தொடங்கிவைத்தார். பின்னர், நெல்லை சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நெல்லை சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் காரியாலயத்தை திறந்துவைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நெல்லையில் இருசக்கர வாகனப் பேரணி
நெல்லையில் இருசக்கர வாகனப் பேரணி

கூட்டணிக்கான தொகுதி ஒதுக்கீடு முடிவடையவில்லை. யாருக்கு எந்தத் தொகுதி ஒதுக்கப்படும் என்பதற்கான எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், பா.ஜ.க-வினர் தாங்களாகவே நெல்லை தொகுதியைக் குறிவைத்து தேர்தல் அலுவலகம் திறக்க அ.தி.மு.க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், கடைசி நேரத்தில் தேர்தல் காரியாலயம் திறப்பு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தமிழகம் முழுவதும் இருக்கும் 234 தொகுதிகளிலும் நாங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டோம். மதுரை, நாகர்கோவில் எனப் பல்வேறு இடங்களிலும் எங்களது தேர்தல் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், இன்று நெல்லையில் பணிகளைத் தொடங்கியிருக்கிறோம்.

திறக்கப்படவிருந்த தேர்தல் காரியாலயம்
திறக்கப்படவிருந்த தேர்தல் காரியாலயம்

தேர்தல் பிரசாரப் பணியின் ஒரு பகுதியாக மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்தினோம். அடுத்து பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாட்டையும் நடத்துகிறோம். தேசியத் தலைவர்களும் அடுத்தடுத்து தமிழகத்துக்கு வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவிருக்கின்றனர். நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் தேசியத் தலைவர்கள் வருவார்கள்.

பிரதமர் மோடி வரும் 25-ம் தேதி கோவைக்கு வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவிருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதே நாளில் விழுப்புரத்தில் நடக்கும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார். மத்திய அமைச்சர்கள், தேசியத் தலைவர்கள் பலரும் பிரசாரத்துக்கு வருவார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வெற்றியைக் கைப்பற்றுவோம்.

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு

தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக, தேர்தலுக்குப் பின்னர் அகில இந்தியத் தலைமையே முடிவு செய்யும். புதுச்சேரியில் அவர்கள் கட்சியின் எம்.எல்.ஏ-க்களே ஆட்சியின் செயல்பாடுகள் பிடிக்காமல் ராஜினாமா செய்ததால் ஆட்சி கவிழ்ந்திருக்கிறது. இதில் வேறு யாரையும் குற்றம் சொல்ல முடியாது.

`முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் தெளிவாக இருக்கிறோம்!’ - பா.ஜ.க மாநில தலைவர் எல். முருகன்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் விரைவில் தொடங்கும். அது தேசிய அளவிலான மருத்துவமனை என்பதாலேயே வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

கடந்த ஐந்து வருடங்களாக காவிரியிலிருந்து எந்தப் பிரச்னையும் இல்லாமல் தண்ணீர் கிடைத்துவருகிறது. அதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் எங்களின் தேசியத் தலைமையிடம் பேசி தமிழகத்துக்கு நல்லது கிடைக்க தமிழக பாரதிய ஜனதா கட்சி நிச்சயமாகப் பாடுபடும்” என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு